திருப்பதி சென்ற காஞ்சிபுரம் பட்டுச்சேலை!

கண்ணைக் கவரும் காஞ்சிப் பட்டுச் சேலைகளில் விரும்பும் தெய்வங்களின் வடிவங்களை  வடிவமைத்துத் தருகின்றனர் ஓர் தம்பதி.  இந்த ஸ்பெஷல் பட்டுச் சேலைகள் காண்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது.
திருப்பதி சென்ற காஞ்சிபுரம் பட்டுச்சேலை!

கண்ணைக் கவரும் காஞ்சிப் பட்டுச் சேலைகளில் விரும்பும் தெய்வங்களின் வடிவங்களை  வடிவமைத்துத் தருகின்றனர் ஓர் தம்பதி.  இந்த ஸ்பெஷல் பட்டுச் சேலைகள் காண்போரை மெய் சிலிர்க்க வைக்கிறது.

பட்டுச் சேலைகளை வாங்கி உடுத்திக் கொள்வது என்பது வெறும் அந்தஸ்துக்கான வெளிப்பாடு மட்டுமல்ல; அது தமிழ்க் கலாசாரத்தின் வெளிப்பாடு . பல ஊர்களில் தயாரிக்கப்பட்டாலும் காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள் தனித்தன்மை வாய்ந்தது.  மனம் கவரும் வகையில் தன்மையிலும், மென்மையிலும் காஞ்சிபுரம் பட்டுப் புடவைக்கு நிகர் வேறொன்றுமில்லை.

இந்தச் சேலைகளில் கோயில் சிற்பங்களின் அற்புதங்களை,அடையாளங்களை அப்படியே பதிவு செய்தால் எப்படி இருக்கும்?

இந்த அற்புதமான சேவையில் காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தோப்புத் தெருவைச் சேர்ந்த பி.குமாரவேல், அவரது மனைவி கு.கலையரசி ஆகிய இருவரும் இணைந்து ஈடுபட்டுவருகின்றனர். இருவரும் கணினி மூலம் தெய்வங்களின் தோற்றங்களை வடிவமைத்து,  பின்னர் பட்டுச்சேலை உற்பத்தி செய்யும்போது சேலையில் நெய்து தருகின்றனர்.

இதுகுறித்து குமாரவேலு கூறியதாவது:

""எனது பெற்றோர் நெசவுத் தொழிலாளர்கள். பட்டுச் சேலைகளைத் தயாரித்து விற்பனைக்கு கடைகளுக்கு கொடுத்து வந்தனர். அவர்களுக்கு நான் உதவியாக இருந்தேன்.

அப்போது என் மனைவி கலையரசி,   மணமக்களின் உருவங்களைப் பதிவு செய்து பட்டுச் சேலைகளை கொடுக்கலாமே என்று யோசனை தெரிவித்தார்.

முதல்முதலாக பட்டுச்சேலைகளில் மணமக்களின் தோற்றங்களைப் பதிவு செய்தோம்.  பாராட்டுகள் குவிந்தன.

அப்போது ஒருவர்,  "காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை சேலையில் வடிவமைத்து தர முடியுமா'  என்று கேட்டார். அதையும் செய்து கொடுத்தோம்.

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழாவின்போது,  அத்திவரதருக்கு அணிவிப்பதற்காக பத்து முழத்தில் பட்டு வேட்டியும், 6 முழத்தில் அங்க வஸ்திரமும் செய்தோம்.  வேட்டிக் கரையிலும், அங்க வஸ்திரத்திலும் மொத்தம் 48 அத்திவரதர் உருவங்களை வடிவமைத்து பெருமாளுக்கு அணிவித்து அழகு பார்த்தோம். 

இதனைத் தொடர்ந்து, 33 முழம் உள்ள பட்டுச்சேலையில் உடல் முழுவதும் திருப்பாவையில் உள்ள 30 பாசுரங்களையும் பதிவு செய்து ஒரு சேலை தயாரித்து ஸ்ரீவில்லிபுத்துர் ஆண்டாளுக்கு கொடுத்தோம்.

சேலை முந்தானையில் ஆண்டாள் உருவமும்,சேலையின் பார்டரில் நாமம், சங்குச்சக்கரமும் இருக்கும். 

வீடுகளில் வைத்துக் கொள்வதற்காக பட்டுச்சேலையில் 40 அங்குலம் அகலம், 50 அங்குலம் உயரத்தில் மகாலட்சுமி இருப்பது போன்று ஏராளமான பட்டுச்சேலைகளைத் தயாரித்துள்ளோம்.

காஞ்சி சங்கராச்சாரியார் மகா பெரியவர் அன்னை காமாட்சியை வணங்குதல், திருமலை திருப்பதி வெங்கடாசலபதி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆகியன சேலையின் உடல் முழுவதும் இருப்பது போன்றும் பட்டுச்சேலைகளை வடிவமைத்திருக்கிறோம். 

கடந்த ஆண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளன்று,  அவருக்கு வழங்குவதற்காக முக்கிய பிரமுகர் கேட்டுக் கொண்டதன்படி முதல்வருக்கு ஒரு பட்டு வேட்டியும்,அவரது மனைவி துர்கா ஸ்டாலினுக்கு ஒரு பட்டுச் சேலையும் தயாரித்தோம்.  துர்கா ஸ்டாலின் எழுதி வெளியிட்ட "நானும் அவரும்'  என்ற புத்தகத்தின் அட்டைப்படம் பட்டுச் சேலையிலும்,பட்டு வேட்டியின் கரையில் "உங்களில் ஒருவன் நான்'  என்று எழுதப்பட்ட வாசகத்தையும் வடிவமைத்துக் கொடுத்தோம்'' என்றார்.

இதன்பின்னர் கலையரசி கூறியதாவது:

""கணினியில் வடிவமைத்து பின்னர் சேலையில் நெய்வது ஆகியனவற்றுக்காக ஒரு சேலை வடிவமைக்க குறைந்தபட்சம் இரு மாதங்களாகும். முன்கூட்டியே சொன்னால்தான் குறிப்பிட்ட நேரத்தில் செய்து கொடுக்க முடியும். 

எங்களிடம் 24 பேர் பணியாற்றுகின்றனர். சேலைகளில் தெய்வங்களையும், மனித உருவங்களையும் எப்படி வடிவமைப்பது என்று காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில் கார்த்திக் என்பவரிடமும்,நாங்கள் வசிக்கும் தெருவில் உள்ள ராஜா என்பவரிடமும் வடிவமைப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டதால் தான் எங்களால் பட்டுச்சேலைகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திட முடிகிறது'' என்றார்.

427 பெருமாளின் முகங்கள், 27 ஜோடி யானைகள், ஆதிசேஷன் மீது ரங்கநாதர் மகாலட்சுமி அமர்ந்திருக்கும் சேலையை விரதம் இருந்து 8 நாள்களில், 4 நெசவாளர்கள் துணையுடன் நெய்த புடவை,  திருமலை திருப்பதி பிரம்மோத்ஸவத்துக்காக, நெய்துள்ளனர். பக்தர் ஒருவரின் ஆர்டரின்பேரில் இந்தச் சேலை நெய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com