சாதிக்க வேண்டியது இருக்கிறது...!

"சாதிக்க வேண்டியது இன்னமும் நிறைய இருக்கிறது''  என்கிறார் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட காஞ்சாம்புரத்தைச் சேர்ந்த முனைவர் அ.நசீமா. 
சாதிக்க வேண்டியது இருக்கிறது...!

"சாதிக்க வேண்டியது இன்னமும் நிறைய இருக்கிறது''  என்கிறார் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட காஞ்சாம்புரத்தைச் சேர்ந்த முனைவர் அ.நசீமா. 

அகில இந்திய வானொலி நிலையத்தில் 30ஆண்டுகளுக்கும் மேலாக செய்தி வாசிப்பாளர்,  இசுலாமிய-கர்நாடக இசைப்பாடகர்,  உலக நாடுகள் பலவற்றிலும் சீறாப்புராணத்தை கதாகாலட்சேபம முறையில் பரப்பியவர், ஊடகப் பயிற்றுவிப்பாளர், கல்லூரிப் பேராசிரியர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.... என்று பன்முகத் தன்மையைக் கொண்டவர்.

இவருடன் ஓர் சந்திப்பு:

உங்கள் பள்ளி, கல்லூரி வாழ்க்கை குறித்து கூறுங்களேன்?

செயின்ட் ஹெலன்ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை படித்தேன். பள்ளியில் படிக்கும்போதே சென்னை தொலைக்காட்சியில் கண்
மணிப் பூங்கா, மழலையர் இன்பம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனுபவம் உண்டு. சிறுவயதிலேயே பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று, பரிசு பெற்றுள்ளேன். ஏழாம் வகுப்பு படிக்கும்போது, ம.பொ.சி.யிடம் ரூ.ஆயிரம் பரிசு பெற்றுள்ளேன்.

செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலைக் கல்வியை முடித்தேன். சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் பயின்றேன். கல்லூரியில் மாணவியர் பேரவைத் தலைவியாக இருந்தேன். பல்வேறு பேச்சு, நாடகப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றுள்ளேன்.

இதே நேரத்தில்,  தமிழில் முனைவர் பட்டம் வரை பயின்றேன்.  எம்.பி.ஏ. பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றேன்.

2008-ஆம் ஆண்டு முதல் 2017 வரையில், முஹம்மத் சதக் கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றினேன். கல்லூரியில் பணிபுரிந்த காலத்தில்  மாணவர்களைப் போட்டிகளுக்குத் தயார் செய்து, பங்கேற்கச் செய்தமைக்காகப் பல்வேறு பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளேன்.

உங்களது குடும்பத்தாரின் ஆதரவு..?

எனது பணிகளுக்கு குடும்பத்தார் நல்ல ஆதரவை அளிக்கின்றனர். எனது தந்தை குமரி அபுபக்கரும் சீறாப்புராணத்தை கா.மு.ஷெரீப்புடன் சேர்ந்து, கிராமங்களில் கூட கொண்டு சென்றனர்.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் ஆக வந்த அனுபவம் குறித்து..?

1993-ஆம் ஆண்டில் பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியில் சேர்ந்தேன். அன்று முதல் 2008-ஆம் ஆண்டு வரை பணி தொடர்ந்தது.  2008-ஆம் ஆண்டு முதல் ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறேன்.

செய்தி வாசிக்க உங்களுக்கு பயிற்சி அளித்த விவரங்கள்?

அன்றைய காலத்தில் தனிப்பட்ட முறையில் பயிற்சி எதுவும் இல்லை. மற்றவர்கள் செய்தி வாசிப்பதை ஒரு மாதம் பார்த்து, அப்படியே பழகிக் கொள்வோம்.

முதன்முதலாக வாசித்த முதல் செய்தி எது? 

1993-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் செய்தி வாசிக்கிறேன். சுதந்திர தின நாள்களில் கண்டிப்பாகச் செய்தி வாசித்து விடுவேன். எனது செய்திகளில் "சுதந்திரம்' என்ற வார்த்தையே அதிகம் பயன்படுத்தி உள்ளேன்.

நீங்கள் வாசித்த முக்கிய செய்திகள்?

தமிழகம் சந்தித்த நிலநடுக்கம், ஆழிப்பேரலை, சுறாவளி... என முக்கிய நிகழ்வுகளில் செய்தி வாசித்தது மறக்க முடியாதது. இலங்கைப் போரின்போது, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று வாசித்துவிட்டு,  சற்றுமுன் கிடைத்த செய்தியாக சுடப்பட்டு இறந்த செய்தியை வாசித்தபோது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் என்ற செய்திகள் வாசிக்கும்போது, மகிழ்ச்சி கிட்டும்.

அப்துல் கலாம், ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்கள் மறைவு குறித்த செய்திகள்வாசித்தது மறக்க முடியாத தருணங்கள்.

குடியரசுத் தலைவர் உரையை படித்ததும் மறக்க முடியாததாகும்.  செய்தி உலகில் டெலிபிரிண்ட் அறிமுகப்படுத்தப்பட்டபோது, பரிசோதனை முறையில் முதலில் வாசித்த பெருமை எனக்குண்டு.

திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வரவில்லையா?

திரைப்படங்களில் நடிக்காவிட்டாலும், செய்தி வாசிப்பது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சியாகும். குறிப்பாக, "எதிர்நீச்சல்' படத்தில் பல காட்சிகள் இடம்பெறும்.  1993-இல்  தனியார் தொலைக்காட்சிகள் அதிகம் கிடையாது. நாடகங்கள் முதல் பெரிய திரை வரை அழைப்பு வராத, செய்தி வாசிப்பாளர்கள் கிடையாது. ஆனால், இஸ்லாமிய குடும்பத்தில் செய்தி வாசிக்க அனுமதி பெற்றதே பெரிய விஷயம்தான். சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது.

தற்போதைய பணி?

இதுவரை 100-க்கும் மேற்பட்ட கல்லூரி நிகழ்வுகளை தமிழ் உச்சரிப்புக்காகத் தொகுத்து வழங்கியுள்ளேன்.  இணையதளக் கருத்தரங்குகளில் சொற்பொழிவு, பேரூரை ஆற்றியுள்ளேன். பல்வேறு கல்லூரிகளில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுவருகிறேன்.

இளம் செய்திவாசிப்பாளர்களுக்கு கூறும் அறிவுரை..?

செய்தி வாசிப்பாளர்கள் இளமையாக இருப்பதைவிட, தோற்றத்தை இளமையாக வைத்திருப்பது நலம். அதைவிட குரலை சீராக பராமரிக்க வேண்டும்.

எதிர்காலத் திட்டம்?

எனக்கு பத்திரிகையாளராக வேண்டும்.  மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும்.   பேராசிரியராகவும்,  செய்தி வாசிப்பாளராகவும், ஊடகப்பயிற்றுவிப்பாளராகவும் பணிபுரியும் நாள் இதுபோன்ற நிறுவனங்களை நிர்வகிக்க விரும்புகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com