தேச பக்திக் கோட்டை

சுதந்திரத்துக்காகப் போராடிய  அதிகமான பேரை தெரிந்திருக்கும் வகையில், தேச பக்தி உணர்வை ஊட்டும் நோக்கத்துடன் கோவையில் உள்ள தேச  பக்திக் கோட்டை அமைந்துள்ளது.
தேச பக்திக் கோட்டை

சுதந்திரத்துக்காகப் போராடிய அதிகமான பேரை தெரிந்திருக்கும் வகையில், தேச பக்தி உணர்வை ஊட்டும் நோக்கத்துடன் கோவையில் உள்ள தேச பக்திக் கோட்டை அமைந்துள்ளது.
இதை உருவாக்கியுள்ள "ஜெய்ஹிந்த் பவுண்டேஷன்' அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வழக்குரைஞர் வி.நந்தகுமார் கூறியதாவது:

"கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் 126 சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்களைப் பார்வையிட 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி வைத்தபோது, அங்கு வந்தவர்கள் வீரர்களை முதன்முதலாக பார்த்ததாகக் கூறினர். அவை கல்வி நிலையங்களில் மாணவர்கள் பார்வையிட வைத்தபோதும் அதே கருத்துகள்தான் எதிரொலித்தன.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து நூல்கள், இணையத்தில் தகவல்கள் இருந்தாலும் பெரும்பாலானோர் படிக்கக் கூடிய வாய்ப்பு இல்லை.
பள்ளி, கல்லூரி பாடத் திட்டத்திலும் பலரைப் பற்றி, சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகியும் கற்றுக் கொடுக்கப்படவில்லை. அதனால், நாட்டுக்காக உடைமை, உறவுகளை இழந்து, ரத்தம் சிந்தி, உயிரைக் கொடுத்து போராடிய 130 வீரர்களின் உருவப் படங்களை நிரந்தரக் கண்காட்சியாக வைக்க, கோவை-பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், சாவடி அருகில் "தேசபக்திக் கோட்டை' என்ற கட்டுமானத்தை நிறுவினோம்.
பூலித்தேவன் முதல் சங்கரய்யா வரையிலானவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி உள்ளிட்டோருடன் உலகின் முதல் தற்கொலைப் போராளி குயிலி, வீரமங்கை வேலு நாச்சியார், மருதநாயகம், மருது சகோதரரர்கள், தீரன் சின்னமலை, பழசிராஜா, கேப்டன் லட்சுமி உள்ளிட்டோரின் புகைப்படங்களுடன், வேலூர் சிப்பாய் புரட்சி, ஜாலியன்வாலாபாக் படுகொலை, ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாக்கிரகம் போன்ற நிகழ்வுகளைக் குறிக்கும் படங்களும், கொங்கு மண்டலத்தில் பங்கேற்ற வீரர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
பெரிய அளவில் ஒரு ராட்டை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்க சிறையில் இருந்தபோது அங்கிருந்த சிறை அலுவலர் ஸ்மித் என்பவர் அடிக்கடி அவரது மார்பில் உதைத்து வந்ததற்காக மகாத்மா காந்தியே அவருக்கு கையால் புதிதாக ஒரு காலணியைத் தைத்து பரிசாக அளித்ததும், ஆயுதங்கள் வாங்குவதற்காக ஆங்கிலேயர்கள் ரயிலில் கொண்டு வந்த வரிப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட காகோரி ரயில் கொள்ளை சம்பவத்தை நினைவுகூரும் வகையிலும் அந்தத் தகவல்கள் மினியேச்சர் உருவங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்களின் புகைப்படங்களுக்குக் கீழே அவர்களைப் பற்றிய குறிப்புகளும், நிகழ்வுகளின் வடிவமைப்புகளுக்கு கீழே அவை குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
இவற்றோடு அந்தமான் சிறையின் மாதிரியை உருவாக்கி, போராட்டக் காலத்தில் அங்கு அடைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கு எத்தகைய கட்டுப்பாடுகள் நிலவியதோ அதே கட்டுப்பாடுகளுடன் கூடிய வடிவமைப்பை உருவாக்கி அந்த மாதிரி சிறையில் ஒருநாள் சுற்றுலாப் பயணிகள் தங்கிச் செல்வதற்கான ஏற்பாடுகளையும் "ஜெய்ஹிந்த் பவுண்டேஷன்' செய்து வருகிறது.
நான் தொகுத்த "இந்திய சுதந்திர சிற்பிகள்' என்ற தமிழ் நூலை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமியும், ஆங்கிலம், ஹிந்தி மொழியிலான நூலை தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும், தெலுங்கு நூலை கோவை கே.ஜி. மருத்துவமனை தலைவர் ஜி. பக்தவச்சலமும் 2018-இல் வெளியிட்டனர்''என்றார்.

படங்கள்: அ.அஜய் ஜோசப்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com