'அம்மா டாக்டர்'!

புதுச்சேரியின் பெருமைக்குரியவர்களின் வரிசையில் இடம்பெற்றிருப்பவர் மருத்துவர் பி.நளினி (79).   இப்படியும் மருத்துவர் இருக்க முடியுமா?  என வியக்க வைக்கும் வகையில்,  அவரது அர்ப்பணிப்புடன் கூடிய சேவை உள்ளது.
'அம்மா டாக்டர்'!

புதுச்சேரியின் பெருமைக்குரியவர்களின் வரிசையில் இடம்பெற்றிருப்பவர் மருத்துவர் பி.நளினி (79). இப்படியும் மருத்துவர் இருக்க முடியுமா? என வியக்க வைக்கும் வகையில், அவரது அர்ப்பணிப்புடன் கூடிய சேவை உள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமலே நோயாளிகள் நலனே முக்கியம் என வாழ்ந்த அவரது வாழ்க்கையால், 300 குழந்தைகள் உயிர் பிழைத்து, அவர்களில் பலர் மருத்துவர்கள், பொறியாளர்கள் என உயர்பதவிகளில் உள்ளனர்.

"ஹிமோபிலியா' மருத்துவச் சேவைக்காக புதுவையில் முதன்முதலாக மத்திய அரசின் உயர் விருதான "பத்மஸ்ரீ ‘பெற்றவர். மக்களால் "அம்மா டாக்டர்' என அழைக்கப்படும் நளினியை, கோரிமேட்டில் உள்ள ஹிமோபிலியா சங்கத்தில் சந்தித்துப் பேசியபோது:

""தஞ்சை மேலவீதியில் உள்ள எனது பூர்வீக வீட்டில் பிறந்தேன். அப்பா பார்த்தசாரதி மருத்துவர். அம்மா விஜயா. நான் ஒரே குழந்தையாகப் பிறந்தேன்.

வயிற்றில் பிரச்னையோடு பிறந்ததால் மருத்துவமனையே இரண்டாவது வீடாகியது. அம்மாவே எனது முதல் ஆசிரியை. நான்கு வயது வரை பள்ளிக்குச் செல்லமுடியாமல் சிகிச்சை பெற்ற நான், பெங்களூரில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, ஆரம்பக் கல்வி கற்றேன். பத்தாம் வகுப்பை முடித்து திருச்சியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தேன். பின்னர், புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தேன்.

1974-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான மருத்துவ உயர்படிப்பை முடித்து ஜிப்மரில் சேர்ந்தேன். பின்னர், சென்னையில் மத்திய அரசின் சுகாதாரத்திட்ட மருத்துவராகச் சென்று பின்னர் மீண்டும் 1980 ஆம் ஆண்டு முதல் ஜிப்மருக்கு வந்தேன். "தலசீமியா' எனும் ரத்த அணுக்கள் சம்பந்தமான நோய் பாதித்த, குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும்போதுதான் ரத்தக்கசிவு பாதிப்புக்குள்ளான (ஹிமோபிலியா) குழந்தைகளைப் பார்த்தேன்.

பிறந்த குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை இந்த நோயால் பாதித்திருப்பதை அறிந்து அதிர்ந்து போனேன். மரபணு பிரச்னையால் ரத்தக்கசிவு பாதிப்பு வருகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்த உறைதல் உள்ளிட்ட பல சொல்லொணாத்துயரம் அடைந்ததையும் காண முடிந்தது.

இந்தக் குழந்தைகளையும், அதை குணப்படுத்த முடியாமல் தவித்த தாய்மார்களையும் பார்த்தபோது மனம் உடைந்துபோனேன். எனது சிறுவயதில் நான் நோயால் பாதித்தபோது, எனது தாய் பட்ட துன்பத்தை நினைத்துப் பார்த்தேன். இந்தப் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதில் தனிக்கவனம் செலுத்தினேன்.

ஜிப்மரில் பரிசோதனை வசதியிருந்தும், உரிய சிகிச்சைக்கு வழியில்லாத சூழ்நிலையே இருந்தது. மருந்து, மாத்திரைகள் வாங்கவே, தினமும் ஆயிரக்கணக்கில் செலவழித்தாக வேண்டும். அவர்களுக்கு உதவும் வழியைத் தேடியபோதுதான், புதுதில்லியில் ஹிமோபிலியா கூட்டமைப்பு இருப்பதை அறிந்து அதில் உறுப்பினராகச் சேர்ந்தேன். அதன் பிறகே அந்த அமைப்பிடமிருந்து மருந்து, மாத்திரைகளை வாங்கமுடிந்தது.

ஹிமோபிலியா சிகிச்சைக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பயிற்சி அளிப்பதை அறிந்து, ஜிப்மரில் உள்ள பணியாளர்களை அனுப்பி பயிற்சி பெற வைத்தேன்.

புதுச்சேரியில் ஹிமோபிலியா சங்கத்தையும் தொடங்கி நடத்திவருகிறேன். 1985 -ஆம் ஆண்டு முதல் இதுவரையில் ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளித்தும், இலவசமாக மருந்து, மாத்திரைகளை வழங்கியும் வருகிறேன். தற்போது 300 பேர் என்னிடம் நேரடியாகச் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சங்கக் கட்டடம் கட்டுவதற்கு புதுவை முதல்வர் என்.ரங்கசாமி பெரிதும் உதவியுள்ளார். புதுவை மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் ஹிமோபிலியா சிகிச்சைக்கு என்னிடம் வருகின்றனர்.

மருத்துவராக பல குழந்தைகளைப் பார்த்து, அவர்களுக்கான பாதிப்பை சீராக்கி சந்தோஷப்பட்ட நான் திருமணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. 300 குழந்தைகளும், அவர்களது குடும்பத்தினரும் என்னை "அம்மா' என்றழைக்கும்போது அந்த சந்தோஷத்துக்கு ஈடு இணையே இல்லை.

ஒன்றரை வயதில் நோய் பாதிப்புடன் வந்த சிறுவன் தற்போது கோவையில் பெரிய தொழிலதிபராக இருப்பதைக் கேள்விப்பட்டு மிகுந்த சந்தோஷமடைந்தேன்.

ஹிமோபிலியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்புக்கான வாய்ப்புகள், நிதியுதவிகளைச் செய்துவருவதுடன், அவர்களது குடும்பத்தினருக்கும் வேலைவாய்ப்பு, பயிற்சி, தொழில் தொடங்க நிதியுதவிகளைச் செய்துவருகிறேன்.

மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்து அதன் மூலமும் ஹிமோபிலியா பாதிப்பு குடும்பங்களுக்கான உதவிகளை விரிவாகச் செய்துவருகிறேன்.

எனது செயல்பாட்டை பார்த்து பல சமூக நல அமைப்புகள் விருதுகளையும் வழங்கியுள்ளனர். தபால் துறை சார்பில் தபால் தலையும் வெளியிட்டனர்.

புதுதில்லியில் காங்கிரஸார் "மகாத்மா காந்தி பெயரில் சர்வதேச அமைதி விருது'-ஐ வழங்கியதும் ஊக்கமளிப்பதாக உள்ளது.

பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டிருப்பதை அங்கீகாரமாகவே பார்க்கிறேன்'' என்றார்.

படம்: ரமேஷ் என்ற ஜெயராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com