பெண்கள் வாழ்க்கையில் வெளிச்சம்!

மீனைத் தருவதற்குப் பதில் மீன் பிடிக்க கற்றுக் கொடு என்ற பழமொழி உண்டு.
பெண்கள் வாழ்க்கையில் வெளிச்சம்!


மீனைத் தருவதற்குப் பதில் மீன் பிடிக்க கற்றுக் கொடு என்ற பழமொழி உண்டு. அதுபோல இன்றைய தேவைக்கு உதவி செய்வதைவிட ஆயுள் முழுவதும் பயன்படும் வகையில், மகளிருக்கான திட்டத்தைச் செயல்படுத்துகிறது ரோட்டரி மாவட்டம் 3231.

காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய 97 ரோட்டரி சங்கங்களை இந்த மாவட்டம் கொண்டுள்ளது.

இந்த ஆண்டின் (2022-23)  மாவட்ட ஆளுநரான ஜே.கே.என்.பழனி பதவியேற்றது முதல், சமுதாயத்தில் பின்தங்கியோர் பொருளாதாரத்தில் உயர்ந்து, அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இதில் குறிப்பிடத்தக்கத் திட்டம் 'வெளிச்சம்' என்ற பெண்களுக்கான தையல் பயிற்சி அளிக்கும் திட்டம்.

97 ரோட்டரி சங்கங்களின் சார்பில், தையல் பயிற்சி மையங்கள் அமைத்து தலா 250 வீதம் 25 ஆயிரம் பெண்களுக்கு இந்த ஆண்டில் தையல் பயிற்சி அளிக்கும் வகையில், திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக, ஒவ்வொரு சங்கத்துக்கும் தலா 5 தையல் இயந்திரங்களையும் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பழனியிடம் கேட்டபோது:

""சர்வதேச ரோட்டரி சங்கத்தின் தலைவராக இந்த ஆண்டு முதல்முறையாக, கனடா நாட்டைச் சேர்ந்த ஜெனிஃபர் ஜோன்ஸ் என்ற பெண் பதவியேற்றுள்ளார். வழக்கத்தைவிட, உலகளவில் ரோட்டரி சங்கம் சேவை அதிக அளவில் உள்ளது.   அவர் அண்மையில் சென்னை வந்தபோது,  பெண்கள் முன்னேற "வெளிச்சம்' எனும் தையல் பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டது.

கிராமப்புற ஏழைப் பெண்கள் பயன்பெறும் வகையில், ஊராட்சிகளில் உள்ள சமுதாயக் கூடங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வாயிலாக,  ஆங்காங்கே இடம் தேர்வு செய்து மையங்களை அமைத்து தையல் பயிற்சியை அளித்துவருகிறோம்.
மூன்று மாதங்கள் பயிற்சி முடித்த பெண்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை, எம்.எஸ்.எம்.இ. போன்றவை வாயிலாக, சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. கடந்த 7 மாதங்களில் இதுவரை 7,500 பெண்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தச் சான்றிதழ்களைப் பெற்ற பெண்கள்  அரசுத் திட்டங்கள் வாயிலாக, இலவசமாகத் தையல் இயந்திரங்களைப் பெற்று சுயதொழில் புரியவும் முடியும். 

பல நூறு பெண்கள் பயிற்சி பெற்று, தோல் தொழில் நிறுவனங்கள், நூல் ஏற்றுமதி நிறுவனங்கள், ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியில் சேர்ந்து, தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளனர். வரும் மாதங்களில் விரைவாக, பல ஆயிரம் பேர் பயிற்சி பெறுவர்.

இந்தத் திட்டம் அடுத்த 10 ஆண்டுகள் தொடரும் வகையில், வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுதொடருமானால், 2.50 லட்சம் பெண்கள் பயிற்சி பெறுவார்கள்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com