மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை!

காஞ்சிபுரத்தில்  அண்மையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில்,  கட்டடக் கலைஞர்கள் பலரும் வியந்து பார்க்கும்வகையில் கைலாசநாதர் கோயிலை வடிவமைத்துக் கொண்டிருந்தார் மணல் சிற்பக் கலைஞர் ஏ.ராஜேந்திரன்.
மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை!

காஞ்சிபுரத்தில்  அண்மையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில்,  கட்டடக் கலைஞர்கள் பலரும் வியந்து பார்க்கும்வகையில் கைலாசநாதர் கோயிலை வடிவமைத்துக் கொண்டிருந்தார் சென்னை கேளம்பாக்கத்தைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் ஏ.ராஜேந்திரன்.

சமையல் கலையில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் கப்பல்களில் சமையல் கலைஞராகப் பணிபுரிந்து வந்த இவர், பின்னர் கலைகளின் மீதுள்ள ஆர்வத்தால் அந்தப் பணியைவிட்டு மணல் சிற்பக் கலைஞராக மாறியிருக்கிறார்.

ஒருமுறை மாமல்லபுரம் கடற்கரை மணலில் 3 அடி நீளம், 2 அடி அகலத்தில் ஒரு சிங்கம் சிற்பத்தை விளையாட்டாக வடிவமைத்திருக்கிறார். பலரும் பாராட்டவே அடுத்த ஒரு சில நாள்களில் கடல் கன்னியின் சிற்பத்தையும் வடிவமைத்திருக்கிறார். இதைப் பார்த்த  வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பாராட்டியது மேலும் மணல் சிற்பங்களை செய்யத் தூண்டியிருக்கிறது.

அவருடன் ஓர் சந்திப்பு:

ஆர்வத்தைத் தூண்டியது யார்?

தொடக்கத்தில் கடற்கரையில் நான் செய்த மணல் சிற்பத்தை பார்த்த வெளிநாட்டுத் தம்பதியர் என்னைப் பாராட்டினர். இதோடு  பலரும் மணல் சிற்பங்களை செய்கிறார்கள் என்று சில விடியோ படங்களை காட்டினர். அதிலிருந்து எனக்கு மணல் சிற்பங்களை செய்வதில் தனியாத ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. 

அவர்களே வெளிநாடுகளில் நடக்கும் மணல் சிற்பக் கலைஞர்களுக்கான போட்டிகள் நடைபெறும் இடங்களையும்,அவர்களது முகவரிகளையும் அளித்தனர். அவர்களால் எகிப்து,துபை உள்ளிட்ட நாடுகளில் நடக்கும் போட்டியில் பங்கேற்று பரிசுகளும் பெற்றேன். இதுவரை  42 மணல் சிற்பங்கள் செய்துள்ளேன்.மணல் விளையாட்டே வாழ்க்கையாகிப் போய் இருக்கிறது.

மணல் சிற்பங்களைப் பார்த்தவுடன் சட்டென்று மனதில் பதியும். எந்த ஒரு கருத்தையும் சொல்ல முற்பட்டால்,  அதை நானே மணல் சிற்பமாக செய்து மக்களுக்குத் தெரியப்படுத்துவேன். மணல் எப்படிப்பட்ட கோபக்காரராக இருந்தாலும் சாந்தம் அடைய வைத்து விடும்.இதில் மன அமைதியும் கிடைக்கும்.மணல் சிற்பங்களை செய்ய பொறுமையும்,கொஞ்சம் ஆர்வமும் அவசியம். ஒரு மணல் சிற்பம் செய்ய குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் வரை செலவாகிறது.

மணல் சிற்பங்கள் செய்ய எந்த வகை மண் உகந்தது?

மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் உள்ள மண்ணுக்கு பிடிப்பு இருக்காது. இது ஒரு வகை, கடலும், ஆறும் சேரும் இடங்களில் உள்ள முகத்துவார மண்ணில் பிடிப்பு இருக்கும். இது 2-ஆ வது வகை. மண்ணில் தண்ணீரை கலந்து உருட்டி அதை அப்படியே மேலே தூக்கிப் போட்டால் கீழே விழும்போது துகள்களாக விழுந்தால் அதில் சிற்பங்கள் செய்ய முடியாது.துகள்களாக சிதறாமல் அப்படியே விழும் மண்ணில் தான் மணல் சிற்பங்களை எளிதாக செய்ய முடியும். இந்த மண்தான் மனதில் நினைத்ததை அப்படியே செய்ய உதவியாக இருக்கும். 

படித்த படிப்பு ஒன்றாகவும்,பார்க்கும் வேலை ஒன்றாகவும் இருக்கிறதே!

நான் பிளஸ் 2 முடித்து விட்டு உணவக மேலாண்மை, இயற்கை மருத்துவம், யோகாவில் பட்டப்படிப்பையும் முடித்திருக்கிறேன். கப்பல்களில் சமையல் கலைஞராகப் பணியாற்றி வந்தேன்.  நல்ல வருமானமும் கிடைத்தது.

அதையெல்லாம் விட்டு விட்டு கலை ஆர்வத்தில் முழுநேர மணல் சிற்பக் கலைஞராக மாறி விட்டேன். அரசு விழாக்கள்,தொண்டு நிறுவனங்கள் பலவற்றுக்கு எய்ட்ஸ் ,  புற்றுநோய் விழிப்புணர்வு,குழந்தைகள் பாதுகாப்பு,சுற்றுச் சூழல் பாதுகாப்பு, உழைப்பாளர்கள் தினம் உள்ளிட்டவை தொடர்பான ஏராளமான மணல் சிற்பங்களை செய்து கொடுத்திருக்கிறேன்.

வெளிநாட்டவர்கள் வியந்து பார்க்கும் அற்புத கட்டடக்கலை வடிவமைப்பான காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் போன்ற மணல் சிற்பத்தை காஞ்சிபுரத்தில் நடந்த புத்தகத் திருவிழாவில் செய்திருந்தேன்.ஆட்சியர் மா.ஆர்த்தியின் வேண்டுகோளை ஏற்று மிகவும் கஷ்டப்பட்டு வடிவமைத்துக் கொடுத்தேன். 

நீங்கள் செய்ததில் உங்களுக்குப் பிடித்த மணல் சிற்பம்?

மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகளை விவரிக்கும் மணல் சிற்பம் எனக்கு மிகவும் பிடித்த மணல் சிற்பம். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அணுவின் மூலம் கிடைக்கும் நன்மைகளை மணல் சிற்பமாக சுமார் 25 அடி உயரத்திலும்,45 அடி அகலத்திலும் செய்திருந்தேன்.அணுமின் நிலையம் தான் முதலில் என்னை மணல் சிற்பக்கலைஞராகவே அங்கீகரித்து பாராட்டியது. காய்கறிகளில் மணமக்களின் படங்கள், விலங்குகளின் படங்களை அப்படியே தத்ரூபமாக செதுக்குவது, வெண்ணெய், ஐஸ் கட்டிகள் போன்றவற்றிலும் தேவைப்படும் படங்களை வடிவமைப்பது, திருமண விழாக்களுக்கு மேடை அலங்காரங்கள் செய்வது ஆகியவற்றையும் செய்து கொண்டு இருக்கிறேன். 

"மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை, மனிதன் மீது மண்ணுக்கு ஆசை'  என்ற பாடலை அடிக்கடி ரசித்துக் கேட்பதுண்டு. எனக்கோ சிற்பங்கள் செய்வதற்காக மட்டும் மணலின் மீது அளவு கடந்த ஆசை. தீராத காதல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com