ஆயுள் நூறு தரும் அடுப்பில்லா சமையல்

அடுப்பின் மூலம் சமையல் செய்யும்போது காய்கனிகளை,  பொருள்களை வேக வைக்க வேண்டியிருக்கும்.
ஆயுள் நூறு தரும் அடுப்பில்லா சமையல்

அடுப்பின் மூலம் சமையல் செய்யும்போது காய்கனிகளை, பொருள்களை வேக வைக்க வேண்டியிருக்கும். இதனால் சத்துகள் முழுமையாக, மனித உடலுக்கு கிடைக்காமல் போகலாம். இதற்கு மாற்றாக உள்ளதுதான் "அடுப்பில்லா சமையல்'.

இந்தச் சமையல் கலை குறித்துகன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்பட்ட மார்த்தாண்டம் அருகேயுள்ள பள்ளியாடி, பழைய கடையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பி. ஜஸ்டின் என்பவர்விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.

அவரிடம் பேசியபோது:

""எனது உடலில் நிறைய பிரச்னைகளைச் சந்தித்து வந்துள்ளேன். அந்தநேரத்தில் மருந்துகளைவிட உணவுதான் மருந்து என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டேன். அதற்காக உணவுகள் மீது அதிகமான தேடல் ஏற்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கோயம்புத்தூர் ஆனைக்கட்டி, சிறுவாணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள "ருத்தம்ப்ரா பவுண்டேஷன்' என்ற அமைப்பு சார்பில் 3 நாள்கள் நானும், எனது மனைவி விஜியும் அடுப்பில்லாமல் சமைத்து உண்பது குறித்து கற்றுக் கொண்டேன்.

இதன்பின்னர், அன்றாடம் மக்களுக்கும் விழிப்புணர்வை அளித்து வருகிறோம். இதில், கூட்டு, பொரியல், இட்லி, சாதம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வகையிலான சமையல் செய்யலாம்.

பழங்கள், காய்கனிகளில் தாது உப்புக்கள் அதிகம் இருக்கும். கேரட், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை பச்சையாக எடுத்து சாப்பிட்டால், அதில் இயற்கையான சுவை இருக்கும்.

பீட்ரூட், வாழைக்காய், புடலங்காய் உள்ளிட்டவற்றை பச்சையாகச் சாப்பிடுவது சற்று கடினமாக இருக்கும். ஆனால் எல்லா காய்கறிகளையும் பக்குவப்படுத்துவது சுலபம். புடலங்காய், வாழைக்காய், பீட்ரூட் போன்றவற்றை இந்துப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் சிறிது நேரத்திலேயே சாப்பிடும் பக்குவத்துக்கு வந்துவிடும்.
அடுப்பில்லா சமையல் மூலம் கேரட் பொரியல் செய்ய கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். அதை பக்குவப்படுத்த எலுமிச்சை சாறு, இந்துப்பு இரண்டையும் சேர்க்க வேண்டும். ஐந்து நிமிடங்களில் அவை பக்குவப்படும்.
இவற்றுடன் இஞ்சி சாறு, சுவைக்காக சிறிதளவு சீரகம், நல்லமிளகு பொடி, தேங்காய் துருவல், கறிவேப்பிலையும் சேர்த்தால் அடுப்பில் வைத்து சமைக்கும் கேரட் பொரியலை விட அருமையாக இருக்கும்.
தேங்காய்ப் பால் என்பது தாய்ப்பாலுக்கு அடுத்து அதிக சத்து நிறைந்தது. தேங்காய்ப் பாலை சூடுபடுத்தாத வரை அது அமிர்தம். தேங்காய்ப் பாலில்தான் பெரும்பாலான உணவுப் பொருள்களை அடுப்பில்லா சமையலில்
செய்கிறோம்.
காலை உணவுகள், கஞ்சி வகைகள், சிறுதானிய கூழ் உள்ளிட்டவை செய்கிறோம். கேழ்வரகு அவல், கம்பு அவல் உள்ளிட்டவை கடைகளில் கிடைக்கின்றன. இந்த மாதிரியான அவலை வாங்கி வந்து ஊறவைத்து கஞ்சியாக செய்யலாம்.
இயற்கையாக சூடுபடுத்தி அதிலிருக்கும் இயற்கை சத்துகள் நஷ்டப்படாமல் இந்த உணவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
13 வகை கூட்டுகள், சாதம், ஊறுகாய், பாயசம், கேக் செய்வதற்கு பயிற்சியை அளிக்கிறோம். பயிற்சியின்போது இயற்கையான பழங்களில் செய்யும் கேக், காபி கொடுக்கிறோம். அந்த காபி சூடாக இருக்குமா என்றால் இல்லை. குளிர்ச்சியாகவே இருக்கும். ஆனால் காபியின் ஒவ்வொரு உறிஞ்சலும் மன நிம்மதியை தரும். அப்படிப்பட்ட அனுபவத்தை அடுப்பில்லா சமையல் மூலம் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
நாளில் ஒரு நேரம் இந்த அடுப்பில்லா சமையலில் தயாரான உணவுப் பொருளை சாப்பிட்டால், தாது உப்புக்கள் நமது உடலில் சேர்ந்து நீண்ட
ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழலாம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com