உள்ளமும், உடலும் உறுதியாக...

எண்பத்து எட்டு வயதிலும் சைக்கிள் ஓட்டும் ராமகிருஷ்ணன்: ஆரோக்கியத்தின் ரகசியம்
உள்ளமும், உடலும் உறுதியாக...

'உள்ளமும் உடலும் உறுதியாக இருக்க சைக்கிள் பயணம் அவசியம்'' என்கிறார் எண்பத்து எட்டு வயதிலும் சைக்கிள் ஓட்டும் வட்டார வளர்ச்சி முன்னாள் அலுவலரான க.வை.ராமகிருஷ்ணன்.

நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட மல்லூரை அடுத்த கொமாரபாளையத்தைச் சேர்ந்த அவரிடம் பேசியபோது:

'1946-இல் இங்கிலாந்தில் தயார் செய்த "பிலிப்ஸ்' சைக்கிளை என் தந்தை வாங்கி, பயன்படுத்தி வந்தார். அப்போது நான் சிறுவன். என் தந்தை சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்றுவிடும்போதெல்லாம், நானே சிரமப்பட்டு சைக்கிளை ஓட்ட கற்றேன்.

ஆரம்பப் பள்ளியை முடித்து, ராசிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். எட்டு மைல் தூரம் சைக்கிளில் நாள்தோறும் பயணித்து பள்ளிப் படிப்பை முடித்தேன்.

1954-இல் பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த

போது, 500 பேர் வசிக்கும் பகுதியில் ஓராசிரியர் பள்ளி தொடங்க உத்தரவிட்டார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள், ஓராசிரியராக நியமிக்கப்பட்டனர்.

அந்த நேரத்தில் சேலம் மாவட்ட பள்ளிகளுக்கான தலைவராக இருந்த திருச்செங்கோடு டி.எம்.காளியண்ண கவுண்டர் உதவியால், நான் வசிக்கும் பகுதியில் இருந்து ஆறு மைல் தூரத்தில் இருந்த பள்ளிக்குப் பணி நியமனம் பெற்றேன். பள்ளிக்கு சைக்கிளிலேயே சென்றுவந்தேன்.

சேலம் ராஜாஜி காதி பவன் மேலாளர் தியாகி கிருஷ்ணனின் ஆலோசனையின்படி, ஆசிரியர் பணியை ராஜிநாமா செய்துவிட்டு ஊரக வளர்ச்சித் துறையில் "கிராம சேவக்' பணியில் சேர்ந்தேன். இந்தப் பணிக்காக, நாள்தோறும் எங்கு சென்றாலும் சைக்கிளிலேயே பயணித்தேன். பதவி உயர்வால், வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றியபோதும் சைக்கிள் பயணத்தை விடவில்லை.

நான் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று, 29 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது எண்பத்து எட்டு வயதாகிறது. எனது சைக்கிளின் வயது 78. தற்போதும் அந்த சைக்கிள் உறுதியாக உள்ளது. சிறந்த முறையில் பாதுகாத்து, பராமரித்து வருவதால் வெளிப்பயணத்துக்கு உறுதுணையாக இருக்கிறது. இப்போதும் அந்த சைக்கிளில்தான் பயணம்.

உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது சைக்கிள் பயணம். சுறுசுறுப்பை உருவாக்குகிறது. பெட்ரோல் இல்லாமல் இயங்குவதால், செலவும் இல்லை. இளைஞர்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டால் உடல் வலிமை பெறும்'' என்கிறார் ராமகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com