பாரம்பரிய வரலாற்று பொக்கிஷங்கள்..

பழமையான கல்வெட்டுகள் மற்றும் அதன் வரலாற்று பொக்கிஷங்கள்!
பாரம்பரிய வரலாற்று பொக்கிஷங்கள்..

பாண்டிச்சேரியானது தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது அதன் பழமையும், பாரம்பரியமும் தமிழகத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையில்தான் இருந்துள்ளன. தற்போது பெயர் மாற்றப்பட்டு புதுச்சேரியானது. பாண்டியர்கள், பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர்கள் கால மன்னர்களைத் தொடர்ந்து போர்ச்சுகீசியர், பிரெஞ்சியர், ஆங்கிலேயர் என அந்நியரின் ஆதிக்கத்தின் கீழ் பல ஆண்டுகள் இருந்துள்ளது.

ஆனாலும், ஆன்மிக, தேசிய நாட்டமானது புதுச்சேரி மக்களிடம் அதிக தாக்கம் பெற்றிருக்கிறது. புதுச்சேரியில் தற்போதும் தெருக்கள்தோறும் வீடுகளுக்கு நிகரான எண்ணிக்கையில் கோயில்களே சரித்திரத்தைத் தாங்கி நிற்கும் பொக்கிஷங்கள்'' என்கிறார் வில்லியனூரைச் சேர்ந்த கல்வெட்டு தொல்லியல் ஆய்வாளர் என்.வேங்கடேசன்.

எண்பத்தி நான்கு வயதைக் கடந்த அவர் கல்வெட்டுகளில் பாண்டிச்சேரியின் பழமையையும், பாரம்பரியத்தையும் வெளிக்கொண்டு வருவதில் முனைப்புக் காட்டிவருகிறார். 1979-இல் "வரலாற்றில் வில்லியனூர்' என்று எழுதி நூல் வெளியிட்ட இவர், பனைமலைக்கோயில், அரிக்கமேடு, திருமால் திருப்பதிகள், காரைக்கால், திருபுவனை, மதகடிப்பட்டு முதலிய பகுதிகளின் வரலாற்றுப் பெருமை குறித்து தனித்தனி நூல்கள் எழுதிய தன் மூலமே பலரும் இந்த ஊரின் பெருமைகளை அறிய முடிந்தது. அவருடைய 32 நூல்களும் புதுச்சேரி வரலாற்றை பருந்துப் பார்வையாக்கியிருக்கிறது.

தற்போதும் இடைவிடாது கல்வெட்டு ஆய்வில் ஈடுபட்டுவரும் அவரிடம் பேசியபோது:

""எனது அப்பா நடராஜன் வியாபாரி. அம்மா சுப்புலட்சுமி குடும்பத் தலைவி. சகோதரர் ராஜேந்திரன் சட்டத் துறை செயலராக இருந்தவர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றபோது, கல்வெட்டு ஆராய்ச்சியில் நான் கவனம் செலுத்தினேன். எனது ஆராய்ச்சிக்கு முன்னாள் மக்களவை உறுப்பினரான திருமுடி சேதுராமனார் ஊக்கப்படுத்தினார்.

பிரெஞ்சு ஆய்வாளர்கள் பிரான்சுவா,பில்லியோசா ஆகியோர் அறிமுகமாகி, பிரெஞ்சுப் பண்பாட்டுக் கழகம் மூலம் கல்வெட்டு ஆராய்ச்சியை கடந்த 50 ஆண்டுகளாகச் செயல்படுத்திவருகிறேன்.

புதுவை மாநிலத்தில் உள்ள 535 கல்வெட்டுகளும் கோயில்களில் பாதுகாப்பாக உள்ளன. அவை நன்கொடை வழங்கியது, அறக்கொடைகள் என திருப்பணி சார்ந்தவையாக உள்ளன. பொதுவெளியில் உள்ள கல்வெட்டுகளில் சத்திரம் கட்டியது உள்ளிட்ட தகவல்கள் உள்ளன. அவைகளின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாகவே உள்ளன.

கோயில் கல்வெட்டுகளே மண்ணின் பழமையை பறைசாற்றும் ஆதாரங்களாகின்றன. திருவிழாக்களை கிராம மக்கள் இணைந்து கொண்டாடியிருப்பதையும்,ஏரிகளை செப்பனிட்டிருப்பதையும், ஊராளும் சபை கூடி முடிவெடுத்திருப்பதையும், வடமொழி கல்விச் சபை செயல்பட்டு அதற்கு நிலதானம் வழங்கியிருப்பதையும் அறிய முடிகிறது.

பாண்டிச்சேரியின் பழமையை கி.பி. 14 -ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் அறியலாம். வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் பராக்கிரம பாண்டியர் கால கல்வெட்டு அதை உறுதிப்படுத்துகிறது. அந்தக் கால சமுதாயத்தின் நிலை, தமிழ் எந்த முறையில் பேசப்பட்டது, எழுதப்பட்டது ஆகிய விவரங்கள், மன்னர்கள் விதித்திருந்த வரிமுறைகள், தவறு இழைத்தவர்களுக்கான தண்டனைகளை விவரிப்பதாக உள்ளன.

திருவண்டார் கோயில் கல்வெட்டில் விளக்கேற்றும் விவரங்கள், நில அளவுக்கான மா, முந்திரி, வேலி போன்ற முறைகள், கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் பூஜைகளுக்காக நிதி வருவாய் தருபவையாக இருந்ததையும் கல்வெட்டுகள் விவரிக்கின்றன. நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு அதற்கேற்ப வரி விதிக்கப்பட்டுள்ளன. பூஜைகளின்போது இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆனாலும், புதுவை மண்ணில் சோழர்கால கல்வெட்டுகளே அதிகமாக உள்ளன. கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பல சம்பவங்கள் பிரெஞ்சு கால ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.

பாகூர் ஏரியை சோழர் காலத்தில் ஆழப்படுத்தும் விதிமுறைகளை கல்வெட்டு விவரிக்கிறது. அதன்படி பத்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகளும், எண்பது வயது எட்டியவர்களும் ஏரி ஆழப்படுத்தும் பணியில் ஈடுபடக்கூடாது என்றும் ஆழப்படுத்தும் பணியில் ஈடுபடுவோர் ஒவ்வொருவரும் ஒரு முழம் அளவு அகலக் குழியை ஏற்படுத்தவேண்டும் என்றும் விவரிக்கிறது. ஏரியை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபடாதவர்களுக்கான தண்டனையும், தண்டனைக்குரிய நடவடிக்கையில் ஈடுபடாத அலுவலர்களுக்கான தண்டனையையும் கூட கல்வெட்டில் விவரமாகவே பொறித்துள்ளனர்.

பாகூர், திருபுவனையில் வடமொழிக் கல்வி நிலையம் இருந்துள்ளதை பல்லவர் கால செப்பேடுகள் வெளிப்படுத்துகின்றன. திருபுவனை வடமொழி கல்விச் சாலையில் ரிக்,யஜூர், சாம வேதங்களும், சத்யசாஜாவும், வாஜலை நேயம் போன்ற வேதப் பிரிவுகளும் கற்பிக்கப்பட்டுள்ளன.

வேதாந்தம், மீமாம்சை, வியாகரணம் ஆகியவற்றுக்கான விளக்க கற்பித்தலும் நடைபெற்றுள்ளது. நெல்லே பெரும்பாலும் கூலிக்குரியவையாக வழங்கப்பட்டுள்ளதையும் அறியமுடிகிறது.

பாகூர் பகுதிகளில் மேலகாகாகுடி நந்திவர்மன் பல்லவர், நிருபதுங்க வர்ம பல்லவர் ஆகிய மன்னர்களின் செப்பேடு (கி.பி.800) பாண்டிச்சேரியின் பாரம்பரிய பழமையை வெளிப்படுத்துபவையாக உள்ளன. அவை தற்போது பாரீஸில் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுவருகின்றன.

முதலாம் குலோத்துங்க மன்னன் கல்வெட்டில், மானகுலோசனச்சேரியைச் சேர்ந்த திருநாராயணப் பட்டன் குலோத்துங்கன் சரிதையை படைத்ததை கல்வெட்டில் காணமுடிகிறது. மதகடிபட்டு கல்வெட்டில் அதிகாரத்திலிருப்பவரை புகழ்ந்து பாடி பரிசு பெற்ற புலவரைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

மதுரை கீழடியில் கிடைத்த மண் பாண்டங்களைப் போலவே எழுத்துகள் பொறித்த ஏராளமான மண்பாண்டங்களும், ஓடுகளும்கூட அரியாங்குப்பம் அருகிலுள்ள அரிக்கமேட்டில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவை வெளியில் அதிகம் விவாதிக்கப்படவில்லை.

தஞ்சை பெரிய கோயிலுக்கு முன்பாகவே முழுக்க முழுக்கக் கருங்கற்களால் கட்டப்பட்ட மகாதேவர் சிவன் கோயில் மதகடிபட்டு எனும் இடத்தில் உள்ளது. ராஜராஜனே அக்கோயிலைக் கட்டுவித்ததாக அங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரெஞ்சியர் கடந்த 18- ஆம் நூற்றாண்டின் நிகழ்வுகளையே பதிவு செய்துள்ளனர். கோயில்களின் கல்வெட்டுகளில்தான் பல்வேறு வரலாற்று தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன. ஆகவே கல்வெட்டு ஆய்வுக் களத்தை இன்னும் அதிகப்படுத்துவது அவசியம். அத்துடன் வில்லியனூர், பாக்குமுடையான்பட்டு, ஏம்பலம் ஆகிய இடங்களில் ஏற்கெனவே நடந்த அகழ்வாராய்ச்சியை விரிவுபடுத்த வேண்டியதும் அவசியமாகிறது.

புதுச்சேரியில் அகழ்வாராய்ச்சிகள் அதிகப்படுத்தும்போது தமிழரின் பாரம்பரியத்தை விளக்கும் ஆதாரங்கள் ஏராளமாய் கிடைக்கும்'' என்கிறார் என்.வேங்கடேசன்.

, படங்கள்- கி.ரமேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com