பேசும் சிலைகள்

அபூர்வ சிற்பி வீஜோராங்கொனேனின் மர்ம சிலைகள்
பேசும் சிலைகள்

பேப்பர் மில்லில் பணிபுரிந்த தொழிலாளியான வீஜோராங்கொனேன், மிகச் சிறந்த சிற்பி என்று அவர் மறைந்தவுடன் தான் தெரியவந்தது. பின்லாந்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள "பாரி கல்லா' என்ற சிறு நகரத்தில் வசித்து வந்த தனிமை விரும்பியான அவர் ரஷிய எல்லையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதியையே சிற்பங்களால் அலங்கரித்திருந்தார்.

இவரது வீட்டின் பின்பகுதியில் இருந்த அடர்ந்த வனப் பகுதிக்கு மனிதர்கள் யாரும் அங்கு செல்ல மாட்டார்கள். வீஜோராங்கோனென் அடிக்கடி அங்கு சென்று வருவார். "தொழிற்சாலையை விட்டால் வீடு! வீட்டை விட்டால் தொழிற்சாலை!' என்று இருப்பதிலேயே அவர் அதிக விருப்பம் கொண்டார். துறவிபோல் திரிந்த அவரது வாழ்வில் எந்தச் சுவாரசியமும் இல்லை. ஆனால் அவர் நிறைய புத்தகங்கûளை வைத்திருந்தார்.

2010- ஆம் ஆண்டு அவர் மறைந்த பிறகு தான் அவர் வீட்டின் பின்புறம் இருந்த வனப் பகுதியை காணச் சென்றோர் அதிசயத்தால் திகைத்துப் போயினர். எவருமே அதுவரை அந்தப் பகுதிக்குச் சென்றதில்லை. தனியே சென்ற பலர் பயந்து ஓடி வந்தனர். காரணம் அங்கிருந்த சிலைகள்! அனைத்தும் கான்கிரீட்டால் செய்யப்பட்ட மனித உருவங்கள். சிலைகள் நூற்றுக்கணக்கில் இருந்தன.

மனித இனத்தின் குழந்தை பருவம் தொடங்கி வெவ்வேறு பருவத்தை குறிக்கும் ஆண், பெண் சிலைகள் அத்தனையும் வெவ்வேறு முக பாவங்களுடன் வடிக்கப்பட்டு இருந்ததுதான் மிகப் பெரிய ஆச்சரியம்.

சில சிலைகளில் கண்கள் உண்மையாகவே மனிதக் கண்கள்போலவே இருக்கின்றன. இதனால் அவற்றை அருகே சென்று பார்க்கும் மக்கள் பயத்தால் மிரண்டு போகின்றனர். மனிதர்களைக் கூர்ந்து கவனிப்பது போன்ற இயல்பான அப்படி ஒரு தோற்றம். சில சிலைகளில் வாய்ப்பகுதி திறந்திருக்கிறது. அவற்றில் உள்ள பற்கள் அச்சு, அசலாக மனிதப் பற்களைப் போலவே அமைக்கப்பட்டிருக்கின்றன . அவற்றை எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் ஏளனமாக நம்மைப் பார்த்து சிரிப்பது போல் ஒரு மாயத் தோற்றம்.

ஒவ்வொரு சிலையும் வீஜோராங்கொனேன் வடிவமைத்த நேரத்தில் அவருக்கு இருந்த மனநிலையை பிரதிபலிக்கும் வண்ணம் முகபாவங்களுடன் காணப்படுகின்றன.

இந்தத் திறந்தவெளி சிலை அருங்காட்சியகத்தைக் காண ஆண்டுதோறும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர். அடர்ந்த வனத்தின் நடுவே இருக்கும் இந்தச் சிலைகள் அமைதியுடன் அச்சம் ஊட்டுவதாகவும் உள்ளன. தனியாக இந்த இடத்துக்கு முதல் முறையாக வருபவர்கள் விநோதமான ஒலிகள் கேட்பதாகவும் கூறுகின்றனர்.எனவே இந்த இடத்தை திகிலூட்டும் இடங்களில் ஒன்றாகவே பின்லாந்து அரசு அறிவித்துள்ளது.

1944 -ஆம் ஆண்டு பிறந்த வீஜோராங்கொனேன், தனது பதினாறாவது வயதில் பேப்பர் மில்லில் பணிக்குச் சேர்ந்துள்ளார். தனக்கு கிடைத்த முதல் சம்பளத்தில் ஒரு பை நிறைய ஆப்பிள் விதைகளையும் கான்கிரீட் கலவைத் தூளையும் வாங்கினார். முதல் முறை அவர் வடித்த சிற்பத்தைக் கண்ட அண்டை வீட்டுக்காரர்கள் அவரை கண்டுகொள்ள வில்லை. ஆனால் விடுமுறை நாள்களில் வனப் பகுதிக்கு தனியே செல்லும் அவரை பின் தொடர்ந்தவர்கள் அவர் வடிக்கும் சிற்பங்களைக் கண்டு திகைத்துப்போயினர். ஆயினும் மனித நடமாட்டமே இல்லாத அந்த பகுதிக்குள் மேலும் செல்ல ஒருவரும் விரும்பவில்லை.

கடந்த 50 ஆண்டுகளாக அவர் வடித்த சிற்பங்கள் வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. அவர் மறைந்த பிறகு வனத்தின் அடர்ந்த பகுதிக்கு சாகச பயணம் சென்ற ஒரு குழுவினர் தான் முதன்முதலில் வனமெங்கும் இருந்த நூற்றுக்கணக்கான சிலைகளைப் பற்றி உலகுக்குத் தெரிவித்தனர்.

இவருடைய மறைவுக்குப் பிறகு அவர் வாழ்ந்த வீடும் வனப்பகுதியில் அவர் உருவாக்கிய சிலை அருங்காட்சியகமும் பின்லாந்து தொழிலதிபர் "ரீனோஉசிடால்லோ' என்பவரால், விலைக்கு வாங்கப்பட்டன. அவர் உயிர் வாழ்ந்த சமயத்தில் பலர் இந்த சிலைகளைக் கண்டு ரசித்துள்ளனர். எவரிடமும் பேச விரும்பாத வீஜோராங்கொனேன், பார்வையாளர் புத்தகத்தை அவர்களிடம் கொடுத்து தமது கருத்துகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சிலை வடிவமைத்தலைத் தவிர, வீஜோராங்கொனேன் பல்வேறு நூல்களை படித்ததன் வாயிலாக ஒரு திறமையான யோகா கலைஞராக விளங்கினார். வனப் பகுதியின் மையத்தில் யோகாசனம் செய்யும் 225 அரை நிர்வாண சிலைகளை அவர் வடிவமைத்துள்ளார். இவை யோகாசனத்தின் பல்வேறு நிலைகளை அழகாகவும் முறையாகவும் செய்யும் நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவருக்கு 2007-ஆம் ஆண்டு "பின்லாந்தியா விருது' என்ற சிறப்பு விருதை பின்லாந்து அரசு வழங்கியது. விழாவுக்குச் செல்ல விருப்பம் இல்லாத இவர் சார்பாக, சகோதரரே விருதைப் பெற்றுக்கொண்டார். அவர் தனது சிலைகளை வேறு எங்கும் எடுத்துச் செல்லவும் இவர் அனுமதித்தது இல்லை.

இவரது புகைப்படங்கள் அதிகம் கிடைக்கவில்லை. ஆனால் இவருடன் பழகிய மக்கள் இவர் வடித்த சிலைகள் யாவும் இவரது உருவத்தையே சார்ந்திருப்பதாக கூறுகிறார்கள்.

தனதுசிற்பக்கலையால் உலகுக்கு ஏதோ ஒன்றை வெளிப்படுத்தியிருக்கிறார் இந்த மெளன கலைஞர். தற்பொழுது இந்த அருங்காட்சியகம் பின்லாந்து நாட்டின் மிகப் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது.

-என்.லட்சுமி பாலசுப்பிரமணியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com