வனத்துக்கு அழகு புலி!

வனப்பகுதிகள் காப்பதின் முக்கியத்துவம் - ரமேஷ்குமார்
வனத்துக்கு அழகு புலி!

'வனப் பகுதிகளால் நதிகள் பிறக்கின்றன. நதிகளால் வேளாண்மை மேம்படுகிறது. வேளாண்மைக்கு உறுதுணையாக இருந்து வருவது வனப்பகுதிகள்தான். வனத்தைக் காப்பதன் மூலம் விலங்குகள், தாவரங்கள் மட்டுமல்லாது, சுற்றுச்சூழல் சமநிலை, வேளாண்மை, நீர் ஆதாரம் ஆகியவற்றை காக்க முடியும்'' என்கிறார் இந்திய வனத் துறை அலுவலர் பி.ரமேஷ்குமார். பதிமூன்று ஆண்டுகள் வனப் பகுதிகளில் பணியாற்றி, வனவிலங்குகளோடு வலம் வரும் அவரிடம் பேசியபோது:

'எனது சொந்த ஊர் மதுரை. ஜவுளிஆலைத் தொழிலாளியான எனது தந்தை பார்த்தசாரதி, புதுச்சேரிக்கு குடிபெயர்ந்தார். இதனால் பள்ளிப் படிப்பை புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் முடித்தேன்.

பள்ளிப்பருவத்தில் இருந்தே கூடைப்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கினேன். தேசிய அளவில் நடந்த பல போட்டிகளில் புதுச்சேரி அணிக்காக 12 முறை ஆடியிருக்கிறேன். 1994-இல் தேசிய அணிக்கும் தகுதி பெற்றிருந்தேன். விளையாட்டு ஒதுக்கீட்டில், காரைக்காலில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகக் கல்லூரியில் பி.எஸ்.சி. வேளாண்மை படித்தேன்.

நண்பர்களின் உதவியால், தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் ஊக்கத்தொகையுடன் எம்.எஸ்.சி. சூழலியல் படித்தேன். அதன்தொடர்ச்சியாக, அங்கேயே பருவநிலை மாற்றம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றேன்.

2020, 2040, 2080-ஆம் ஆண்டுகளில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தால் கோதுமை விளைச்சல் பாதிக்கப்படுமா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டேன்.

கல்லூரிப் பருவத்தில் இருந்தே சக தோழியாகப் படித்த மாலதியை 2007-இல் திருமணம் செய்துகொண்டேன். மனைவியோடு இணைந்து நானும் ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ்

அலுவலராக ஆசைப்பட்டேன். நண்பர்களின் தூண்டுதலும் எனக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அளித்தது. 2006-இல் ஐபிஎஸ் தேர்வாகி, புதுச்சேரியில் பணிநியமனம் பெற்றும் பணியில் சேரவில்லை. மீண்டும் தேர்வை எழுதி வன அலுவலராக (ஐ.எஃப்.எஸ்.) தேர்வானேன். 2008-இல் எனது மனைவி மாலதியும் வன அலுவலராகத் தேர்வானார். இருவரும் சூழலியல், பருவநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு

வந்ததால், இந்திய வன அதிகாரி பணியை ஏற்றுக்கொண்டோம்.

எனக்கு ஜம்மு- காஷ்மீர் மாநிலமும், மாலதிக்கு குஜராத் மாநிலமும் பணியில் சேர வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தம்பதிகளைச் சேர்க்க குஜராத் அரசு அனுமதிக்கவில்லை. இதனிடையே, இருவரும் இணைந்து வனவிலங்கு காப்பகங்கள் மேலாண்மை குறித்த பட்டயப்படிப்பை முடித்தோம். அப்போது இருவரும் கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டோம். அன்று முதல் இருவரும் கர்நாடக வனப் பகுதிகளிலேயே வாழ்ந்து வருகிறோம்.

சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாப்பதற்கு வனமும், விலங்குகளும் மிகவும் அவசியம். பழங்குடியினர் வாழ்ந்தால், வனப் பகுதியைக் காப்பாற்றுவது கடினம். புலிகளும் பழங்குடியினரும் ஒரே இடத்தில் வசித்தால், அது இரு தரப்புக்குமே பாதுகாப்பானது அல்ல.

நாகர்ஹொளே வனப் பகுதியில் உள்ள 35 பழங்குடி கிராமங்களில் புலிகளைக் காப்பது கடினமாக இருந்ததால், அங்கு தன்னார்வ மறுவாழ்வுத் திட்டத்தை அமல்படுத்தினோம். இதன்படி, 400 பேரை வனப் பகுதிகளில் இருந்து அழைத்து வந்து, வனத்தையொட்டிய பகுதிகளில் குடியமர்த்தி, வீடுகளைக் கட்டிக்கொடுத்தோம். இதற்காக ஒருவருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. இதுவரை ஒன்பது வனப் பகுதிகளுக்குப் பாதுகாப்புத் திட்டத்தை வகுத்து தந்திருக்கிறேன்.

பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் பணியாற்றிய 2 ஆண்டுகாலம் மறக்கமுடியாதது. அப்போது மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளால் கர்நாடகத்தில் புலிகளின் எண்ணிக்கை 563 -ஆக உயர்ந்தது. புலிகள் எண்ணிக்கையில் தேசிய அளவில் கர்நாடகம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் மட்டும் 191 புலிகளின் நடமாட்டம் உள்ளது.

விலங்குகளிலேயே கம்பீரமான, அழகான, சுறுசுறுப்பான, பலமான, திறன்வாய்ந்தது புலிகள்தான். புலியின் தோற்றமும், கண்களும் காண்பவரை மிரளவைக்கும். அதன் நடையே மிடுக்காக இருக்கும். வனப் பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவது, வீரத்தின் அடையாளமாக இருந்தது. இதற்கு 1972-இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த வனவிலங்கு பாதுகாப்புச் சட்டமானது முற்றுப்புள்ளி வைத்தது. நாட்டில் புலி

களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக இருப்பதை உணர்ந்த இந்திராகாந்தி , "திட்டம் புலி' என்ற திட்டத்தை அமல்படுத்தி, பந்திப்பூர் வனப் பகுதியானது தேர்ந்தெடுக்கப்பட்டு, புலிகள் காப்பகமாக மாறியது. இத்துடன் பத்ரா, நாகர்ஹொளே, டேண்டலி, பி.ஆர்.டி.

மலைகளும் சேர்க்கப்பட்டன. அன்றைக்கு 12 -ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை, இன்றைக்கு 563 ஆக உயர்ந்துள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் கர்நாடகத்தில் புலிகளின் எண்ணிக்கை 750 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இந்திய அளவில் மொத்தம் 3,682 புலிகள் உள்ளன.

இந்தத் திட்டத்தின் ஐம்பதாம் ஆண்டு விழா 2023-ஆம் ஆண்டு ஏப். 9-இல் கர்நாடகத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடியுடன் 40 நிமிடங்களை உடனிருந்து புலிகள் காப்பகத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தேன்

புலிகள் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருப்பது வேட்டையாடுவது தான். அதைவிட கடினம், மற்ற விலங்குகளிடம் இருந்து புலிக்குட்டிகளை காப்பது. ஒருமுறைக்கு புலி 5 முதல் 6 குட்டிகளை ஈன்று தரும். முறையாக பாதுகாக்காவிட்டால், சிறுத்தை போன்ற விலங்குகள் புலிக் குட்டிகளை கொன்றுவிடும்.

போதுமான எண்ணிக்கையில் மான்கள் இல்லாவிட்டாலும் புலிகளைக் காப்பது கடினம். புலிகள் விரும்பி தின்பது சாம்பர் மான்களையும், காட்டெருமைகளையும்தான்.

புலிகளுக்கு இரையாகாவிட்டால், தாவரங்களை மான்கள் தின்றுவிடும். வனப்பகுதியைக் காக்க மான்களை புலிகள் தின்பது அவசியம். அதிக எண்ணிக்கையில் புலிகள் வாழ்ந்தால், அந்த வனப் பகுதியானது தரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இதோடு, சுற்றுச்சூழல் சமநிலையும் சீராக பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்ய முடியும்.

கடந்த 10 ஆண்டுகளில் பந்திப்பூரில் வேட்டையாடுவதைப் படிப்படியாக குறைத்துள்ளோம். 53 வேட்டை கண்காணிப்புக் குழுக்கள் தினமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதால், இரு ஆண்டுகளில் வேட்டைக்கு ஒரு புலியும் இறக்கவில்லை. இதனால் புலிகளின் எண்ணிக்கை 151- ஆக உள்ளது. இங்கு 41 ஆயிரம் மான்கள், 5,000 சாம்பர் மான்கள், 5,500 காட்டெருமைகள் உள்ளன.

ரானேபென்னூர் வனப் பகுதியில் ஓநாய்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், மான்களின் எண்ணிக்கை பெருகி, தாவரங்கள் அழிக்கப்பட்டன. கர்நாடகத்தில் தற்போது 6,047 யானைகள், 1,000 சிறுத்தைகள், 563 புலிகள் உள்ளன.

வனப் பகுதியைக் காக்க, புலிகள் பாதுகாப்பு முக்கியம். பத்து ஆண்டுகளாக மறுவாழ்வுத் திட்டம் நிறுத்தப்பட்டதால், வனப் பாதுகாப்பு பெரும் சவாலாக மாறியுள்ளது.

1980-களிலேயே பழங்குடியின மக்கள் வெளியேறிவிட்டதால், பந்திப்பூர் வனப் பகுதியைப் பாதுகாப்பது எளிதாக உள்ளது. வனத் தீயைக் கட்டுப்படுத்தியதும் பெரும் சாதனையாகும்.

மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி வனப் பகுதியாக இருக்க வேண்டும் என்பது பொதுவிதி.

இந்தியாவில் 25 சதவீதம் நிலப்பகுதி வனப் பகுதியாக உள்ளது. 140 கோடி மக்கள் வாழ்ந்து வரும் நாட்டில் இது மிகப் பெரிய சாதனை.

2022-இல் இந்திய வன ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், வனப் பகுதி 0.5 சதவீதம் விரிவடைந்துள்ளது. அதற்காக பந்திப்பூரில் இருந்தபோது மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை அனுப்பினேன். ஒரு ஆண்டில் 165 நாள்கள், 8,500 மாணவர்களை பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு அழைத்து வந்து, காடுகள், புலிகள், விலங்குகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

வனப் பகுதிகளால் நதிகள் பிறக்கின்றன. நதிகளால் வேளாண்மை மேம்படுகிறது. வேளாண்மை உறுதுணையாக இருந்து வருவது வனப்பகுதிகள்தான். வனத்தைக் காப்பதன் மூலம் விலங்குகள், தாவரங்கள் மட்டுமல்லாது, சுற்றுச்சூழல் சமநிலை, வேளாண்மை, நீர் ஆதாரம் ஆகியவற்றை காக்க முடியும்'' என்கிறார் ரமேஷ்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com