ஏழைகளுக்கு இலவசமாக தேநீர் வழங்கி வரும் கடை உரிமையாளர்

ராயகிரியில் ஏழைகளுக்கு இலவச டீ வழங்கும் மனிதநேயம்
ஏழைகளுக்கு இலவசமாக தேநீர் வழங்கி வரும் கடை உரிமையாளர்

கடை வைத்து சம்பாதித்து வாழ்க்கையில் பெரும் தொழிலதிபராக மிளிர வேண்டும் என்பதுதான் பலரும் விரும்பும் ஒன்று.

ஆனால் , தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ராயகிரியில் தேநீர் கடை வைத்து நடத்தி வரும் ராமகிருஷ்ணன்(60) மாறுபட்ட சிந்தனையுடன் ஏழைகளுக்கு கடந்த பல வருடங்களாக டீ மற்றும் பாலை இலவசமாக வழங்கி வருகிறார்.

ஒரு காலை நேரத்தில் நாம் அங்கு சென்ற பொழுது, தூய்மை பணியாளர்கள் பலருக்கும் இலவசமாக அவர் டீ வழங்கி கொண்டிருந்தார். அவரிடம் பேசிய பொழுது;

ராயகிரி பேருந்து நிலைய பகுதியில் 2010 முதல் டீ கடை நடத்தி வருகிறேன். டீ கடை தொடங்குவதற்கு முன்னால் 30 வருடங்களாக பால் வியாபாரம் செய்து வந்தேன். கரோனா தொற்று பரவிய நேரத்தில் எனக்கும் பாதிப்பு ஏற்பட்டது.50 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன்.

அப்பொழுது, தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட சிலர் மட்டுமே மக்களுக்காக பாடுபட்டு வந்ததை பார்த்தேன். தொற்று காலத்தில் தன் நலன் கருதாது மக்களுக்காக சிரமப்பட்டு வரும் அவர்களுக்கு ஏதேனும் தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என நினைத்தேன். அந்த சமயத்தில் சமூக ஆர்வலர்கள் பலர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கியதை பார்த்ததும், நாமும் ஏழைகளுக்கு இலவசமாக டீ வழங்க வேண்டும் என்று நினைத்தேன்.

கரோனா தொற்று முடிந்து கடைகளைத் திறக்க அனுமதித்த உடன் முதல் வேலையாக ,எனது தேநீர் கடையில் தூய்மை பணியாளர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் ,கர்ப்பிணி பெண்கள்,அவசர ஊர்தி ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு இலவசமாக டீ, பால் உள்ளிட்டவற்றை வழங்க தொடங்கினேன்.

எனது கடைக்கு பின்னால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அங்கு வரக்கூடிய ஏழைகளுக்கும் இலவசமாக வழங்கி வருகிறேன். அது தொடர்பான அறிவிப்பையும் கடை வாசலில் வைத்துள்ளேன். அந்த அறிவிப்பு பலகையை பார்த்து கடைக்கு வருபவர்கள் அதிகரித்துள்ளனர்.

தினமும் 50 முதல் 60 பேர் வரை இலவசமாக டீயை பருகிச் செல்கின்றனர். எனது ஆயுள் உள்ளவரை இதை தொடர்ந்து செய்ய ஆசைப்படுகிறேன். எனது மனைவி மீனாவும் கடையில் உதவியாக இருந்து வருகிறார். எங்கள் இருவருக்கும் இந்தக் கடை மூலம் கிடைக்கும் வருமானம் போதுமானதாக உள்ளது.

எனது மகனும், மகளும் நாங்கள் செய்யும் சேவையை தொடருங்கள் என்றுதான் கூறுகின்றனர் என்றார் ராமகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com