மாற்றமும் தோற்றமும்..!

ரயில் நிலையங்கள் உள்ளூர் கலாசார முகம் பெறுகின்றன!
மாற்றமும் தோற்றமும்..!

நாடு முழுவதும் மக்கள் பயணிக்கும் சிறந்த போக்குவரத்தான ரயில் போக்குவரத்தில், பயணிகள் தாங்கள் செல்லும் இடங்களின் சிறப்பையும், அங்கு வசிப்போரின் கலாசாரத்தையும் ரயில் நிலையங்களிலேயே அறியும் வகையில் ரயில்வே வாரியம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதன்படி, உள்ளூர் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

நாடுகளின் கலாசாரத்தைப் பிரதிபலிப்பதில் உணவு, உடைகள் மட்டுமின்றி, கட்டடக் கலையும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாகரிகத்தின் கருப்பையாக விளங்கும் கட்டடக் கலையை வைத்தே சிந்து சமவெளி முதல் கீழடி வரையிலான மக்களின் கலாசாரமும், வாழ்க்கை முறையும் மதிப்பிடப்படுகின்றன.

ஒவ்வொரு நாகரிகமும் தங்களது வளர்ச்சிப் பருவத்திலும், வளர்ச்சியின் முதிர்ச்சியிலும் தனது சின்னமாக உலக வரலாற்றுக்கு விட்டு சென்றது புகழ் பெற்ற கட்டடக் கலையாகும்.

இத்தகைய கட்டடங்களில் அந்த நாகரிகத்தில் வாழ்ந்த மக்களின் வளர்ச்சியையும், வாழ்க்கைத் தரத்தையும், நோக்கத்தையும் அறியமுடிகிறது.

உதாரணத்துக்கு, கிரேக்க கட்டடக் கலை தூய்மைக்கும், ருமேனிய கட்டடக் கலை அறிவியல் வளர்ச்சிக்கும், பிரெஞ்சுக் கட்டடக் கலை உணர்ச்சி வேகத்துக்கும், இத்தாலிய கட்டடக் கலை மறுமலர்ச்சிக்கும் சான்றாக விளங்குகின்றன. அந்த வகையில் இந்திய கட்டடக் கலை அன்று முதல் இன்று வரை ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் வட இந்தியாவில் நாகரா பாணியிலும், தென் இந்தியாவில் திராவிட பாணியிலும், கலப்புக் கலையாக வேசரா பாணியிலும் கட்டடக் கலை வளர்ச்சி அடைந்தது. அதன் பின்னர், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இந்தோ-இஸ்லாமியர், இந்தோ-சாராசனிக்னிக் என இந்திய கட்டடக் கலை புதிய உச்சத்தை அடைந்தது. இந்த கட்டடக் கலை பெரும்பாலும் பொதுவானதாகக் காணப்பட்டாலும், அவற்றில் உள்ளூர் சிறப்பைக் காண முடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த உள்ளூர் கட்டடக் கலையை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் ரயில் நிலையங்களை உள்ளூர் கலாசாரத்துக்கு ஏற்ப வடிவமைக்க ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது.

முதல்கட்டமாக "அம்ருத் பாரத் ரயில் நிலையம்' எனும் திட்டத்தின்படி, நாட்டில் உள்ள 1,318 ரயில் நிலையங்கள் மேம்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு ஏற்றார் போல் நவீன வசதிகள் கொண்டு காணப்பட்டாலும், ரயில் நிலையத்தின் கட்டடத் தோற்றம், முகப்பு வாயில் உள்ளூர் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டமைக்கப்படுகின்றன.

இங்கு மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலும், வைஃபை, நவீன காத்திருப்போர் அறை, கழிவறை, எளிதில் நடைமேடையை அணுகும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமையவுள்ளன.

இதுதவிர, நீண்ட காலம் நிலைத்து நிற்கும் வகையிலும் எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் பல்வேறு துறைகளுடன் இணைந்து உருவாக்கப்படுகின்றன. இதற்கான திட்டபணிகள் 2022-ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு: "உள்ளூருக்கான குரல்' எனும் நோக்கில், முக்கிய ரயில் நிலையங்களில் உள்ளூர் சார்ந்த பொருள்கள், புவிசார் குறியீடு பெற்ற பொருள்களை விற்க பிரத்யேகமாகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த நவம்பர் வரை, நாடு முழுவதும் 1,083 ரயில் நிலையங்களில் 1,189 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 814 கைவினைக் கலைஞர்கள், 147 நெசவாளர்கள், 202 வேளாண் உற்பத்தியாள்களுக்கு விற்பனை நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உள்ளூர் சார்ந்த உடை, உணவு, கலைப் பொருள்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

-ம.மகராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com