தலையில் முண்டாசு, கருப்புநிற கோட்டு...

கரோனா காலத்துக்குப் பிறகு, அவ்வையார் வேடம் அணிந்து தெருத்தெருவாகச் சென்று மாணவர் சேர்க்கையை வலியுறுத்தினேன்.
தலையில் முண்டாசு, கருப்புநிற கோட்டு...

குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், புதுக்கோட்டையில் டி.இ.எல்.சி. நடுநிலைப் பள்ளியின் பட்டதாரி தமிழாசிரியை யுனைசி கிறிஸ்டி ஜோதி நூதன முறையில் பாரதியார் வேடம் அணிந்து, ஆடியும் பாடியும் வருகிறார்.

"பிள்ளைகளே ஓடிவாருங்கள், இங்கே கல்விக் கூடம் திறந்து இருக்குது, இன்பமுடன் இங்கே அமருங்கள், எல்லாம் கற்றுத் தர தயாராய் இருக்குது, விலையில்லாப் பாடப்புத்தகம் இங்கே கிடைக்குது, விதவிதமாய் பொருள்களுமே தரமா கிடைக்குது, கல்வி உதவித்தொகையும் இங்கே கிடைக்குது, காலை உணவு, மதிய உணவு இங்கே இருக்குது, பள்ளி வந்தால் போதும் என அரசு சொல்லுது...' என்று தலையில் வெள்ளை முண்டாசு, கருப்பு நிறக் கோட்டு அணிந்து ஆடியும் பாடியும் வருகிறார்.

அவரிடம் பேசியபோது:

""எனது அப்பா, அம்மா, அக்கா என குடும்பமே ஆசிரியர்கள். எனவே, எனது குடும்பத் தொழில்போல் ஆகிப்போன ஆசிரியர் தொழிலை விரும்பி ஏற்றேன்.

எனது கணவர் பொறியாளர் ராஜ்குமார். மகள் பல் மருத்துவர், மகன் கட்டட வடிவமைப்பாளர்.

எனது கணவரே எனக்கு, தினமும் பாரதியார் வேடத்துக்காக கருப்பு மையில் மீசை வரைந்து அனுப்பி வைப்பார்.

கரோனா காலத்துக்குப் பிறகு, அவ்வையார் வேடம் அணிந்து தெருத்தெருவாகச் சென்று மாணவர் சேர்க்கையை வலியுறுத்தினேன். எங்கள் பள்ளியில் அப்போது புதிதாக 55 மாணவ, மாணவிகள் சேர்ந்தனர்.

அப்போது கல்வித் தொலைக்காட்சியில் நானும் சில பாடங்களை எடுத்தேன். மாணவர்களிடம் கல்வித் தொலைக்காட்சியின் பாட நேர அட்டவணை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினேன்.

பள்ளி விடுமுறைக்குப் பிறகு வீதிவிதியாக, சிறிய சிறிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினேன். இடையிடையே பாரதியின் பாடல்களும் உண்டு.

நிகழாண்டில் பாரதியின் வேடம் அணிந்து வீதி வீதியாகச் செல்கிறேன். பள்ளிகளுக்கு வந்தால் போதும், அரசுப் பள்ளிகளில் பாடப்புத்தகம் உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவது குறித்தும், காலை உணவு வழங்கப்படுவது குறித்தும் நானே எழுதிய பாடல்களைப் பாடி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன்.

அத்துடன், தற்போதைய கோடையைச் சமாளிக்க தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும், பகல் நேரத்தில் அவசியமின்றி வெளியே வரக் கூடாது, பழச்சாறுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும் என்பன போன்ற விழிப்புணர்வை மக்களிடமும், குழந்தைகளிடமும் ஏற்படுத்துகிறேன்.

1988-இல் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்தேன். முப்பத்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் ஏழு ஆண்டுகள் பணி இருக்கிறது. பள்ளிப் பருவத்தில் இருந்தே கலை அம்சங்கள் மீது ஆர்வம் அதிகம். அதுதான் இப்போதைய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல உதவுகிறது.

"தரங்கைத் தமிழ்' என்ற பெயரில் இரு ஆண்டுகளாக நான் நடத்தும் யுடியூப் சானலில் படிப்பு வழிகாட்டும் விடியோக்களும், கதை சொல்லுதல், பாடல்களைப் பாடுதலும் நடத்துகிறேன்'' என்றார்.

-சா. ஜெயப்பிரகாஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com