உலகமெங்கும் ஒலிக்கும் தமிழோசை!

நவீன தொழில்நுட்பங்களுடன் புதுமையான முறையில் கற்றுத் தருவதால், பலரும் தமிழை விரும்பி கற்றுவருகின்றனர்.
உலகமெங்கும் ஒலிக்கும் தமிழோசை!

- ந.முத்துமணி

கல்வி, வேலை, தொழில் வாய்ப்புகளுக்காக உலகின் பல்வேறு நாடுகளில் குடியேறும் தமிழர்கள் தமிழ் கற்க, "ஐலெர்ன்தமிழ்டாட்.காம்' (நான் தமிழ் கற்கிறேன்) இணையவழி கல்வியகத்தை நடத்திவருகிறார் சுதா முத்துராஜ். இரண்டுஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தமிழ் கற்றுத் தரும் பணியை பெங்களூரில் இருந்தே மேற்கொண்டுள்ளார்.

அவரிடம் பேசியபோது:

""மதுரையில் பிறந்து வளர்ந்த நான், பொறியியல் பட்டம் பெற்றேன். பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தேன். திருமணத்துக்குப் பின்னர், வேலைக்குச் செல்ல முடியாத சூழலில், வீட்டிலிருந்தே வலைதளங்களை உருவாக்கினேன்.

சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பேச, எழுத, படிக்க வரவில்லையே என்ற மனக்குறையில் இருப்பதை அறிந்தேன். இதனால் 2011-ஆம் ஆண்டில் "ஐலெர்ன்தமிழ் டாட். காம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினேன்.

பத்தாம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழியில் படித்தது, எனக்கு கைகொடுத்து வருகிறது. நவீன தொழில்நுட்பங்களுடன் புதுமையான முறையில் கற்றுத் தருவதால், பலரும் தமிழை விரும்பி கற்றுவருகின்றனர்.

"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத் தொழுது படித்திடடி பாப்பா' என்றார் பாரதியார். "தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற முழக்கத்துடன் செயல்படும் எங்கள் நிறுவனத்தில் நான்கு முதல் 70 வயது வரை வயதுள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழ் கற்றிருக்கின்றனர். இந்தப் பணியில் என்னுடன் எழுபதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

குடும்பத்தைக் கவனித்து வரும் பெண்கள் பலர், உலகத் தமிழர்கள் பலருக்கு அக்கறையுடன் தமிழ் கற்றுத் தருகிறார்கள். வீட்டில் இருந்தபடியே இந்தப் பணியில் ஈடுபடுவதால், குடும்ப பொருளாதாரத்தையும் கவனிக்க முடிவதோடு, நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளவும் முடிகிறது.

ஆசிரியர்கள் உணர்வுப்பூர்வமாக தமிழ் கற்றுத்தருவதால், எங்கள் முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது.

தமிழ் கற்றுத் தர நினைக்கும் யார் வேண்டுமானாலும் இங்கு பணியாற்றலாம். புதிய வலைதளங்களை உருவாக்கலாம்.

தமிழ் திரைப்படங்களைப் பார்க்க விரும்பும், பாடல்களை கேட்க விரும்பும், , தமிழகத்துக்கு வருகை தரவிருக்கும் பல வேற்றுமொழியினரும் தமிழை கற்றுள்ளனர். அவர்களுக்காகவே தனியாக பேச்சுத் தமிழ் பாடத்தை வகுத்திருக்கிறோம். எளிமையான முறையில் அமைக்கப்பட்டுள்ளதால், வேற்றுமொழியை சேர்ந்த எவரும் எளிதில் தமிழ் கற்க முடியும்.

எங்களிடம் படித்த மாணவர்கள் பாரதியார், பாரதிதாசன் கவிதைகளைப் படிக்கும் அளவுக்கு தமிழ் மீது காதல் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். சேர, சோழ, பாண்டியர்களின் வரலாறு, கதைகள், கட்டுரைகளையும் வாசித்து விவாதிக்கும் மாணவர்களும் உண்டு.

தென் ஆப்பிரிக்கா, மொரீஷியஸ், சேஷல்ஸ் போன்ற நாடுகளில் அடையாளத்துடன்தான் தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு தமிழ் பேச தெரியாது. அங்குள்ள ஆயிரக்கணக்கில் வாழும் தமிழ்க் குடும்பங்களுக்கும் கட்டணமின்றி தமிழை சொல்லிக் கொடுக்கிறோம்.

பல நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த, தங்கள் வேர்களைத் தேடுகிற தமிழர்களுக்கு மொழியோடு இங்குள்ள வாழ்க்கை முறையையும் கலாசாரத்தையும் கற்பிக்கிறோம்.

திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வெளிநாட்டு அறிஞர் ஜி.யூ.போப், "இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்' என்று தனது கல்லறையில் எழுத சொன்னார்.

என்னிடம் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களோ, "தமிழ் என்னை கவர்ந்துள்ளது. நான் தமிழனாகப் பிறக்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்படுத்துகிறது. எனினும், தமிழ் மொழியைக் கற்று நானும் தமிழனாகிவிட்டேன்' என்று கூறும்போது, பணியின் அருமையை உணர முடிகிறது.

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்ற பாரதியின் கனவை நனவாக்குவதே எங்கள் கனவு'' என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com