Enable Javscript for better performance
அந்த 13 வாரங்களில்...!- Dinamani

சுடச்சுட

    
    3im2

    பெஞ்சமின் ஃபிராங்க்ளின் 1706 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தவர். இளமையில் பெயிண்டராக, செய்தித்தாள் நடத்துபவராக இருந்திருக்கிறார். பென்சில்வேனியாவுக்கு தனது இளம் வயதில் இடம் பெயர்ந்தார். அப்போது அவர் நினைத்துப் பார்க்கவில்லை, பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அமெரிக்க பிலாஸபிகல் சொசைட்டி போன்றவை உருவாகத் தான் காரணமாக இருப்போம் என்று. அவருடைய மின்சாரம் தொடர்பான அவருடைய ஆய்வுகள் மிகவும் புகழ்பெற்றவை. அமெரிக்காவில் தெருவிளக்குகளை முதலில் அமைத்தவர் அவரே.

    அமெரிக்காவில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படவும், அமெரிக்காவில் ஜனநாயக

    ரீதியான அமைப்புகள் உருவாகவும், அவற்றில் நல்ல மாற்றங்கள் ஏற்படவும் காரணமாக இருந்தார். நவீன அமெரிக்க உருவாக்கத்தில் பெஞ்சமின் ஃபிராங்க்ளினின் பங்கு மகத்தானது. இவ்வளவு சாதனைகளுக்கும் காரணம், அவர் தனது இளம்பருவத்தில் வாழ்க்கையைத் திட்டமிட்டு அறிவியல் கண்ணோட்டத்துடன் வாழ்ந்ததே.

    1726-ஆம் ஆண்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் தனது 20-ஆவது வயதில் ஒரு முறை 80 நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். அப்போது, சொந்த வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காக ஒரு திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தினார்.

    ஒருவர் தன்னிடமுள்ள கெட்ட பழக்கங்களை விட்டுவிடவும், தேவையான நல்ல பழக்கங்களைக் கைக்கொள்ளவும் என்ன செய்ய வேண்டும்? மனதில் நினைத்தால் போதும்; உறுதியுடன் கடைப்பிடித்தால் போதும் என்றுதான் எல்லாரும் நினைப்பார்கள். ஆனால் அதுபோதுமானதில்லை என்று பெஞ்சமின் ஃபிராங்ளின் நினைத்தார். ஓர் அறிவியல்ரீதியான செயல்முறை தேவை என்று நினைத்த அவர், அதற்காக முதல்கட்டமாக ஓர் அட்டவணையைத் தயார் செய்தார்.

    ஒவ்வொரு வாரமும் ஒரு நல்ல பழக்கத்தை மேற்கொள்வது அல்லது ஒரு கெட்ட பழக்கத்தைக் கைவிடுவது என்று திட்டமிட்டார். 13 வாரங்கள் கடைபிடிப்பதற்காக 13 பழக்கங்களைத் தேர்ந்து எடுத்துக் கொண்டார்.

    அந்த ஒரு வாரத்தில் தான் கைக் கொள்ள வேண்டிய பழக்கத்தை எத்தனை நாள், எத்தனை முறை கைக்கொள்ள முடியாமல் போனது என்பதைக் குறித்துக் கொண்டார். அடுத்த வாரம் வேறு ஒரு பழக்கம். இப்படி 13 வாரங்களில் 13 பழக்கங்களை மேற்கொள்ள முயற்சி செய்த பின்பு, மீண்டும் முதலில் இருந்து தொடங்கினார். இவ்வாறு ஆண்டு முழுவதும் (ஓர் ஆண்டில் நான்கு முறை) இந்த அட்டவணையைக் கடைப்பிடித்தார்.

    ஒருவர் தன்னிடமுள்ள கெட்ட பழக்கத்தைப் போக்கவும், நல்ல பழக்கத்தை கைக்கொள்ளவும் இந்த அறிவியல்ரீதியான செயல்முறையை அவர் மேற்கொண்டார்.

    இப்படி அட்டவணையைத் தயார் செய்ததன் மூலம் ஒரு வாரத்தில் எத்தனை முறை தான் மேற்கொள்ள நினைத்ததைச் செய்ய முடியாமல் போனது? அல்லது செய்ய

    முடிந்தது என்ற புள்ளி விவரத்தை அவரால் திரட்ட முடிந்தது. இதன் மூலம் அடுத்தடுத்த வாரங்களில் அவருடைய நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, முன்னேற்றத்தைக் கொண்டு வர முடிந்தது. எதையும் மனம் போன போக்கில் நினைக்காமல், புறநிலையில் என்ன நடந்தது? என்ன உள்ளது? என்ற தரவுகளின் அடிப்படையில் தனது சொந்த வாழ்க்கைச் செயல்களை நடத்தும் அறிவியல்முறையை இப்போதல்ல, 283 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மனிதர் கடைப்பிடித்தார் என்றால், அதாவது சொந்த வாழ்க்கையை அறிவியல்பூர்வமாக ஒருவர் வாழ்ந்தார் என்றால், அவருடைய வாழ்க்கையில் இருந்து இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள நிறைய இருக்கின்றன.

    பெஞ்சமின் ஃபிராங்லின் தனது 79-ஆவது வயதில் தனது மரணம் வரை இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தார். அதன் பலனாக கடைசியில் அந்த நல்ல பழக்கங்கள் அனைத்தும் அவரது வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டன.

    இனி அவர் அந்த 13 வாரங்களில் எவற்றைக் கைக்கொள்ள நினைத்தார், எவற்றை கைவிட நினைத்தார் என்பதைப் பார்ப்போம்.

    அந்த 13 வாரங்களில்...

    1. உண்பதிலும் அருந்துவதிலும் சுயகட்டுப்பாடு. உடலைச் சோர்வடையச் செய்யும் உணவை உண்ணக் கூடாது. மனிதனின் நிலையைத் தாழ்த்தும் பானங்களை அருந்தக் கூடாது.

    2. வீண் பேச்சு பேசக் கூடாது. வதந்திகளைப் பேசக் கூடாது. அமைதியாக இருக்க வேண்டும்.

    3.எல்லாப் பொருட்களையும் வைப்பதில் ஒழுங்கு வேண்டும். உரிய இடத்தில் வைக்க வேண்டும். செய்ய வேண்டிய ஒவ்வொரு செயலுக்கும் நேரம் ஒதுக்க

    வேண்டும்.

    4.எந்தச் செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற திட்டமிடுகிறோமோ அதில் ஓர் உறுதி வேண்டும். உறுதியோடு செயலில் ஈடுபட வேண்டும்.

    5. உங்களுக்கோ பிறருக்கோ எந்த நன்மையும் செய்யாத ஒன்றுக்காக வீண் செலவு செய்யக் கூடாது. சிக்கனம் அவசியம்.

    6. நேரத்தை வீணாக்கக் கூடாது. பயனுள்ள செயல்களில் மட்டுமே எப்போதும் ஈடுபட வேண்டும்.

    7.நேர்மையாக, உண்மையாக இருத்தல் முக்கியம். வஞ்சகமான, பிறருக்குத் தீங்கிழைக்காத, நேர்மையற்ற எந்தச் செயலிலும் ஈடுபடக் கூடாது.

    8. அன்றாட வேலைகளில் ஈடுபடும்போது ஏற்படும் இழப்புகள், காயங்கள் ஆகியவற்றுக்காக கவலைப்படக் கூடாது. அறத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடக் கூடாது.

    9. முற்றிலும் நேர் எதிரான வெவ்வேறு நிலைகளுக்குச் செல்லக் கூடாது. இயல்பான வாழ்க்கை நல்லது. கடுமையாக இருக்கக் கூடாது.

    10.உடை, உடல், வசிப்பிடம் ஆகியவற்றை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

    11. பாலியல் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.

    12. உங்களுக்குப் போதிய அளவு முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்றாலோ, எதிர்பாராத, தவிர்க்க முடியாத செயல்கள் உங்களை மீறி நடந்தாலோ மனம்

    வெதும்பக் கூடாது.

    13. எந்தச் சூழ்நிலையிலும் பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ள பெஞ்சமின் ஃபிராங்ளின் கைக் கொண்ட அறிவியல்பூர்வமான வாழ்க்கைச் செயல்முறையை, நீங்களும் கடைப்பிடிக்க முயற்சி செய்யலாம்.

    உங்களிடம் உள்ள குறைகளைக் களையவும், தேவையான பண்புகளை உங்களுக்குள் ஏற்படுத்தவும் நீங்களும் திட்டமிடலாமே?

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai