சுடச்சுட

  

  என்ன பார்வை... உந்தன் பார்வை! சுய முன்னேற்றம் - 8

  By முனைவர் வ.வே.சு. கல்வியாளர்  |   Published on : 04th November 2015 03:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  3ie8

  சர் ஆர்தர் கானன் டாயில் எழுதிப் பிரபலமான ஷெர்லக் ஹோம்ஸ் கதையில் வரும் வரிகள் இவை..

  ""ஷெர்லக் ஹோம்ஸ்... இந்த கேûஸப் பற்றிய ஆச்சரியமான நிகழ்வு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?'' என்று கேட்டார் இன்ஸ்பெக்டர் கிரகேரி.

  ""ஆம்.. நேற்று இரவில் இங்கிருந்த நாயைப் பற்றிச் சொல்ல வேண்டும்''

  ""நாயா? அதைப் பற்றி என்ன? அதுதான் இரவு பூராவும் ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருந்ததே?''

  ""ஆச்சரியமான செய்தியே அதுதான்''

  ""ஆம் இரவில் நாய் குரைக்காமல் இருப்பதும், பிறந்த குழந்தை அழாமல் இருப்பதும் ஆச்சரியம் மட்டுமல்ல, கவலைக்குரியதும் ஆகும் அல்லவா?'' இதை கவனத்துக்குரியதாகக் கொண்டதுதான் ஹோம்ஸின் திறமை.

  ஒரு விஷயத்தை ஆழ்ந்து பார்க்கக் கூடிய இது போன்ற சக்தி (Observation power) துப்பறியும் மேதைகளுக்குத்தான் வேண்டும் என்று நினைத்து விடாதீர்கள். பார்வையை விசாலமானதாகவும் கூர்மையாகவும் ஆக்கிக் கொள்ளக்கூடிய சக்தி எல்லாருக்கும் இருக்கிறது.. வாழ்க்கையில் முன்னேற நினைப்பவர்களுக்கு இத்தகைய பார்வை அவசியம் தேவை.

  பார்வை என்ற சொல்லுக்குக் கண்ணால் பார்ப்பது என்ற பொருள் இருந்தாலும், அதையும் தாண்டி அனுமானம் (Reason), கருத்து, சிந்தனை, தொலைநோக்கு (Vision) போன்ற பொருள்களும் உண்டு. எனவே பார்வையைக் கூர்மை செய்ய வேண்டுமென்றால் கவனத்தோடு எல்லாவற்றையும் அணுக வேண்டும் என்ற பொருளையும் கொள்ளலாம். அன்றாட வாழ்க்கையில் நாம் பல விஷயங்களை மேலெழுந்தவாரியாகப் பார்த்துவிட்டுச் சென்று விடுகிறோம். அவை மனத்தில் பதிவதே இல்லை.

  எங்கள் அடுக்ககத்தில் ஒரு மாணவர், காலையில் அவசர அவசரமாகத் தன் ஸ்கூட்டரை துடைக்கிறேன் என்ற பெயரில் தூசு தட்டிவிட்டு வீட்டுக்குள் போய்விடுவார். ஒருநாள் இந்தக் காலைக் கடன் முடிந்த பிறகு கல்லூரிக்கு அவசரமாகக் கிளம்பத் தொடங்கினார். அன்று பொதுத் தேர்வு வேறு. ஸ்டாண்ட் ஐ எடுத்தால் தெரிகிறது பேக் டயர் பங்ச்சர். இதனால் காலம் விரயம். மாற்று ஏற்பாடு செய்து கொண்டு கல்லூரிக்குச் செல்ல வேண்டும். மன உளைச்சல். இதனால் தேர்வில் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புண்டு நிச்சயமாகப் பத்து மதிப்பெண்கள் அதிகமாகக் கிடைக்க வாய்ப்பே கிடையாது. காலையில் வண்டியைத் துடைக்கும் போது கவனத்தோடு பார்த்திருந்தால், இதைத் தவிர்த்திருக்கலாம் அல்லவா?

  காலையில் நாளிதழ் படிக்கும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைத் தேடிப் படிக்கிறார்கள். விளையாட்டில் விருப்பமுள்ளவர்கள் முதல் பக்கங்களைப் பார்ப்பதே கிடையாது. பாலிடிக்ஸ் போக்குகளைப் படித்துவிட்டு அன்றையப் பஞ்சாயத்தை நடத்துபவர்களின் கண்கள், கடைசி பக்கங்களைக் கண்டதாகச் சான்றுகளே இல்லை. இன்னும் சிலர் சினிமா விளம்பரங்களோடு சந்திப்பு நிகழ்த்திவிட்டு அத்தோடு போகட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். கடமை உணர்வு தவறாத மூத்த குடிமக்கள் சிலர், தாம் எழுதி அனுப்பிய ஆசிரியருக்கு கடிதம் வந்திருந்தால் போதும், அதிலேயே மகிழ்ந்துவிடுகிறார்கள் வேறு கடிதங்களைக் கூடப் படிப்பதில்லை. இவற்றிலேதும் நான் குறை காணவில்லை.

  ஆனால் மாணவர்களும் இளைஞர்களும் பொதுச் செய்திகளைத் தரும் நாளிதழ்களை முழுமையாகப் புரட்டிப் பார்க்கும் (Glance) பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது முன்னேறுவதற்கான படிகளில் ஒன்று. ஆம். பொது அறிவு (General knowledge) என்பது ஒரு நள்ளிரவுக்குள் கைவசமாகக் கூடிய விஷயமல்ல. அறிவு வளர்ச்சி என்பது தொடர்ந்து காட்டப்படும் ஆர்வத்தாலும் படிப்பினாலும் மட்டுமே நிகழக்கூடியது.

  மிக உயரத்தில் பறக்கும் இயல்பும், திறமையும் கொண்ட பறவை பருந்து. இது மேலிருந்து கீழே தெரியும் நிலப்பரப்பைப் பார்த்துக் கொண்டே சுற்றிக் கொண்டிருக்கும். ஏதோ ஓர் இடத்தில் இரை தென்படுமானால் அடுத்த கணத்தில் சரேலென்று கீழிறங்கி இரையைக் கொத்திச் சென்றுவிடும். அது போலத்தான் மாணவர்கள் நாளிதழ்களையும், நூல்களையும் படிக்க வேண்டும். அனைத்தையும் மேலோட்டமாகப் புரட்டிக் கொண்டே இருந்து கொண்டு, தேவையான செய்திகள் தெரியும் போது அதனைக் கூர்மையாகவும் ஆழ்ந்தும் படிக்கக் கூடிய பருந்துப் பார்வையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

  விரைந்து படிக்கும் ஆற்றலை (Speed reading) வளர்த்துக் கொள்பவர்கள் வாழ்க்கையிலும் விரைந்து முன்னேறும் வாய்ப்பினைப் பெறுவார்கள்.

  அகலமாகவும் நம்மைச் சுற்றி உள்ளவற்றை அளந்தும் பார்க்கக் கூடிய பார்வையும் நமக்கு வேண்டும். ஒரு நேர்காணலுக்குச் செல்கிறீர்கள். எதிரே ஏழு நபர்கள் அமர்ந்து கேள்விகள் கேட்கிறார்கள். கேட்பவரைப் பார்த்து நீங்கள் பதில் சொன்னாலும் அரை வட்டமாக அமர்ந்திருக்கும் மற்ற ஆறு பேர்களும் எப்படி உங்கள் பதிலை எடை போடுகிறார்கள்? என்பதையும் நீங்கள் கண நேரத்தில் பார்வையை வீசிப் புரிந்து கொள்ள வேண்டும். இதனை மீன் பார்வை என்று சொல்லலாம். உயிரினங்களிலே மீன்களால்தான் 180 டிகிரி பரப்பைக் காண முடியும். போலரைஸ்டு ஒளியையும், அல்ட்ரா வயலெட் கதிர்களையும் காணும் திறமும் அவற்றுக்கு உண்டு. எனவே எல்லாச் சூழலிலும் சரியான கவனத்தோடு செயல்படும் மாணவருக்கு மீன் பார்வை இருப்பதாகச் சொல்லலாம்.

  பிரச்னைகள் இருளாகக் கவிந்திருக்கும் போது, தீர்வு என்ற ஒளியை அதில் பாய்ச்சும் இளைஞருக்கு, இரவில் காணும் திறன் படைத்த ஆந்தைப் பார்வை இருக்கிறது எனச் சொல்லலாமா?

  முன்னும் பின்னுமாகத் தொலைவிலுள்ள இரையையும் தான் கடந்து வந்த பாதையையும் தலையைத் திருப்பி சிங்கம் பார்ப்பதை, இலக்கணத் தமிழ் "அரிமா நோக்கு' என்று சொல்கிறது. நேற்று வரை நாம் என்ன செய்தோம், இனி என்ன செய்யப் போகிறோம் என்று எதிர் காலத் திட்டம் வகுப்பவர்களை அரிமா நோக்கு உடையவர்கள் என்றும் சொல்லலாமே?

  இவற்றுள் எந்தப் பார்வை உங்கள் பார்வை? எல்லாவிதப் பார்வைகளும் இருந்தாலே சிறக்கும் வாழ்க்கை.

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai