சுடச்சுட

  
  3ie11

  வானில் பறக்கும், தண்ணீரில் நீந்தும் குட்டி ரோபோவை முதல்முறையாக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். "பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்' என்பது எத்தனை உண்மையோ, அதேபோல இந்த வடிவமைப்புக்கும் பஃபின்ஸ் என்ற கடல் பறவைதான் முன்னுதாரணமாக இருந்துள்ளது.

  ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஜான் பால்சன் ஸ்கூல் ஆஃப் என்ஜினீயரிங் ஆராய்ச்சியாளர்கள்தான் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர். அளவில் பேப்பர் கிளிப்பைவிடச் சிறிய இந்த ரோபோவுக்கு இயந்திரத் தேனீ எனப் பெயரிட்டுள்ளனர். தேனீயால் பறக்க முடியும்; ஆனால், தண்ணீரில் மூழ்க முடியாது. ஆனால், இந்த இயந்திரத் தேனீயால் இரண்டையும் செய்ய முடியும். இந்த முயற்சியானது இதுபோன்ற கலப்பு வகை ரோபோ தயாரிப்புத் துறையில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.

  பொதுவாக இதுபோன்ற பறக்கும், தண்ணீரில் மூழ்கிச் செல்லும் திறன் படைத்த வாகனங்களைத் தயாரிப்பதற்கு பெரிய இறக்கைகளும், அதேநேரம் தண்ணீரின் தரைப்பரப்பை ஊடுருவிச் செல்லும் எடையும் தேவை. இந்த இயந்திரத் தேனீ ரோபோவும் அந்தச் சவாலை எதிர்கொண்டது. இந்த ரோபோ சிறியது மற்றும் எடை குறைவானது என்பதால், தண்ணீரின் தரைப்பரப்பின் அழுத்தத்தை உடைக்க இயலாது. இந்த நேரத்தில்தான் உதவிக்கு வந்தது பஃபின்ஸ் என்ற பறவை. கடல் பறவை வகையான இந்தப் பறவை வானில் பறக்கும், தண்ணீரிலும் நீந்தும். வானில் பறக்கும்போது படபடவென சிறகடிக்கும் இந்தப் பறவை, அப்படியே சரேலென தண்ணீரில் மூழ்கும்போது சிறகசைப்பை முற்றாகக் குறைத்துவிட்டு தண்ணீரில் ஊடுருவிப் பாயும். அந்தத் திறனைத்தான் இந்த ரோபோ வடிவமைப்பிலும் புகுத்தியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

  தண்ணீர், காற்றைவிட 1000 மடங்கு அடர்த்தியானது. ரோபோவின் இறக்கைகளின் வேகத்தை நாம் சரிசெய்யவில்லை என்றால், தண்ணீரின் அடர்த்தியானது ரோபோவின் இறக்கைகளை முறித்துவிடும். ஆதலால், வானில் பறக்கும்போது நொடிக்கு 120 முறை இறக்கைகளை அசைக்கும் இந்த ரோபோ, தண்ணீரில் மூழ்கும்போது நொடிக்கு 9 முறை மட்டுமே இறக்கைகளை அசைக்கும் வகையில் வேகத்தைக் குறைத்தோம் என்கின்றனர் இந்த வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றிய கெவின் சென், ஃபேரல் ஹெல்பிலிங் ஆகியோர்.

  வானில் இருந்து தண்ணீரில் மூழ்கும் இந்த ரோபோவால், தண்ணீரில் இருந்து வானை நோக்கி எழும்ப இயலாது. ஏனென்றால், அதன் இறக்கைகளை அசைக்கும் வேகம் தண்ணீரில் குறைந்துவிடுவதால், தண்ணீரில் இருந்து மேலே பறப்பதற்குத் தேவையான திறனை உடனடியாக ஏற்படுத்த இயலாது. இருப்பினும், தொடர்ச்சியான ஆராய்ச்சியின் மூலம் அந்தக் குறையையும் சரிசெய்ய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

  பூச்சி அளவிலான ரோபோ தயாரிப்பில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதுபோன்ற பறக்கும் ரோபோவை அப்பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வடிவமைத்தனர். கார்பன் ஃபைபர் உடலமைப்புடன்கூடிய அந்த ரோபோ, இப்போது மேம்படுத்தப்பட்டு வானில் பறக்கும், தண்ணீரில் நீந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளின் பல ஆண்டுக் கனவான பறக்கும் நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைப்பதற்கான பாதையை இந்த இயந்திரத் தேனீ ரோபோ ஏற்படுத்தியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai