சுடச்சுட

  

  அணுக்களுக்கு எடையை அளிக்கும் நுண்துகளைக் கண்டுபிடித்த ஐன்ஸ்டீனின் நண்பரான இந்திய விஞ்ஞானி!

  By - வ.மு.முரளி  |   Published on : 17th November 2015 07:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Satyendranath_Bose

  மிகவும் நுண்ணிய அணுக்கள் இணைந்தே நாம் காணும் உலகம் உருவானது என்று அறிவியல் கூறுகிறது. இந்த அணுவுக்குள் 16 வகையான நுண்துகள்கள் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அவற்றுள் முக்கியமானவை எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவை. இந்த அணுக்களுக்கு எடையை அளிக்கும் நுண்துகள் உள்ளது என்பதற்கான கோட்பாட்டை (போஸ்- ஐன்ஸ்டீன் புள்ளியியல்) கண்டறிந்தவர் ஓர் இந்திய விஞ்ஞானி.

  அவரது பெயர் சத்யேந்திரநாத் போஸ். அதன்காரணமாக, பின்னாளில் கண்டறியப்பட்ட அந்தப் புதிய துகளுக்கு "போஸான்' என்று விஞ்ஞானிகள் பெயரிட்டனர்.

  வங்க மாநிலத்தில் நாடியா மாவட்டம், பாரா ஜாகுலியா கிராமத்தில் 1894 ஜனவரி 1-இல் பிறந்த சத்யேந்திரநாத் போஸ், சிறு வயதிலேயே கணிதத்திலும் இயற்பியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டார். அங்குள்ள மாநிலக் கல்லூரியில் பயன்பாட்டுக் கணிதத்தில் போஸ் முதுநிலை பட்டம் பெற்றார். அந்தக் கல்லூரியில் அவருக்கு ஆசிரியர்களாக இருந்தவர்கள் ஜெகதீச சந்திர போஸூம் பிரஃபுல்ல சந்திர ராயும். கல்லூரியில் அவருக்கு சக மாணவராக இருந்தவர் பின்னாளில் பிரபல விஞ்ஞானியான மேகநாத் சஹா.

  பட்டப்படிப்பு முடிந்தவுடன், 1916 முதல் 1921 வரை கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிய சத்யேந்திரநாத் போஸ், கல்விப்பணியுடன் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார். அப்போதுதான் ஜெர்மனி நாட்டு இயற்பியல் மேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு (THEORY OF RELATIVITY) உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது.

  அதை அறிவதற்காகவே, ஜெர்மானிய மொழியைக் கற்ற போஸ், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகுக்கு அளித்தார். அன்று முதல் ஐன்ஸ்டீனுடன் போஸூக்கு நெருங்கிய நட்புறவு ஏற்பட்டது. அப்போது துகள் இயற்பியல் (Quantum Physics), துகள் பொறியியல் (Quantum Mechanics) ஆகிய துறைகளில் அவரது கவனம் சென்றது.

  இயற்பியலுக்கான நோபல் பரிசு (1918) பெற்ற ஜெர்மனி விஞ்ஞானியான மாக்ஸ் பிளாங்கின் மின்காந்தக் கதிர்வீச்சு தொடர்பான பிளாங்கின் விதி (Max Plank ‘s Law) பற்றியும், ஒளித்துகள் கோட்பாடு (Light Quantum Hypothesis) பற்றியும் ஓர் ஆய்வுக் கட்டுரையை ஐன்ஸ்டீனுக்கு போஸ் 1924-இல் அனுப்பினார். அது அவரது வாழ்வில் திருப்புமுனையானது. அதை ஜெர்மனியில் தானே மொழிபெயர்த்து வெளியிடச் செய்தார் ஐன்ஸ்டீன். அன்றுமுதல் அவரை தனது குருவாக வரித்துக் கொண்டார் போஸ்.

  அதேபோல, ஐன்ஸ்டீனின் சார்புநிலைக் கோட்பாட்டை விளக்கி போஸ் எழுதிய கட்டுரையில் அவர் கையாண்டிருந்த கணித அணுகுமுறை ஐன்ஸ்டீனைப் பெரிதும் கவர்ந்தது. அந்த முறையை ஐன்ஸ்டீனும் பின்பற்றத் தொடங்கினார்!

  போஸூக்கு புகழ் பெற்றுத் தந்தது, துகள் புள்ளியியலில் (Quantum Statistics) அவர் 1924-25-இல் அளித்த வரையறைக் கோட்பாடாகும். அதை பின்னாளில் ஐன்ஸ்டீன் மேலும் வளர்த்தெடுத்தார். எனவே இது "போஸ்- ஐன்ஸ்டீன் புள்ளியியல்' (Bose-Einstein Statistics) என்று பெயர் பெற்றது.

  1925-இல் ஜெர்மனியில் ஐன்ஸ்டீனும் போஸூம் இணைந்து இயற்பியல் குளிர்விப்பு கருதுகோளை வெளியிட்டனர். அடர்த்தி குறைந்த வாயுவை அதீத குளிர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்லும்போது அதன் அணுக்கள் தன்னிலை மாறுவது குறித்த அந்தக் கருதுகோள், "போஸ்- ஐன்ஸ்டீன் செறிபொருள்' (Bose-Einstein Condensate) என்று பெயர் பெற்றது. இவை பின்வந்த துகள் இயற்பியல் துறையின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்தன.

  அடுத்து பிரான்ஸ் சென்ற போஸ், கதிரியக்கம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த மேரி கியூரியைச் சந்தித்தார். அவரது நட்புறவு கதிரியக்கம் தொடர்பான ஆராய்ச்சியிலும் போûஸச் செலுத்தியது. கியூரியின் சோதனைச்சாலையில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அதேபோல, அணுவின் உள்ளமைப்பை விளக்கிய பிரபல டச்சு விஞ்ஞானியான நீல்ஸ் போஹ்ர் என்பவருடனும் போஸ் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார்.

  போஸூடன் அக்காலத்தில் பணியாற்றிய வெளிநாட்டு விஞ்ஞானிகள் அனைவருமே அவரது மேதைமையை ஏற்றனர். அவர்களில் பலர் நோபல் பரிசையும் பெற்றனர். ஆனால், அடிமை நாட்டைச் சேர்ந்தவராக இருந்ததால் சத்யேந்திரநாத் போஸூக்கு நோபல் குழு உரிய மதிப்பை அளிக்கத் தவறியது.

  ஐன்ஸ்டீனின் பரிந்துரையால், டாக்கா பல்கலைக்கழகத்தில் 1926-இல் பேராசிரியராகி, 30 ஆண்டுகள் போஸ் பணிபுரிந்தார். இவரது விஞ்ஞான சாதனைகளைப் பாராட்டி பாரத அரசு 1954-இல் பத்மவிபூஷண் விருது வழங்கி கெளரவித்தது.

  அறிவியலைத் தாய்மொழியான வங்கத்தில் கற்பிக்க வேண்டும் என்று முதலில் கூறியவர் போஸ். அவர் பிரெஞ்ச், லத்தீன், ஜெர்மன், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் இசையிலும் மிகவும் திறன் பெற்றவராக விளங்கினார். நேதாஜியின் நண்பராகவும் இருந்திருக்கிறார். சக விஞ்ஞானியான மேகநாத் சஹாவுடன் இணைந்து வெப்ப இயக்கவியலில் அவர் உருவாக்கிய கோட்பாடு நிலைவின் சமன்பாடு (Equation of State) என்று அழைக்கப்படுகிறது.

  தனது வாழ்நாள் முழுவதும் இயற்பியலின் ஒரு பிரிவான துகள் இயற்பியலுக்காகப் பணியாற்றிய சத்யேந்திரநாத் போஸ் 1974, பிபர்வரி 4-இல் மறைந்தார். அவரது பெருமையை இன்னமும் இந்திய மாணவர்கள் அறியவில்லை என்பதே, நாம் அறிவியலில் ஏன் பின்தங்கியிருக்கிறோம் என்பதற்கான காரணத்தை வெளிப்படுத்துகிறது.

   

   

  ஹிக்ஸ் போஸானும் போஸூம்...

   

  நேர்மின்னூட்டம் கொண்ட புரோட்டான்களை ஒளிவேகத்தில் எதிரெதிர்த் திசையில் மோதச் செய்யும்போது, அணுக்களுக்கு எடையை அளிக்கும் "போஸான்' துகள்கள் பிரியும் என்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன்மூலம் பிரபஞ்சத்தின் தோற்ற ரகசியத்தை அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

  இதற்காக ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகத்தால்

  (CERN) ஜெனீவா அருகில், தரைக்கடியில் அமைக்கப்பட்ட 27 கி.மீ. நீளமுள்ள வட்ட வடிவிலான பிரமாண்டமான குழாயில் அமைக்கப்பட்ட மாபெரும் ஆட்ரான் மோதுவி இயந்திரத்தில் (Large Hadrton Collidar) 2012 ஜூலை 5-இல் இந்தத் துகள் பிரிக்கப்பட்டது. இதை விஞ்ஞானிகள் அறிவித்தபோது, புதிய துகளுக்கு "ஹிக்ஸ் - போஸான்' என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நிகழ்வு வருங்கால அறிவியலின் திசையைத் தீர்மானிப்பதாக இருக்கும். இந்த சாதனைக்கு வித்திட்டவர்களுள் இந்தியரான சத்யேந்திரநாத் போஸூம் ஒருவர் என்பது நாம் பெருமிதம் கொள்ள வேண்டியதாகும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai