சுடச்சுட

  
  17im3

  வாழ்க்கையில் வெற்றியடைந்தவர்கள் அனைவரும் காலத்தைக் கண்ணெனப் போற்றி வாழ்ந்தவர்கள் என்பது வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும்போது தெரிகிறது.

  மாவீரன் நெப்போலியன், தன் படைவீரன் ஒருவனுக்கு ஒரு வேலையைச் செய்ய உத்தரவிட்டிருந்தாராம். அந்த வேலை எந்த அளவில் உள்ளது என்பதை ஆய்வு செய்ய இரவில் வந்தவருக்கு தூக்கி வாரிப்போட்டது. ஏனெனில் வேலையில் பாதியளவு கூட முடிந்திருக்கவில்லை. உடனே அந்த வீரனை அழைத்து, ""ஏன் இந்தப் பணியை முடிக்கவில்லை?'' என்று கேட்டாராம். அதற்கு அவன், ""பகல் முழுவதும் முயற்சித்தும் முடிக்க முடியவில்லை, நாளை முடித்து விடுகிறேன்'' என்றானாம் அந்த வீரன். அதற்கு நெப்போலியன், ""இரவெங்கே போனது? எடுத்த காரியத்தை முடிக்காமல் கண் துஞ்சக் கூடாது'' என அறிவுரை கூறினாராம்.

  இதுதான் இன்று நாம் பின்பற்றவேண்டிய முக்கியமான அறிவுரையாக உள்ளது. வாழ்க்கையில் இழந்தால் மீண்டும் பெற இயலாத விஷயங்கள் மூன்றே மூன்று. அவை மனிதனின் உயிர், வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தை, கடந்து சென்ற காலம். அதிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது இந்த காலம்தான். ஏனெனில் இந்த காலம்தான் மனிதனின் வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. வாழ்வின் உயர்வு, தாழ்வைத் தீர்மானிக்கிறது.

  இன்று என்பது மட்டும்தான் நம் கைகளில் உள்ளது. நாளை என்பது வரலாம், வராமலும் போகலாம். ஆனால் நாமோ நிகழ்காலத்தை கோட்டைவிட்டுவிட்டு கடந்த காலத்தை எண்ணி வருந்திக் கொண்டோ, எதிர்காலத்தை எண்ணி கனவு கண்டு கொண்டோ, காலத்தை வீணாக்கிப் பழகி விட்டோம்.

  உதாரணமாக, பள்ளியில் பாடங்களை பருவத் தேர்வுக்கு ஏற்றாற்போல பிரித்து வைத்து, அந்தந்த காலகட்டத்தில் அந்தந்தப் பாடங்களைப் படித்து, தேர்வெழுதி, கடைசியாக ஆண்டுத் தேர்வில் அனைத்து பாடங்களையும் தேர்வாக எழுதுவது போன்றதுதான் காலத்தைப் பிரித்தாளுவதும்.

  நாம் நம் தினசரி வாழ்க்கையில் காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் ஓதுக்குகிறோம். பிறகு நம் கல்வி, அலுவல் தொடர்பான வேலைகளுக்கு நேரம் ஓதுக்குகிறோம். அதேபோல மாலை நேரத்தில் விளையாட்டு அல்லது பொழுதுபோக்குக்கும் நேரம் ஓதுக்குகிறோம்.

  இவ்வாறு நாம் தினசரி வாழ்க்கைக்காக அனிச்சையாக நாம் எவ்விதத் திட்டமிடலும் இன்றி நேரம் ஒதுக்கிச் செய்யும் இந்தச் செயல்களைப் போல, நாம் நம் வாழ்வின் லட்சியங்களை அடைய முறையாகத் திட்டமிட்டு, அதற்கென நேரம் ஒதுக்கினால் வட்சியங்களை அடைவதில் எவ்வித தடையும் ஏற்படாது.

  கல்லூரிக் கல்வியை முடித்தவுடன் நாம் எந்த வேலைக்குச் செல்ல வேண்டும். அந்த வேலைக்கு என்னென்ன தகுதிகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். அதற்கு என்ன பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதை ஓர் உத்தேசமாக கணித்து செயல்பட்டால் போதும், நாம் நம் வெற்றியை அடைய எவ்வளவு பயணப்பட்டிருக்கிறோம். இன்னும் எவ்வளவு பயணப்பட வேண்டும் என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.

  ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் குறுகிய காலத் திட்டம், நீண்டகாலத் திட்டம் என பலவகையான திட்டமிடல்கள் இருக்கின்றன. ஆனால் யாரும் இந்தத் திட்டமிடல்களை முறையாகச் செயல்படுத்துவதில்லை. இருக்கின்ற 24 மணி நேரத்தை முறையாகத் திட்டமிட்டு, செயல்களைச் செய்து பழக வேண்டும்.

  அதிகாலையில் துயில் எழுதல்: சூரியன் உச்சிக்கு வரும்வரை தூங்குவதைத் தவிர்த்து, அதிகாலையில் எழுந்து பழகுவதை அனைவரும் பழக்கத்தில் கொள்ள வேண்டும். அதிகாலைப் பொழுதின் அமைதியில் சுத்தமான, தூய்மையான காற்று கிடைக்கும். அந்தக் காலை வேளையில், சாலையில் ஒரு சிறு நடைப்பயிற்சி செய்து கொண்டே நாம் அன்று செய்யவேண்டிய பணிகளைப் பட்டியலிட்டுச் செய்தால் போதும். வாழ்வில் சாதித்தவர்கள் அனைவரும் சூரியனுக்கு முன்பே எழுந்து, சுறுசுறுப்பாக செயல்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள்.

  அன்றன்று பணியை அன்றன்றே முடிக்கவேண்டும்: கல்லூரி மாணவராகட்டும், அலுவலக பணியாளராகட்டும் அன்றன்றையப் பணியை அன்றே செய்து முடிக்கப் பழக வேண்டும். நாளை பார்த்துக் கொள்ளலாம் என நாம் மிச்சம் வைக்கும் பணிகள் சில நாள்களிலேயே மலை போல குவிந்து நம்மை மலைக்க வைக்கும். நம் திறனைக் குறைத்து விடும். மேலும், இவ்வாறு பணிகளை மிச்சம் வைப்பதால், அன்றாடம் நாம் செய்ய வேண்டிய உடனடிப் பணிகளும் பாதிக்கப்பட்டுவிடும் அபாயம் உள்ளது.

  காலம் பொன் போன்றது: பணத்தை இழந்தால் சம்பாதித்துக் கொள்ளலாம். பதவி, வீடு, நிலம் என எதையும் எப்போதும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புள்ளது. ஆனால் நாம் இழந்த காலம் மட்டும் மீண்டும் நமக்கு கிடைக்காது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai