சுடச்சுட

  

  சுய முன்னேற்றம் - 10: மைக்ரோஸ்கோப்பா? டெலெஸ்கோப்பா?

  By முனைவர் வ.வே.சு. கல்வியாளர்  |   Published on : 17th November 2015 07:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  17im6

  பள்ளியில் இரண்டு மாணவர்கள் பேசிக் கொள்கின்றனர்:

  ""டேய் நம்ம சார் கிட்ட கேர்புஃல்லா இருக்கணும்டா''

  ""ஏன்?''

  ""அவருக்கு ஒரு கண்ணு மைக்ரோஸ்கோப்பு.. இன்னொரு கண்ணு டெலஸ்கோப்பு..''

  ""எப்படிடா?''

  ""நாம எழுதின பேப்பர்ல சின்ன தப்பு இருந்தாலும் கண்டுபிடிச்சுடறார். கடைசி பெஞ்சில யாரு இல்லேன்னும் கண்டுபிடிச்சுடறார்''

  நான் குறிப்பாக இங்கே சொல்ல வந்த செய்தி, வாழ்க்கையிலே நம்ம அணுகுமுறையும் கூட இந்த இரண்டு கருவிகள் மாதிரி இயங்க வேண்டும். சில நேரம் மைக்ரோஸ்கோப்

  அணுகுமுறை. சில நேரம் டெலஸ்கோப்

  அணுகுமுறை. மேலே அந்த மாணவன்

  சொன்னது ரொம்பச் சரி... வகுப்பறையில ஓர் ஆசிரியராக இருந்து பாடம் நடத்த வேண்டும் என்றால் இந்த இரண்டு முறைகளும் கட்டாயம் தேவை. இதே அப்ரோச் மாணவர்களுக்கு

  மட்டுமல்ல, வாழ்க்கையில் முன்னேற நினக்கும் அத்தனை இளைஞர்களுக்கும் தேவை.ஹ

   

  மைக்ரோஸ்கோப் அணுகுமுறை: தேர்வு எழுதி முடித்த மாணவர்கள் ஆர்வத்தோடு மதிப்பெண்கள் எவ்வளவு எடுத்துள்ளோம் என்று விடைத்தாளை வாங்கிப் பார்க்கிறார்கள். எதிர்பார்த்ததைவிட அதிகம் வாங்கியிருந்தால் சீக்ரெட்டா ஒரு த்ரில் போனஸ் கிடைத்தது மாதிரி. அதுவே நினைத்ததை விடக் குறைந்திருந்தால் யார் மீது பழி போடலாம் என்று மனது பரபரக்கிறது. ஆனால் இங்குதான் உங்கள் அணுகுமுறை உருப்பெருக்கி போல அமைய வேண்டும். ஒரு மதிப்பெண் குறைந்தாலும் அது ஏன் என்று நுணுகி ஆராய வேண்டும். காரணம் தெரியும் வரை தோண்டித் துருவிக் கண்டுபிடிக்க வேண்டும்.

  சரியான நேரத்தில் கிழிசலைத் தைத்துவிட்டால் ஒன்பது முறை தைக்க நேராது (A stitch in time saves nine) என்ற பழமொழியின் படி ஒரு மார்க் போன கிழிசல் தெரிந்தால்தான், அதை விரைவில் தைத்துச் சீராக்கமுடியும்.

  கடையில் ஒரு பொருள் வாங்கிய பிறகு தரப்படும் பில்லை, எத்தனை பேர் உன்னிப்பாகப் படித்துக் கவனத்தில் ஏற்றிக் கொள்கிறீர்கள்? ""சார் இது கம்ப்யூட்டர் யுகம்.. நம்மை விடக் கணினிகள் போடும் கூட்டல். கணக்கு சரியாக இருக்கும் சார்''

  ""ம்.. ஒத்துக் கொள்கிறேன். கூட்டல் பற்றிக் கவலை வேண்டாம். ஆனால் சில நேரங்களில் வாங்காத பொருளோ அல்லது வாங்கியதை விட அதிகமான அளவோ (quantity) தவறாகச் சேர்க்கப்பட்டிருக்கலாம். அதை கவனிக்கக் கூடிய வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

  வேறு சில விதிமுறைகளையும் அந்த ரசீதுச் சீட்டில் அச்சிட்டிருப்பார்கள். அதைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? சில ரசீதுகளில் விற்கப்பட்ட பொருட்களை மறுபடி திரும்பப் பெற்றுக் கொள்ள மாட்டோம் (Goods once sold will not be taken back) என்று இருக்கும். அது போன்ற கடைகளில் வாங்கிய பொருட்களை அங்கேயே சரி பார்த்துக் கொள்வது நல்லது.

  இதைவிட மோசம் சிலர் மருந்துகள் வாங்கும் போது எக்ஸ்பைரி தேதி (Expiry Date) பார்க்காமல் வாங்கிவிடுவர். இது உயிருக்கே ஆபத்து ஹவிளைவிக்கும் நிலையிலும் கொண்டு விடலாம்.

  எதுவுமே சின்ன விஷயம் இல்லை: ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விஷயம் முக்கியம். நாம் சிறியஹது என்று நினைக்கிறது, பிறருக்குப் பெரிதாகப் படலாம். கடிதம் எழுதும் போது தேதி, முகவரி ஆகியவற்றைச் சின்ன விஷயம் என்று நினைக்காமல் பொறுப்போடு சரி பார்த்து அனுப்ப வேண்டும்

  எனக்குத் தெரிந்த ஒரு கம்பெனி உயர் அதிகாரி தனக்கு வந்த விண்ணப்பக் கடிதத்தில் தன் பெயர் தவறாகக் குறிக்கப்பட்டிருப்பதைக் கண்டவுடன், அதைப் படிக்காமலேயே திருப்பி அனுப்பிவிட்டார். ""என் பெயரைக் கூடச் சரியாக எழுதத் தெரியாதவருக்கு நான் எப்படி வேலை கொடுப்பது?'' என்பது அவர் சொன்ன காரணம். சின்னதையும் பெரியதையும் சூழ்நிலை அன்றோ தீர்மானிக்கின்றது?

  ஷூ முக்கியமா? அதைக் கட்டுகிற லேஸ் முக்கியமா? பாட்டில் முக்கியமா? இல்லை மூடி முக்கியமா? என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? இரண்டுமே முக்கியம் தானே? இதில் சிறியது எது? பெரியது எது?

  சிறியதாக இருந்தாலும் பிறர் செய்த உதவியைப் பெரியதாக நாம் நினைக்க வேண்டும் என்று திருவள்ளுவர் சொல்கிறார்.

  தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் ( குறள்:104)

   

  டெலஸ்கோப் அணுகுமுறை: தொலை நோக்குப் பார்வையும் சாதனையாளர்களுக்கு முக்கியம். ஒரு துறையிலே படிக்கும் போதே, அத்துறையில் சிறப்பாக உழைத்தால் அடுத்த பத்து ஆண்டுகளில் நாம் என்ன உயரங்களை அடையலாம் என்று திட்டமிட்டுப் படிக்க வேண்டும்; உழைக்கவேண்டும்.

  சாதனை என்ற பழங்களைப் பறிக்க நினைக்கிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் அதற்கான விதைகளை இன்றே விதைக்க வேண்டும். தொலைதூரத்தில் தெரியும் வெற்றியை இனம் கண்டு கொண்டு அதற்கான முயற்சிகளை இன்று தொடங்குபவனே புத்திசாலி மாணவன்.

  உலகம் சுற்றிய தமிழன் என்று அறியப்பட்ட, குமரி மலர் ஆசிரியர் ஏ.கே. செட்டியார்,

  2-10-1937- இல் நியூயார்க்கிலிருந்து டப்ளினுக்கு சமரியா எனும் கப்பலில் பயணம் செய்தார் அப்போது கப்பலில் பயணம் செய்தவர்கள் காந்திஜியின் 68 வது பிறந்த நாளைக் கொண்டாடினர். அந்த சமயம்தான் காந்திஜி பற்றிய செய்திப் படம் ஒன்றை, புகைப்படக் கலை பயின்ற நாம் ஏன் எடுக்கக் கூடாது? என அவர் நினைத்தார். சென்றது 4 கண்டங்கள், 30க்கும் மேற்பட்ட நாடுகள் இலட்சம் மைல்கள் பயணம். 100 காமிராக்காரர்கள் எடுத்த படங்களைச் சேகரித்தார். ரோமைன் ரோலண்ட், போலிக் போன்றவர்களைப் பேட்டி கண்டார் 24-8-1940-இல் முதலில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் படத்தை வெளியிட்டார். 1952-இல் ஆங்கிலப் பின்னணி உரையோடு வெளியிட்டார்.

  மகாத்மாவின் சிறப்பைத் தொலை நோக்குப் பார்வையால் உணர்ந்து, அவரைப் பற்றித் தமிழில் முதல் ஆவணப் படம் எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்தார் ஏ.கே.செட்டியார்.

  ஆம். எந்தச் சாதனையாளர்களின் வெற்றிக்குப் பின்னாலும், ஒரு டெலஸ்கோப் அணுகுமுறையும், அயராத தொடர்ந்த உழைப்பும் இருப்பதைக் காணலாம்.

  நமது குறை நிறைகளையெல்லாம் சமுதாயமும் மைக்ரோஸ்கோப் கண் கொண்டு பார்க்கின்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே சமயம் திறமை நமக்கிருந்தால் யாருடைய டெலஸ்கோப் கண்ணாவது நிச்சயம் நம் மீது படும்.

  எண்ணிப் பார்த்தால் மைக்ரோஸ்கோப், டெலஸ்கோப் அணுகுமுறைகள் இரண்டையும் பயன்படுத்துவோர்க்கு, வாழ்க்கை சிறப்பாக அமைய நிறைய ஸ்கோப் இருக்கிறது.

   

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai