சுடச்சுட

    

    நாளை நான் ஐஏஎஸ்!: இன்றைய நிகழ்வையும், வரலாற்றையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்!

    By மு.சிபிகுமரன்  |   Published on : 17th November 2015 07:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    17im4

    கரையில் ஓயாது அலைகள் சீறும். சீறும் அலைகளை சிறு ஓடம் மீறும். வெறும் மரமான படகும் விரிகடல் மீது நம்பிக்கையோடு உலவும்.

    மாணவர்களே போட்டித் தேர்வுகளிலும் தொடக்கத்தில் தோல்விகள் சீறும். நம்பிக்கையோடு முன்னேறுங்கள். அவை வெற்றியாய் மாறும். அலைக்குப் பயந்தால் அது படகு இல்லை. தோல்விக்குப் பயந்தால் அவன் மனிதனில்லை.

    சமீபத்தில் ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றம் சாந்தாரா SANTHARA) எனப்படும் சமண சமயத்தின் வழக்கம் ஒன்றிற்குத் தடைவிதித்தது.

    வரலாற்றுப் பின்புலம் கொண்ட நடப்பு நிகழ்வு அது. சாந்தாரா அல்லது சல்லிகானா (SALLIGANA) எனப்படும் இந்நிகழ்வு சமண சமயத்தின் பண்பாட்டு அங்கமாகத் திகழ்கிறது.

    இதன்படி சமண சமயத்தினைத் தீவிரமாகப் பின்பற்றுபவர்கள் இறுதிக்காலங்களில் உண்ணா நோன்பிருந்து உயிர் துறத்தல் என்ற செயலினை மேற்கொள்வர்.

    ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இச்செயலை இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 306 தற்கொலைக்கு உடந்தையாயிருத்தல் (Abetment of suicide) மற்றும் பிரிவு 309 தற்கொலை செய்து கொள்ள முயற்சி Attempt to Commit Suicide) என்று குறிப்பிட்டு தீர்ப்பு வழங்கியது. பின் இத்தீர்ப்பிற்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடைவிதித்த உச்சநீதிமன்றம் சமய வழக்கத்தினைப் பின்பற்ற அவர்களுக்கு உரிமை உள்ளது என்றும் கூறியுள்ளது.

    இந்தியாவில் சமணர்கள் சிறுபான்மையினராக கடந்த 20.01.2014-இல் அறிவிக்கப்பட்டனர்.

    தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் 1992-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதல்படி ஏற்படுத்தப்பட்டு, சிறுபான்மையினர் ஆணையமும் அமைக்கப்பட்டது. 1993-ஆம் ஆண்டு இச்சட்டத்தின் மூலம் முஸ்லீம், கிறிஸ்தவர், சீக்கியர், பெüத்தர் மற்றும் பார்சி ஆகிய ஐந்து சமயத்தினைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மையினர் அந்தஸ்து பெற்றனர்.

    இதில் இந்திய மக்கள் தொகையில் 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 0.36 சதவிகிதம் கொண்டுள்ள சமணர்கள் (JAINS) 6-வது சமயமாக சிறுபான்மையினராக அங்கீகாரம் பெற்றுள்ளனர்.

    தற்போதைய தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நஸீம் அகமது இருந்து வருகின்றார்.

    சமண சமயத்தின் வரலாற்றுப் பின்புலம் நெடியது. சுமார் 3000 ஆண்டுகள் பழமையானது. சமண சமயத்தினைத் தோற்றுவித்தவர் ரிஷபர் ஆவார். இதில் 24 தீர்த்தங்கரர்கள் தோன்றினர். அச்சமயத்தின் கொள்கைகளை மக்களிடம் பரப்பினர்.

    23-ஆவது தீர்த்தங்கரரான பார்சுவநாதருக்குப் பிறகு 24-ஆவது தீர்த்தங்கரராக வந்தவரே நம் அனைவராலும் அறியப்படும் வர்த்தமானர் என்ற இயற்பெயர் கொண்ட மகாவீரர் ஆவார்.

    இவர் கி.மு.540-ஆம் ஆண்டு பிறந்தவர். அப்போதைய 16 மகாஜனபதங்களில் ஒன்றான வஜ்ஜியில் உள்ள வைசாலியில் குண்ட கிராமம் என்னுமிடத்தில் பிறந்தவர்.

    இத்தீர்த்தங்கரர்கள் சமண சமயத்தினைப் பின்பற்றுபவர்களுக்கு 4 கொள்கைகளைப் போதித்தனர்.

    1. அகிம்சா - உயிர்களைக் கொல்லாமை

    2. சத்யம் - பொய்கூறாமை

    3. அஸ்தேயம் - களவாமை

    4. அபரிகிரகம் - பொருள் சேர்க்காமை

    24-வது தீர்த்தங்கரரான மகாவீரர் இதில் 5-ஆவதாக ஒரு கொள்கையினைச் சேர்த்தார். அது பிரம்மச்சாரியம் எனப்படும் முழுமையான துறவு வாழ்க்கையாகும். இந்த 5-வது கொள்கை சம்பந்தமாக பலமுறை குடிமைப்பணித் தேர்வுகளில் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.

    மேலும் சமண சமயத்தின் மூன்று ரத்தினங்கள் (Three Jewels) என்று அழைக்கப்படுவன பின்வருமாறு:

    1. நல்லறிவு (Right knowledge)

    2. நன்னம்பிக்கை (Right Faith)

    3. நன்னடத்தை (Right Conduct)

     

    இவ்வாறாக இச்சமயத்தின் கொள்கைகள் மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டன. மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். பின்பற்றினார்கள்.

    அரச குடும்பத்தில் பிறந்த மகாவீரர் 72 வயது வரை வாழ்ந்தார். அனைத்தையும் துறந்து துறவியாய், மக்களை துன்பத்திலிருந்து மீட்டெடுக்க தன் வாழ்வையே அர்ப்பணித்தார். சமண சமயத்தின் கொள்கைகள் மற்றும் புனிதக் கருத்துக்கள் 14 பூர்வாக்களாக (PURVAS) தொகுக்கப்பட்டன. அவை சிதிலமடைந்தன. பின்னர் 12 அங்கங்கள் (ANGAS) எனத் தொகுத்தனர்.

    சமண சமயத்தின் முதல் மாநாடு கி.மு.300-இல் பாடலிபுத்திரத்தில் நடைபெற்றது. ஸ்தூலபத்திரர் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.

    இரண்டாவது மாநாடு கி.பி.512-இல் குஜராத்தில் உள்ள வல்லபி என்னுமிடத்தில் நடைபெற்றது. தேவார்தி சேம்சர்மானா மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.

    மகாவீரருக்குப் பிறகு சமண சமயத்தில் பல பிரிவுகள் தோன்றின. சமண சமயத்தினைப் பின்பற்றியவர்கள் திகம்பரர்கள் (DIGAMBARAS) என்றும் ஸ்வேதம்பரர்கள் (SWETHAMBARAS) என்றும் பிரிந்தனர். திகம்பரர்கள் என்ற பிரிவிற்கு பத்ரபாகு (BHADRABAGU) என்பவர் தலைமையேற்றார். இவர்கள் வானமே ஆடை (SKY CLAD) என்று கூறி ஆடைகள் உடுத்துவதில்லை.

    ஸ்வேதம்பரர்கள் என்ற பிரிவிற்கு ஸ்தூலபத்திரர் (STHULABADRA) என்பவர் தலைமை ஏற்றார். இவர்கள் வெண்ணிற ஆடைகள் உடுத்தினர்.

    பின்னர் திகம்பரர் பிரிவில் இருந்து சமையர்கள் (SAMMIYAS) என்ற புதிய பிரிவு தோன்றியது. இவர்கள் சிலை வழிபாட்டைப் புறக்கணித்தார்கள்.

    ஸ்வேதம்பரர்கள் பிரிவில் இருந்து தேராபந்திகள் (TERAPANTHIS) என்ற புதிய பிரிவு தோன்றியது.

    ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய சமயமாக சமணம் விளங்குகின்றது. எனினும் அதன் கொள்கைத் தாக்கங்கள் இன்றளவும் தொடர்வது அச்சமயத்தின் ஆழ்ந்த மன ஊடுருவலையே காட்டுகின்றது.

    கர்நாடக மாநிலத்தில் சரவணபெலகோலா என்னுமிடத்தில் உள்ள கோமதீஸ்வரர் கோயில் மற்றும் பாகுபலி சிலை, ராஜஸ்தானின் அபு குன்றில் உள்ள தில்வாரா கோயில், பதாமி, அய்கோல், அத்திக்கும்பா மற்றும் உதயகிரி குடைவரைக் கோவில்கள் போன்றவை சமணர்களின் கட்டிடக்கலை பங்களிப்பு ஆகும்.

     

    (தொடரும்)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai