சுடச்சுட

  
  17im2

  மரங்களை வெட்டாதீர்கள். வீட்டுக்கொரு மரம் வளருங்கள்' என்பன போன்ற குரல்கள் இப்போது ஒலிக்கத் தொடங்கிவிட்டன. புவி வெப்பமயமாதல், ஓúஸான் படலத்தில் ஓட்டை விழுந்தது, பருவநிலை மாற்றங்கள், மழை பெய்ய வேண்டிய நேரத்தில் பெய்யாமல் பொய்த்துவிடுவது, மூச்சுவிடத் தகுதியில்லாத அளவுக்குக் காற்று மாசடைந்து போய்விட்டது எல்லாமும் சேர்ந்து இப்படிப்பட்ட சிந்தனைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

  வீட்டுக்கொரு மரம் வளர்க்க அல்ல, "வீட்டுக்கொரு காட்டை உருவாக்குங்கள்' என்கிறார் சுபேந்து சர்மா. உத்தரகண்டைச் சேர்ந்த அவர் தற்போது முழுமூச்சாக காடுகளை வளர்க்கும் பணியில் காலூன்றி நிற்பது பெங்களூருவில்.

  2011 இலிருந்து இதுவரை சுமார் 54 ஆயிரம் மரங்களை நட்டு வளர்த்திருக்கிறார் அவர்.

  டயோட்டா நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்து வந்த அவர், நிறையச் சம்பளம் வாங்கிய அந்த வேலையை விட்டுவிட்டு காடுகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

  ""நான் டயோட்டா நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவகி வந்திருந்தார். அவர் தாய்லாந்து, ஜப்பான் முதலிய நாடுகளில் காடுகளை உருவாக்கியவர். அவருடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரிடம் இருந்து மரம் வளர்ப்பு பற்றி நிறையத் தெரிந்து கொண்டேன். அதுவே என்னை 2011 இல் டயோட்டா நிறுவன வேலையை விடும் அளவுக்கு ஆர்வத்தைத் தூண்டிவிட்டது.

  டயோட்டா நிறுவன வேலையை விடுவதைப் பற்றி என் வீட்டில் சொன்னதும் பெரும் புயல் ஏற்பட்டது. "நல்ல வருமானம் வரும் வேலையை விட்டுவிட்டு என்ன செய்யப் போகிறாய்?' என்ற அவர்களுடைய கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை. சொல்ல முடியவில்லை''என்கிறார் சுபேந்து சர்மா.

  2011 இல் டயோட்டா வேலையை விட்ட அவர் "அஃபாரஸ்ட்' என்ற நிறுவனத்தை நண்பர்களின் உதவியுடன் தொடங்கியிருக்கிறார்.

  இந்த நிறுவனத்தின் வேலை, வீட்டுக்கருகில் உள்ள இடத்தில் காடுகளை உருவாக்குவதுதான்.

  ""வீட்டுக்குப் பின்னால் 100 சதுர அடி காலி இடம் இருந்தால் போதும், அங்கே சுமார் 30 மரங்களை வளர்க்கலாம்'' என்கிறார் அவர். உத்தரகண்டில் உள்ள அவருடைய வீட்டின் பின்புறத்தில்தான் அவருடைய "சோதனைக் காடு' முதலில் உருவாகியது.

  ""அகிரா மியாவகியிடம் கற்றுக் கொண்ட தொழில்நுட்பங்கள் எனக்கு மிகவும் உதவின. 100 ஆண்டுகளாக வளர்ந்துள்ள இயற்கையான காட்டைப் போல ஒன்றை அவருடைய தொழில்நுட்பத்தின் உதவியுடன் 10 ஆண்டுகளிலேயே உருவாக்கிவிடலாம். அந்த தொழில்நுட்பத்தைத்தான் நான் பயன்படுத்துகிறேன். ஒரு மரம் ஓராண்டில் சராசரி ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரும். 2 ஆண்டுகளில் 3.4 மீட்டர் உயரம் வரை வளரும்'' என்கிறார் சுபேந்து சர்மா.

  "வீட்டுக்கருகில் காடு' என்ற அவருடைய திட்டத்தை நடைமுறைப்படுத்த முதலில் உதவியது, ஒரு ஜெர்மன் ஃபர்னிச்சர் நிறுவனம்தான். அது 10 ஆயிரம் மரங்களை நட்டு வளர்க்க ஆர்டர் தந்தது. இப்போது 43 நிறுவனங்களில் காடுகளை வளர்த்து வருகிறார் சுபேந்து சர்மா. டெல்லி, உத்தராஞ்சல், பெங்களூரு, நைனிடால், இந்தூர், புனே உள்ளிட்ட 11 நகரங்களில் இந்தக் காடுகள் உருவாகி வருகின்றன.

  ""ஒருவர் தனது வீடு, நிறுவனத்துக்குப் பக்கத்தில் காடு ஒன்றை உருவாக்க விரும்புவதாக எங்களுக்குத் தெரிவித்தால், நாங்கள் முதலில் அங்கே சென்று அந்தப் பகுதியின் மண் வளத்தை ஆய்வு செய்வோம். அதற்குப் பிறகு அந்தப் பகுதியில் உள்ள பூச்சிகள், பறவைகள் போன்ற உயிரினங்களைப் பற்றியும் ஆய்வு செய்வோம்.

  அந்தப் பகுதியில் என்ன மரக்கன்றுகளை நடலாம் என்று திட்டமிட்டிருக்கிறோமோ, அதை வேறொரு இடத்தில் வஹளர்ப்போம். அந்தப் பகுதி மண்ணில் உள்ள குறைபாடுகளைத் தெரிந்து கொண்டு மண்ணுக்குத் தேவையான சத்துகளை முதலில் நிரப்புவோம். பின்புதான் மரக்கன்றுகளை நடுவோம். பிறகு அதைப் பாதுகாக்கும் பணியையும் செய்து தருகிறோம்.

  ""மரத்தை மட்டும் நட்டுக் கொடுத்துவிடுங்கள். பாதுகாக்கும் பணியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்'' என்று வாடிக்கையாளர்கள் சொன்னால், அவர்களுக்கு மரங்களைப் பாதுகாக்கும் பயிற்சியைத் தருகிறோம். ஒரு காலி இடத்தில் 2 ஆண்டுகளில் ஒரு காட்டை உருவாக்கிக் கொடுத்துவிடுகிறோம்'' என்கிறார் சுபேந்து சர்மா.

  சமுதாயத்துக்கு, ஏன் உலகுக்கே பயன்படும் ஒரு செயலைத் தனிமனிதர் ஒருவர் செய்து வருகிறார் என்றால், ஒவ்வோர் இளைஞராலும் இதைப் போல சாதனைகள் செய்ய முடியும் என்பதுதானே உண்மை?

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai