Enable Javscript for better performance
இணைய வெளியினிலே! - Dinamani

சுடச்சுட

  
  im9

  முக நூலிலிருந்து...

   

  வாசனைகள் வெறும் நாசியைத் துளைத்து அந்நொடி நேர பொழுதில் கிளிர்ச்சியுறச் செய்யும் சாதாரண செயலென கடந்து போக இயலவில்லை. அவை மங்கிய ஒளியில் மண்டிக்கிடக்கும் நினைவுகளை மீட்டெடுக்கும் அதிஅற்புத மந்திரக்கோல்கள். நினைவுகள் அனைத்திற்கும் தனித்தனியே ஒரு பிரத்யேக வாடையிருக்கிறது. பால்ய காலங்களை சடுதியில் நுகர எண்ணெய் தேய்த்து வாரிய தூசிபடிந்த அவளின் தலைமுடியின் இடுக்குகளில் கசங்கித் தொங்கும் செம்பருத்திப்பூவின் பிசுப்பிசுப்பான வாடை போதுமானது. கொடுக்காபுளி விதையின் துவர்ப்பான வாடை பதின்வயதில் காமத்தின் உடனான முதல் சந்திப்பில் நிகழ்ந்த அசூயையை மீண்டும் புத்தம் புதிதாய் உணர வைக்கிறது. நூலகத்தின் ஜன்னல் கம்பி பட்டு புத்தகத்தின் தாளில் தெறித்த மழைத்துளியின் வாடை இன்று நான் வாசிக்கும் ஏதோவொரு புத்தகத்தில் ஒட்டிக் கொண்டு சுகந்தத்தை அளிக்கவே செய்கிறது. கோகுல் சாண்டல் பவுடரின் வாடைக்குப் பின்னால் சிறுவயதின் இயலாமையும், தவிப்புமிருக்கிறது. மூக்கை மூடச் செய்யும் மூத்திரவாடை, நன்கு ஆடி வீழ்ந்த ஒரு கிழவனின் கதையையும், அவருக்கு பின் உருத் தெரியாமல் அழிக்கப்பட்ட ஒரு நீண்ட தெருவின் கதையையும் சொல்லிக் கொண்டே தானிருக்கிறது. வெறுமையான வாழ்க்கைக்கு வாசனைகள் தேவையாகயிருக்கிறது.

  - சுந்தர் காந்தி.

   

  மழை நிலத்தை

  விளை நிலமாய்

  விட்டுவைக்காமல்,

  மனை நிலமாய்

  மாற்றிக்கொண்ட

  வினை நலத்தோரே...

  மழை மீதா

  பிழை காண்பீர்

  - மகுடேசுவரன்.

   

   

  புறா ஏம்மா உயரமா

  பறக்க மாட்டேங்குது?

  ஏன் கண்ணு?

  பாரு பயந்து பயந்து

  மாடி மேல் உட்கார்ந்துக்கிது

  இது வீட்டுப்புறாப்பா

  இவ்வளவு தான் பறக்கும்

  வீட்டுப்புறான்னா

  உயரப்பறக்காதா?

  ஆமாம் கண்ணு

  பறக்க முடியும்னு வீட்டுப்புறாக்கு

  மறந்திடுச்சி

  உன்னையும் என்னையும் போல.

   

  -வெண்ணிலா.

   

   

  குழந்தைகளிடம் இருந்து குழந்தைமையை பிரிக்க காலத்திற்கும் வயதிற்கும் மட்டுமே அனுமதியுண்டு. அது கல்வியாகட்டும், நெருக்கடியாகட்டும், நிர்பந்தமாகட்டும், கலையாகட்டும், ஊடகமாகட்டும் எது ஒன்று குழந்தைகளிடம் இருந்து குழந்தைமையை பறிக்கின்றதோ அது எல்லாமே வன்முறை தான்.

  -விழியன்

   

   

  சில்லறை என்பது நாணயத்தை குறிக்கும். பல நேரங்களில் அது மனிதர்களையும் குறிக்கும்.

  உலகில் இரண்டு வர்க்கம்தான். ஒன்று, சொல்பவன். இரண்டு,அதைச் செய்பவன்.

  -கடற்கரய்.

   

   

  இரண்டு நண்பர்களுக்கிடையே மத்தியஸ்தம் செய்யாதீர்கள், ஒரு நண்பரை இழந்துவிடுவீர்கள் இதையே இரண்டு அந்நியர்களுக்கிடையே செய்தால் நல்ல நண்பரை பெறுவீர்கள்.

  - ரமணி பிரபா தேவி.

   

   

  வலைத்தளத்திலிருந்து

  எழுத்தாளனின் வேலை எழுதுவது மட்டுமில்லை, நல்ல இலக்கியங்களை அறிமுகம் செய்வதும், சமூக அக்கறை சார்ந்து தன்னளவில் செயல்படுவதும், பிற படைப்புகளை வாசித்து எதிர்வினை தருவதும், பள்ளி, கல்லூரி, ஊடகம் என பலதரப்பிலும் எழுத்து, வாழ்க்கை சார்ந்த அனுபவங்களை, வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகும்.

  போர்ஹே பல்கலைகழக மாணவர்களுக்காக ஆங்கில இலக்கியம், செவ்வியல் நாவல் என்று நூறு சிறப்புரைகள் ஆற்றியிருக்கிறார்.

  இப்படி நான் அறிந்தவரை உலக இலக்கியவாதிகளான நபகோவ், வில்லியம் பாக்னர்,மார்க்வெஸ், உம்பர்த்தோ ஈகோ, வோலே சோயிங்கா, ரேமண்ட் கார்வர், டி.எஸ். எலியட், எஸ்ரா பவுண்ட் என பலரும் கல்விப்புலங்களில் தொடர்ந்து சிறப்புரைகள் ஆற்றியிருக்கிறார்கள். இளம் எழுத்தாளர்களுக்கான பயிலரங்குகள், கருத்தரங்குகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள். தனது அக்கறைகளைப் பகிர்ந்து கொள்ள அவர்கள் எந்த இடத்திலும் தயங்கியதேயில்லை.

  அதிலும் இலக்கியம், தத்துவம், மொழியியல் என பல்துறை சார்ந்து உம்பர்தோ ஈகோ போன்றவர்கள் வருசத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட செமினாரில் கலந்து கொள்கிறார்கள். நல்ல இசைக்கலைஞர்கள் எவ்வளவு பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்பதில் கவனம் கொள்ளாமல் கிடைத்த மேடைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அது தான் சிறப்பு. அப்படி தான்

  தமிழின் முன்னோடி எழுத்தாளர்களும் இயங்கியிருக்கிறார்கள் www.sramakrishnan.com

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai