சுடச்சுட

  
  im11

  ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர் கல்வி எட்டாக் கனியாக மாறிவிட்டது. தனியார் கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் அதிகமான கட்டணங்களைப் பார்த்தும் ஏழை மலைத்துப் போய் நின்றுவிடுவான். இந்த நிலையை மாற்றுவதற்கு உதவுகிறது கல்விக் கடன்.

  உள்நாட்டில் கல்வி பயிலுவதற்கு மட்டுமின்றி, வெளிநாடுகளில் படிப்பதற்கும் பெரும்பாலான வங்கிகள் தற்போது கடன் வழங்குகின்றன. இதனால் ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி கற்க முடிகிறது.

   

  கடன் தொகை: உள்நாட்டில் கல்வி பயில குறைந்தபட்சம் ரூ. 50,000 முதல் அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

  வெளிநாடுகளில், கல்வி பயில ரூ. 15 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது (பாரத ஸ்டேட் வங்கி மட்டும், சிறப்புப் பிரிவின் கீழ் ரூ. 30 லட்சம் வரை கடன் வழங்குகிறது).

  கடனுக்காக விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப ஆண்டு வருமானத்தைப் பொறுத்தே கடன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. வங்கிக்கு வங்கி, கல்விக் கடனுக்கான வட்டித் தொகை மாறுபடுகிறது. கடன் தொகை, திருப்பிச் செலுத்தப்படும் காலம் ஆகியவற்றைப் பொறுத்து வட்டித் தொகை ஆண்டுக்கு 9.7 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை மாறுபடுகிறது. கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தைப் பொருத்தவரை, பெரும்பாலான வங்கிகளும் 5 முதல் 7 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்குகின்றன.

  வெளிநாடுகளில், கல்வி பயிலுவதற்காக மட்டும், சில சிறப்புப் பிரிவுகளின் கீழ் 10 முதல் 15 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது.

  பெரும்பாலும், ரூ. 4 லட்சம் வரையிலான கடனுக்கு மட்டும் எந்தவிதமான இணையும் (கொலேடிரல்) கேட்கப்படுவதில்லை. எனினும், இரு நபர் உத்தரவாதம் அவசியமாகும்.

  ரூ. 4 லட்சத்துக்கு மேற்பட்ட கடனுக்கு, அதே தொகைக்கு இணையான அடமானம் (வீடு, நிலம், தங்கம் உள்ளிட்டவை) தேவைப்படும்.

   

  எப்படி திருப்பிச் செலுத்துவது?: கல்விக் கடனானது, சம்பந்தப்பட்ட மாணவரின் பெயரிலேயே வழங்கப்படும். மாணவர், பட்டம் பெற்ற பிறகு, வேலைக்குச் சேர்ந்த 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் வட்டியுடன் சேர்த்து கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.

   

  கவனிக்க வேண்டியவை:

   

  மாணவர், கணக்கு வைத்துள்ள வங்கியிலேயே கல்விக் கடன் கோருவது நல்லது.

   

  கல்விக் கடன் எடுக்கும் மாணவர், ஆயுள் காப்பீடு (டெர்ம் இன்ஷூரன்ஸ்) திட்டத்தில் சேருவது நலம் பயக்கும்.

   

  கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, சான்றளிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள், வயது, முகவரி, அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள், குடியிருப்புச் சான்றிதழ், கல்விக் கட்டண விவரங்கள், பெற்றோர்/பாதுகாவலர், உத்தரவாதம் அளிப்பவர் குறித்த ஆவணங்கள், உறவுமுறைக்கான ஆதாரம், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), விஸா உள்ளிட்டவற்றைத் தயாராக வைத்திருப்பது அவசியம்.

   

  கல்விக்கடன் பெறுவது குறித்த நடைமுறைகள், தற்போதைய வட்டி விகிதம் உள்ளிட்ட விவரங்களை வங்கிகளின் இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்வதுடன் நிற்காமல், வங்கிகளை நேரில் அணுகி விவரங்களை அறிவது சிறந்ததாகும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai