Enable Javscript for better performance
சந்திரனுக்குச் சாதாரண மக்களும் சென்று வரலாம்!- Dinamani

சுடச்சுட

  
  im1

  ""சாமானியர்களும் கூட சந்திரனுக்குச் சென்று பார்த்துவரும் நாள் வெகு தொலைவில் இல்லை'' என்கிறார் நாசாவில் முக்கிய ஆய்வுப் பிரிவில் பணியாற்றிவரும் எல்.ஆர்.குபேந்திரன்.

  மதுரை கீழவாசல் பகுதியில் பிறந்து, செüராஷ்டிர ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பாலிடெக்னிக்கில் பயின்று, ஐ.ஐ.டி.யில் ஆய்வில் ஈடுபட்டு, விண்வெளி ஆய்வுக்கான மேற்பட்டப்படிப்பு இந்தியாவில் இல்லாத நிலையில் அமெரிக்கா செல்ல வேண்டிய கட்டாயத்தில் 1978 முதல் 1983 வரை அங்கு படித்திருக்கிறார் குபேந்திரன்.

  தற்போது அமெரிக்காவின் நாசாவில் விண்வெளியில் குறிப்பாக வேற்றுக்கிரகத்துக்குச் செல்லும் விண்வெளி ஓடங்களின் வடிவமைப்பு, விண்வெளி வீரர்களுக்கு தேவையான பொருள்களைத் தயாரிப்பது உள்ளிட்ட ஆய்வுப் பிரிவில் அவர் கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக இருந்து வருகிறார்.

  தற்போது நாசா தலைமையகத்தில் விண்வெளியில் செயற்கைக் கோள் அல்லது ஆய்வு மையத்தை நிலைநிறுத்துவது குறித்த எதிர்கால ஆய்வுப் பிரிவில் திட்ட செயலாக்கத்தில் பொறுப்பில் இருக்கிறார். அங்கே உள்ள 1500 அறிவியல் ஆய்வாளர்களில் சுமார் 15 பேர் என்ற அளவிலே இந்தியர் உள்ளனர். அதில் தமிழர்கள் மிகவும் குறைவு. அவர்களில் குபேந்திரனும் ஒருவர். குபேந்திரனிடம் பேசியபோது...

  ""விண்வெளி ஆய்வைப் பொறுத்தவரை சந்திரன், செவ்வாய்க் கிரகத்தில் எதிர்காலத்தில் மனிதர்கள் குடியேறி வாழ்க்கை நடத்துவது குறித்தான ஆய்வே முக்கிய இடம் பெறுகிறது. அதன்படி இன்னும் 10 ஆண்டுகளில் சந்திரனுக்கு விண்வெளி வீரர்கள் மட்டுமின்றி சாமானியர்களும் கூட சென்றுவரும் நிலை நிச்சயம் ஏற்படும். தற்போது 3 நாள்களில் சந்திரனுக்குச் சென்று வரும் சாத்தியம் உள்ளது.

  சந்திரனில் மனிதர் வாழ்வதற்கு என்ன என்ன இல்லை என்பதை கிட்டத்தட்ட முழுமையாக அறிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே அங்கு மனிதர் வாழ்க்கைக்கு இல்லாதவற்றையெல்லாம் அறிவியல் முறையில் செயற்கையாக உற்பத்தி செய்து வாழ வழி வகை செய்யும் ஆய்வுகளிலே அதிகமாக ஈடுபட்டுள்ளோம். ஆய்வு முடிவு நிச்சயம் சாதகமாகவே அமையும். ஆகவே சந்திரனில் சாமானியர் உலாவும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  செவ்வாய்க் கிரகத்தைப் பொறுத்தவரை பூமியிலிருந்து சென்று வர கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகும். சந்திரனைப் பூமியிலிருந்து செல்லும் ராக்கெட் அடைவதற்கே 6 மாதமாகலாம். அதன் பின் அதன் சுற்றுவட்டப் பாதையில் ராக்கெட்டை செலுத்தி, அதன் தளத்தில் இறக்குவதற்கு பல மாதங்கள் தேவைப்படும்.

  சமீபத்தில் அமெரிக்கா அனுப்பிய கியூரியாசிட்டி விண்கலம் 1 டன் அளவே இருந்தது. ஆகவே கூடுதல் எடையுடன் செவ்வாயில் இறங்கும் விண்கலத்தை வடிவமைப்பது குறித்தே ஆய்வு நடந்துவருகிறது.

  புவி ஈர்ப்பு விசையின்றி பல மாதங்கள் வாழும் திறனை பெறும் வீரர்களே செவ்வாய் போன்ற நீண்ட தூர கோள்களுக்கு செல்லமுடியும். வீரர்களுக்கான உணவு, உடை, உடல் ஆரோக்கிய தன்னை ஆகியவை தற்போது செவ்வாய்க்குச் செல்வதில் பெரும் சவாலாக உள்ளன. அதையே நாங்கள் தற்போது ஆய்வில் முக்கிய அம்சமாக கருதியுள்ளோம்.

  தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அமெரிக்க வீரர் ஒருவரை ஓராண்டுக்கும் மேலாகத் தங்க வைத்து ஆய்வு நடத்தி வருகிறோம். அவரைப் போல மேலும் இருவரை நீண்டகாலம் விண்வெளியில் தங்க வைத்த பிறகே செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் நிறைவேறும். ஆய்வு அடிப்படையில் 2035 ஆம் ஆண்டு செவ்வாயில் மனிதர்கள் காலடி பதிக்கும் நிலை ஏற்படும். அயல் கிரகத்தில் மனிதர்கள் வாழத் தொடங்கும் போது தண்ணீர், காற்று, உணவு என அனைத்தையும் செயற்கையாக உருவாக்கும் நிலையே இருக்கும்.

  விண்வெளி ஆய்வைப் பொறுத்தவரையில் அமெரிக்காவுக்கு போட்டியாக தற்போது சீனா ஈடுபட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை விண்வெளி ஆய்வில் முன்னேறிவரும் நாடாகவே உள்ளது. சந்திரனுக்குச் சென்ற சந்திராயன், செவ்வாயை நெருங்கிய மங்கள்ராயனில் அமெரிக்க ஒத்துழைப்பு இருந்ததையும் நாம் மறுக்கமுடியாது. ஆனால் முதல் முயற்சியிலேயே செவ்வாயை மிக நெருங்கிய இந்தியாவின் ஆய்வு அனைத்து நாடுகளையும் ஆச்சரியப்படுத்தியது என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும்.

  நமது நாட்டு பல்கலைக்கழகங்கள் இளைஞர்களை விண்வெளி ஆய்வில் ஈடுபடுத்த வேண்டும். விண்வெளி ஆய்வில் உலக அளவிலும், இந்தியாவிலும் வேலைவாய்ப்பு அதிகமுள்ளது.

  அறிவியல் ஆய்வில் ஈடுபடுவோருக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் ஓய்வு வயதில்லை. ஆனால், இந்தியாவில் மிகப்பெரிய அறிவியல் விஞ்ஞானியும் கூட 60 வயதில் ஓய்வு பெற வேண்டும். இதை மாற்றி அமைப்பது எதிர்கால ஆய்வு வளர்ச்சிக்கு உதவும்'' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai