சுடச்சுட

  

  நாளை நான் ஐஏஎஸ்! இரு தரப்பு உறவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்!

  By மு.சிபிகுமரன்  |   Published on : 24th November 2015 11:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  im4

  பூமி இளைத்த இடத்தில் எரிமலையாய் வெடிக்கிறது. கனத்த இடத்தில் பெருமலையாய் உயர்கிறது. அனைத்தும் பூமி ஆற்றலின் புதிய பிறப்புகள்.

  நூல்களைக் கற்று ஆற்றலைப் பெருக்குங்கள். அதிசயங்கள் என்னும் வெற்றிகள் பிறக்கும்.

  தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முகப்பாக விளங்குகின்றது மியான்மர் நாடு. இங்கு சமீபத்தில் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மியான்மரில் மக்களாட்சியை ஏற்படுத்திடத் தொடர்ந்து அறவழியில் போராடி வரும் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் வெற்றி பெற்றுள்ளது.

  ஆட்சி அமைப்பதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு இடத்தைவிட அதிகமான இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

  இந்தியாவின் அண்டை நாடான மியான்மர் ஜனநாயகப் பாதையில் திரும்புவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகிறது. இந்தியாவுக்கு மிகவும் அவசியமான நட்புநாடு மியான்மர் ஆகும். ஏனெனில், வடகிழக்கு இந்திய மாநிலங்களான மிசோராம், மணிப்பூர், நாகலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்றவற்றுடன் மியான்மர் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றது. எல்லையின் நீளம் சுமார் 1643 கி.மீ.ஆகும்.

  குடிமைப்பணித் தேர்வுகளில் இரு தரப்பு உறவுகள் (ஆஐகஅபஉதஅக) என்பதனை பின்னணியாகக் கொண்டு முதன்மைத் தேர்வில் 30 முதல் 100 மதிப்பெண்கள் வரை கேட்கப்படுகின்றது. அந்த வகையில் இந்தியாவுடனான மியான்மர் நாட்டின் உறவு நடப்பு நிகழ்வின் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுகிறது.

  இந்தியாவும், மியான்மர் நாடும் மதம், மொழி மட்டுமல்லாது பாரம்பரியத்தையும் பகிர்ந்து கொள்கின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மியான்மர் மட்டுமே இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்ற நாடாக விளங்குகின்றது.

  சமீபத்தில் மியான்மர் நாட்டின் குடியரசுத் துணைத்தலைவர் டாக்டர்.சாய் மேளக் காம், இந்தியாவின் குடியரசுத் தலைவரை புதுதில்லியில் சந்தித்தார்.

  அப்போது இந்தியக் குடியரசுத் தலைவர், இருநாடுகளுக்கு இடையேயான உறவு பல ஆண்டுகளாக விரிவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் தூண்டுகோலாக உள்ளது. மண்டலத்தின் வளத்திற்கும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் தேவையான அமைதியான, திடமான மற்றும் ஒருங்கிணைந்த அண்டை நாட்டு உறவை வளர்க்க இந்தியா உறுதியுடன் உள்ளது. மண்டல அளவிலும், சர்வதேச அரங்கிலும் மியான்மரின் செயல்பாடுகளை இந்தியா வரவேற்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் அவர், ""மிக அருகில் உள்ள நாடுகளுடன் உறவை வளர்க்காமல், நாடு முழுமையான மற்றும் திடமான வளர்ச்சி அடையாது. பாரம்பரிய மாநிலங்களில் அமைதியையும், திடத்தன்மையையும் ஏற்படுத்தவும், தேசிய அளவில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வரவும் இந்திய அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்'' என்றும் கூறியுள்ளார்.

  குடிமைப்பணித் தேர்வுகளில் இந்தியாவின் உலக அரசியல், சர்வதேச உறவு, உலக அமைதி தொடர்பான தலைப்புகளில் கட்டுரை வந்தால் இந்தியக் குடியரசுத் தலைவரின் மேலே கண்டுள்ள கருத்துக்களை எடுத்துப் பயன்படுத்தலாம்.

  அந்த வகையில் இந்தியா, மியான்மர் நாட்டுடனான உறவை மேம்படுத்திட பல்வேறு வகைகளில் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

  தற்போது மியான்மர் நாட்டில் காலடான் பல்நோக்கு சரக்கு போக்குவரத்து எனும் திட்டத்தினை இந்தியா செயல்படுத்தி வருகின்றது.

  இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.2904.04 கோடி செலவிற்கு சமீபத்தில் இந்தியப் பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

  இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிக்கு மாற்றுவழி ஏற்படுத்தப்படும். அப்பகுதிகளின் பொருளாதார வளம் மேம்படும்.

  மேலும் இந்தியாவுக்கும் மியான்மர் நாட்டுக்குமான வர்த்தகத் தொடர்புகள் வளர்ச்சி பெறும்.

  2003 ஆம் ஆண்டு இத்திட்டம் குறித்து துறைமுகம் மற்றும் உள்நாட்டு நீர்வழிப் பாதைகளைப் பற்றி அறிக்கைகள் தயார் செய்யப்பட்டன.

  இந்திய ரயில்வே அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனம் சிட்வி துறைமுகத்தில் இருந்து கலெட்வா வரையிலான காலடான் நதிவழியே செல்லும் நீர்வழிப்பாதையை பரிந்துரை செய்தது. காலெட்வாவிலிருந்து இந்தியா - மியான்மர் எல்லைப் பகுதி வரை சாலை வழிப் பாதை அமையும், நிலம், நதி, கடல் என அமைவதால் இது பல்நோக்கு சரக்கு போக்குவரத்துத் திட்டம் எனப்படுகின்றது.

  இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்தும், வடகிழக்குப் பகுதியிலிருந்தும் மியான்மர் நாட்டுக்கு கப்பல்கள் மூலம் சரக்குகள் கொண்டு செல்ல இத்திட்டம் பெரிதும் பயன்படும்.

  இதுபோன்ற மாற்றுவழிப் பாதை இருநாடுகளின் அரசியல் பொருளாதார மேம்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும், பாதுகாப்பிற்கும் அவசியமானதாக விளங்குகின்றது.

  முதல்நிலைத் தேர்வினை மையப்படுத்தி இந்த நடப்பு நிகழ்வின் பின்னணி தொடர்பான பகுதிகளைத் தொடர்ந்து பார்ப்போம்.

   

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai