வேலை வாய்ப்பை எளிதாக்கும் ஆங்கிலம்!

பொறியியல், வணிகவியலுக்கு அடுத்ததாக தமிழகத்தில் இளைஞர்கள் அதிக அளவில் விரும்பிப் படிக்கும் பிரிவுகளில்
வேலை வாய்ப்பை எளிதாக்கும் ஆங்கிலம்!

பொறியியல், வணிகவியலுக்கு அடுத்ததாக தமிழகத்தில் இளைஞர்கள் அதிக அளவில் விரும்பிப் படிக்கும் பிரிவுகளில் ஒன்று ஆங்கில இலக்கியம். ""ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்கும், ஆங்கிலப் புலமை வாய்ந்தவர்களுக்கும் மத்திய அரசிலும் அதைச் சார்ந்த பல்வேறு நிறுவனங்களிலும் சிறந்த வேலை வாய்ப்புகள் இருக்கின்றன'' என்கிறார் மத்திய அரசிலிருந்து ஓய்வு பெற்ற தொலை தொடர்புத்துறை இயக்குநர் என்.எம். பெருமாள். 

""தமிழகத்தில் இன்று இளைஞர்கள் விரும்பிப் படிக்கும் பாடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது ஆங்கில இலக்கியம். இன்று ஆங்கில இலக்கியப் பிரிவு இல்லாத கல்லூரிகளே இல்லை எனலாம். ஓரளவுக்குச் சிறந்த முறையில் ஆங்கில இலக்கியம் பயின்றவர்கள் தங்களது திறமைகளைச் சிறிது துறை தாண்டி வளர்த்துக் கொண்டால் குறைந்தது மாத ஊதியம் ரூ.35,000 கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

இன்று தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவு மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமை தேவையான அளவில் இல்லை. ஆதலால் பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கலந்து கொள்வதில்லை. தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வுகள், வங்கி, ரயில்வே துறைகள் நடத்தும் தேர்வுகளைத் தவிர மற்ற தேர்வுகளைப் பற்றிய விவரங்கள் அநேக தமிழக இளைஞர்களுக்குத் தெரியவில்லை. பொது அறிவுப் பாடங்களை ஆங்கிலம் வழியாக கற்றுக் கொள்ள மிகவும் தயங்குகிறார்கள். இந்த நிலையில் ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கு ஆங்கிலம் வழியாக பொது அறிவையும் கணிதத்தையும் (Numerical Ability) எளிதில் கற்றுக் கொள்ள அடிப்படைத் திறமை அமைந்துள்ளது.

பன்முக வேலை உதவியாளர் போன்ற தேர்வுகளில் கட்டுரை வடிவில் ஒரு தாள் இருக்கும். அதில் ஒரு குறிப்பிட்ட அளவு மதிப்பெண்கள் (எ.கா. 35சதவீதம்) எடுத்தால் போதும். இந்தத் தாளை ஆங்கில இலக்கிய மாணவர்கள் மிகவும் எளிதாக எழுதி தேர்ச்சி பெற முடியும்.  இளங்கலை, முதுகலை ஆங்கில இலக்கியம் படித்த - உடற்தகுதி உள்ளவர்கள் மத்திய தேர்வாணையம் நடத்தும் மத்திய படைப்பிரிவுகளின் காவல் அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்வினை எழுதலாம். மத்திய அரசின் கீழ் உள்ள எல்லைக் காவல்படை, மத்திய ரிசர்வ் காவல் படை, அஸ்ஸாம் ரைபிள்ஸ், இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழிற்சாலைகள் காவல்படை போன்றவற்றில் ஆங்கிலம் படித்தவர்கள் எளிதில் சேர முடியும்,  இத்தேர்வில் இரண்டு எழுத்துத் தாள்கள் மட்டுமே உண்டு. முதல் தாள் 250 மதிப்பெண்கள் கொண்டது. இதில் பொதுஅறிவு மற்றும் புத்திக் கூர்மை தொடர்பான கேள்விகள் கொள்குறி வகையில் வரும். இரண்டாம் தாளில் கட்டுரை, கருத்தை வெட்டி ஒட்டி எழுத வேண்டிய பகுதிகள், சுருக்கி வரைதல், பகுதியைப் படித்துப் பதில் எழுதுதல்,ஆங்கில இலக்கணம் போன்றவை  இருக்கும்.

இளங்கலை அல்லது முதுகலை ஆங்கில இலக்கியம் படித்த உடற்தகுதி வாய்ந்த இளைஞர்கள் எழுத வேண்டிய இன்னொரு முக்கியமான தேர்வு மத்திய தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்புத்துறை சேவைகள் தேர்வு ஆகும்.   முப்படைப் பிரிவுகளுக்கும் அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் இந்தத் தேர்வில் மூன்று தாள்கள் உள்ளன. மூன்றுமே கொள்குறி வகையில் இருக்கும்.
முதல் தாள் ஆங்கிலம், இரண்டாம் தாள் பொதுஅறிவு, மூன்றாம் தாள் அடிப்படைக் கணக்கு ஆகும். ஒவ்வொரு தாளிலும் உச்ச மதிப்பெண்கள் 100. மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகளில் ஆங்கில இலக்கிய பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகளில் ஆங்கிலம் பாதியாகவோ, மூன்றில் அல்லது நான்கில் ஒரு பங்காகவோ இருக்கிறது. அதனால் ஆங்கிலத் தாளில் கிட்டத்தட்ட 70 சதவீத மதிப்பெண்கள் பெற்று மற்ற தாள்களில் ஓரளவு நன்றாக எழுதினால் வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும்.
- வி.குமாரமுருகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com