முக நூலிலிருந்து....
• பிடிக்காத ஒன்றை
பிடிக்கவில்லை என்று சொல்வதை விட...
உனது பிடியை
அதற்கு கொடுக்காமல் இருப்பதே
சிறந்த மானுடம்.
- முகநூல் மாணவன்
• ஒருத்தனை...
நீங்க ஏன் மத்தவன மாதிரி
இல்லன்னு கேக்குறது
எவ்வளவு பெரிய வன்முறை?
- வெற்றிமாறன். இரா
• ஓர் இரவைக் கடப்பது எளிது...
ஒரு கனவைக் கடப்பது கடினம்.
- நேசமிகு ராஜகுமாரன்
• குரங்கிலிருந்து பிறந்தாய்,
வேட்டையாடினாய்,
வேளாண்மை கண்டறிந்தாய்,
தொழிற்புரட்சி செய்தாய்.
இன்று...
தொழில் நுட்பத்தில்
காலத்தை மாற்றினாய் .
மனிதனை போல இருக்கிறாய்...
ஆனாலும்,
இன்னும் மனிதனாக இல்லையே.
- பாரதி கவிதாஞ்சன்
• தீண்டிவிடாமல்
என் அன்பின் நிழலைச்
சுருக்கிக் கொண்ட பிறகும்...
தொந்தரவாய்த்தான் உணர்கிறாய் எனில்
புரிந்து கொள்...
வளர்கிறது உன்னுள்
எனக்கான அன்பு.
- இரா எட்வின்
சுட்டுரையிலிருந்து...
• வேலை தேடுறதுக்கே
ரொம்ப கஷ்டமா இருக்கே...
அப்ப வேலை செஞ்சா
எவ்ளோ கஷ்டமா இருக்கும்?
- சரவணன்
• பிழைக்க தெரிந்தவர்கள்
மொபைல் கம்பெனிக்காரர்கள்...
ஆளுக்கொரு மொபைலை
வாங்க வைத்து விட்டார்கள்.
எல்லாரும் எதையோ
தேடுகிறார்கள்...
சிலர் வாழ்க்கையைக் கூட.
- சிதறல்கள்
• அடுத்தவர் அழிவைப் பற்றி
சிந்திக்கும் நொடி தான்-
நம் அழிவிற்கான விதை...
ஊன்றப்படுகிறது.
- அனு
• காலம் பதில் அளிக்கும் என்று
கடிகாரம் ஒடாமல்,நிற்பதில்லை...
பிரச்னைகளைக் கண்டு
காலத்தை குறை சொல்லி
நாம் எதற்கும்
காத்திருக்க வேண்டியதில்லை!
- தேவதை
வலைதளத்திலிருந்து...
இயந்திரத் தனமான உலகத்தில் தகவல் தொழில் நுட்பம் நம்மை இறுகக் கட்டிப் போட்டு விட்டு குறைந்தபட்சம் பத்து - பதினைந்து வருடம் ஆகிவிட்டது. அலைபேசியை மணந்து கொண்டு நமது தனிமை விலை போய்விட்டது. போனை எடுத்ததும் முதல் பேச்சே, "எங்கே இருக்கிற?' போன்ற கேள்விகள் நம்மை சாதாரணமாகவே பொய் பேச வைத்து விடுகிறது.
ரயில் சினேகிதம் என்கிற வார்த்தையெல்லாம் காலப்போக்கில் கரைந்து விடும் என்பது உறுதி. செல்போன் அந்த வேலையை உறுதியாகச் செய்யும். செல்போன் இருக்கையில் உனக்கு அருகில் அமர்ந்து இருப்பவன் என்றும் அறியப் படாமலேயே போய் விடுகிறான். அவன் வாழ்வின் சுவாரஸ்யங்கள் உனக்குப் பிடிபடப் போவதில்லை. ஒரு திடீர் நட்பில், எதிர்பாரா உதவி என்பது எல்லாம் சாத்தியமே இல்லாது போய்விடும். அரசியல், சினிமா, புத்தகம், ஆன்மிகம் என்றெல்லாம் தெரியாதவர்களோடு பேசுவதற்கு சலூன் கடைகள் மட்டும் தான் செல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் இப்போது நகரங்களில் இருக்கும் சலூன்கள் எல்லாம் நவீன வகை எலைட் சலூன்கள் ஆகிப் போய்விட, தெரியாத வட மாநிலத்து ஊழியரிடம், அரைகுறை ஆங்கிலம்-ஹிந்தி கலந்து கட்டிங்கா? சேவிங்கா என்று புரிய வைப்பதிலேயே அலுப்பு வந்து விடுகிறது.
இந்த இறுக்கத்திலிருந்து சமூக வலைதளங்கள் வாயிலாவது நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் வெகு சீக்கிரமே பெரிய வன்முறைகளையும், விரோதங்களையும், ஏமாற்றங்களையும் தருகிறது. இவை எல்லாவற்றையும் தாண்டியும் ஒரு மனிதனுக்கு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ளவும், கொஞ்சமாவது மற்ற மனிதர்களோடு பழகவும் இடமளிக்கவும் செய்கிறது என்று நாம் மகிழ்வுறலாம்.
கலை மட்டுமே ஒருவனுக்கு இந்த விடுதலையை முழுமையாகச் சாத்தியப் படுத்துகிறது, கவிதை, ஓவியம், இசை, சமையல் என எந்த கலையினையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
http://thoyyil.blogspot.com