Enable Javscript for better performance
புவி வெப்பநிலையைக் குறைக்க...புதிய முயற்சி!- Dinamani

சுடச்சுட

  
  im6

  கடந்த 100 ஆண்டுகளில் 0.4 முதல் 0.8 டிகிரி செல்சியஸ் அளவிலேயே உயர்ந்திருந்த புவி வெப்பநிலை, அண்மைக்காலத்தில் மட்டும் 1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், இது இந்த நூற்றாண்டின் இறுதியில் (2100) 1.4 முதல் 5.8 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இது காலநிலை மாற்றத்தில் நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், 2030}க்குள் 1.5 டிகிரி செல்சியஸும், 2100}க்குள் 3 டிகிரி செல்சியஸும் வெப்பநிலையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
  சர்வதேச அளவில் புவி வெப்பநிலையைக் குறைக்கும் முயற்சியில் பல வகையான சூரிய புவிசார் பொறியியல் தொழில்நுட்பங்கள் பரிசோதனையில் உள்ளன.
  குறிப்பாக, கடல்மேகங்களில் உப்புநீரை தெளித்து அவற்றை பிரகாசமாக ஒளிரவைப்பதன் மூலம் சூரிய ஒளிக்கதிர்களை விண்வெளியிலேயே பிரதிபலிக்கச் செய்து புவி வெப்பநிலையைக் குறைப்பது; அதிக உயரத்தில் உள்ள வெண்பஞ்சு மேகங்களை கலைத்துவிடுவதன் மூலம் பூமியிலிருந்து பிரதிபலிக்கும் சூரியக்கதிர்கள் தடைபடாமல் விண்வெளியை நோக்கிச் செல்ல வகைசெய்வது; அடுக்கு மண்டலத்தில் மிகப்பரந்த அளவில் ஆடிகளைப் பொருத்தி சூரியக்கற்றைகளை திருப்பி அனுப்புவது உள்பட 6 வகையான முன்மொழிவுகள் உள்ளன. இவற்றில் அடுக்குமண்டலத்தில் சல்பேட் அல்லது கால்சியம் கார்பனேட் துகள்களை உமிழ்ந்து, அதன்மூலம் சூரிய ஒளியை விண்வெளிக்கே திருப்பி அனுப்பும் முயற்சியும் (Sun Dimming Experiment) ஒன்று. இந்த சோதனையை அடுத்த 6 மாதங்களில் செய்துமுடிக்க அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
  அடுக்குமண்டல கட்டுப்பாட்டு உலைவு சோதனை (Stratospheric Controlled Perturbation Experiment - SCoPEx) என்ற பெயரில் இந்த சோதனை நடைபெறவுள்ளது. இந்த சோதனையில் 2 பலூன்களில் அமிலத்தன்மையற்ற கால்சியம் கார்பனேட் துகள்கள் அடுக்குமண்டலத்துக்கு அனுப்பப்பட்டு, அவை அங்கு சுமார் 10 கி.மீ. முதல் 40 கி.மீ. உயர அடுக்கில் வெளியேற்றப்படும். இந்தத் துகள்கள் அடுக்குமண்டலத்தில் எவ்வாறு வினையாற்றுகிறது என்பதை பலூனில் உள்ள கருவிகள் ஆய்வுசெய்யும். 
  சாக்பீஸில் உள்ள கால்சியம் கார்பனேட், அடுக்குமண்டலத்தில் பரவி ஒரு குறிப்பிட்ட அளவு சூரியக் கதிர்களை விண்ணில் பிரதிபலித்து, புவியை குளிர்விக்கும் என ஹார்வர்டு விஞ்ஞானிகள் நம்புகின்றனர். 
  என்றாலும், பல்வேறு சூழலியலாளர்கள் சூரிய புவிசார் பொறியியல் ஆய்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
  அடுக்குமண்டலத்தில் தூவப்படும் இந்தத் துகள்கள் 2 ஆண்டுகள் வரை இரு துருவங்களுக்கு இடையே சூரிய வெப்பத்தில் இருந்து புவியை காக்கும் கவசமாக விளங்கும் என Nature இதழ் தெரிவிக்கிறது. குறிப்பாக, ரூ. 7 ஆயிரம் கோடி முதல் 70 ஆயிரம் கோடி செலவில் கப்பற்படை விமானங்கள் மூலம் அடுக்குமண்டலத்தில் சல்பர் டை ஆக்ஸேடை பரப்புவதன் மூலம் தோராயமாக 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை ஓராண்டுக்கு குறைக்க முடியும் என காலநிலை மாற்றத்துக்கான அரசியலமைப்புக் குழு கடந்த ஆண்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  இந்த முடிவுக்குக் காரணம் கடந்த 1991இல் பிலிப்பைன்ஸ் நாட்டின் Pinatubo மலையில் எரிமலை வெடிப்பின்போது அடுக்குமண்டலத்தில் பரவிய 2 கோடி டன் சல்பர் டை ஆக்ஸேடால் அப்பகுதியில் 18 மாதங்களுக்கு 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைந்தது குறிப்பிடத்தக்கது. 
  எனினும் ஹார்வார்டு குழு சல்பேட்டுக்குப் பதிலாக கால்சியம் கார்பனேட்டைத் தேர்வுசெய்துள்ளது. காரணம், அவை சல்பேட் அளவுக்கு சூரிய ஒளியில் வெப்பமாவதில்லை. கால்சியம் கார்பனேட் இயற்கையாக அனைத்து பொருள்களிலும் உள்ளது. சுண்ணாம்பாகவும், நாள்தோறும் பொதுமக்கள் பயன்படுத்தும் காகிதம், பற்பசை போன்றவற்றிலும் இது உள்ளது. இதனால், இந்த சோதனை மக்களுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ எந்த தீங்கையும் ஏற்படுத்தாது என ஹார்வர்டு இணையதளம் கூறுகிறது.
  சூரிய புவிசார் பொறியியலால், உயரும் வெப்பநிலையை சற்றே குறைக்க முடியும். இதன்மூலம் கடல்களில் ஏற்படும் தாக்கங்களை ஈடுகட்ட முடியும். கடல் மேற்பரப்பு வெப்பநிலையை குறைப்பதன் மூலம் பவள வெடிப்பு நிகழ்வுகளை குறைத்து, சாதகமான நிலையைப் பராமரிக்க உதவும். அதோடு, வெப்பமண்டல கடல்பகுதியில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் துருவப் பகுதியை நோக்கி நகர்வதைத் தடுக்க முடியும். 
  சூரிய புவிசார் பொறியியலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருந்தும் இதுகுறித்த ஆராய்ச்சிகள் குறைவாகவே உள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மிகத்தீவிரமான இந்தப் பிரச்னையில் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, சீனா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மட்டுமே குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன. நாம் நினைப்பதைக் காட்டிலும் வேகமாக உயர்ந்து வரும் புவி வெப்பநிலையை மட்டுப்படுத்த குறைந்தபட்ச தற்காலிகத் தீர்வான இந்த ஆய்வில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்பதே சர்வதேச விஞ்ஞானிகள் உள்ளிட்ட ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. ஜியோ இன்ஜினியரிங் படித்த இளைஞர்கள் புவி வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட முடியும். 
  இதுகுறித்த படிப்புகள் நம் நாட்டிலும், வெளிநாடுகளிலும் B.GeoEng, M.Tech (GeoEng.), M.Phil, Ph.D என அனைத்து நிலைகளிலும் உள்ளன. புவிவெப்பநிலையைக் கட்டுப்படுத்த மட்டும் அல்ல, இத்துறையில் பயின்ற மாணவர்கள், Earth resources engineer, Engineering geologist, Geoenvironmental engineer, Geohydrologist, Geotechnical engineer, Mining engineer, Reservoir engineer, Tunneling engineer என பல்வேறு உயர் வருவாய் ஈட்டும் பணிகளிலும் சேரமுடியும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சூரிய புவிசார் பொறியியல் ஆய்வில் இளைஞர்கள் ஈடுபடுவதன்மூலம் உயர் வருவாய் பெறவும், உலக மக்களை காக்கும் பணியில் ஈடுபடும் வாய்ப்பும் கிடைக்கும். 
  இரா.மகாதேவன்


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai