கேள்வியும் தும்மலும் ஒன்றே! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.

புரூக்லினைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி இசிடார் ஐசக் ராபி 1944- ஆம் ஆண்டு நோபல் பரிசு பெறும்போது, "நீங்கள் நோபல் பரிசு பெறுவதற்கு யார் காரணம்?'' எனக் கேட்டனர்.
கேள்வியும் தும்மலும் ஒன்றே! ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்.

தன்னிலை உயர்த்து! 23
புரூக்லினைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி இசிடார் ஐசக் ராபி 1944- ஆம் ஆண்டு நோபல் பரிசு பெறும்போது, "நீங்கள் நோபல் பரிசு பெறுவதற்கு யார் காரணம்?'' எனக் கேட்டனர். அக்கேள்விக்கு, இசிடார், என் தாயார் தான், என்னை அவர் அறியாமலேயே அறிஞர் ஆக்கினார் என்றார். ஆனால், அவரது அன்னையோ அதிகம் படித்தவரல்லர். அப்படியிருந்தும், எப்படி ஒரு விஞ்ஞானியை உருவாக்கினார்? எனக் கேட்டவரின் புருவம் உயர்ந்தது. 
"பள்ளிக்குச் சென்று வந்ததும், ஒவ்வொரு பெற்றோரும் அவரது குழந்தைகளிடம் இன்று பள்ளியில் என்ன கற்றுக் கொடுத்தார்கள்? நீ என்ன கற்றாய்? என்று கேட்பார்கள். ஆனால், எனது அன்னையோ இசிடார், இன்று ஏதாவது ஒரு நல்ல கேள்வியை ஆசிரியரிடத்தில் கேட்டாயா? என்று தினமும் கேட்பார். கேள்விகளைக் கேட்கத் தொடங்கியதால்தான் நான் விஞ்ஞானியாகி விட்டேன்'' என்றார், இசிடார் ஐசக் ராபி. கேள்விகளே மனிதனை வளர்க்கின்றன. குழந்தைகளும், அறிஞர்களும் கேள்வி கேட்பதில் முனைப்பானவர்கள். குழந்தைகளின் கேள்வியில் அறிவு வளர்கிறது. அறிஞர்களின் கேள்வியில் அறிவியல் வளர்கிறது. 
"கேள்விகள் கேட்பவரை முட்டாள் என மற்றவர்கள் நினைப்பார்கள் என்றும், பெரியோர்களிடம் கேள்வி கேட்டால் அதிகப்பிரசங்கி என்ற பெயரும் அடைமொழியாகும் என்பதற்காகவே நிறைய கேள்விகள் முளைக்காமலே கருகிப்போகின்றன. ஆனால், புத்திசாலித்தனமான பதிலில் இருந்து ஒரு முட்டாள் கற்றுக் கொள்வதை விட, முட்டாள்தனமான கேள்வியிலிருந்து ஒரு புத்திசாலி நிறையக் கற்றுக் கொள்கிறான்'' என்கிறார் குங்பூ வீரர் புரூஸ் லீ. அதன் அடிப்படையில், புத்தகங்களைப் படித்து நிறையத் தெரிந்து கொள்வதை விட, கேள்விகள் கேட்பதன் மூலமே நிறையத் தெரிந்துகொள்ள முடியும். உண்மையில், அற்புதமாய்க் கேள்வி கேட்பவர்களுக்கு ஆச்சரியமான பதில்கள் கிடைக்கும். பேரண்டத்தின் உள்ளே ஓர் ஒளிக்கற்றையைச் செலுத்தினால் என்னவாகும்? என்ற வித்தியாசமான கேள்வியின் மூலம்தான் சார்பியல் கோட்பாட்டைக் (Theory of relativity) கண்டுபிடித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அக்கோட்பாடு உலக அறிவியல் வளர்ச்சியில் ஒரு மைல்கல். அத்தகைய கடினமான கோட்பாடுகளை உருவாக்குவதற்கு அடிப்படைக் காரணம், "ஒரு மணி நேரத்தில் என்னிடம் ஒரு பிரச்னைக்கு முடிவுகாணச் சொன்னால், நான் முதல் 55 நிமிடத்தை சரியான கேள்வி கேட்பதற்கு பயன்படுத்துவேன். சரியான கேள்வியின் மூலம், ஐந்து நிமிடத்திற்குள் பிரச்னைக்கான தீர்வைக் காண்பேன்' என்ற அவருடைய சித்தாந்தம்தான். ஒரு மனிதனைக் கூர்மைப்படுத்துவது, பதிலல்ல; சரியான கேள்வியேயாகும். 
ஒவ்வாத உணவை உடல் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் அதனை ஏற்றுக் கொண்டால் உடல் உபாதைகள் ஏற்படும். எனவே, அதனைத் தும்மல் மூலம் வெளியேற்றும். தும்மலை அடக்கினால் உடலில் பிரச்னைகள் தோன்றும். கேள்வியும், தும்மலும் ஒன்றே. புரியாத செய்திகளை அப்படியே மனப்பாடம் செய்தாலும் அறிவு கெடும். கேள்வி கேட்காமலே கிரகித்துக் கொண்டால் அறிவு மழுங்கும். எனவே, தும்மலைப் போன்று கேள்வியையும் இயல்பாய் அனுமதித்தல் நலம். வாழ்க்கை என்பது பதிலளிக்கப்படாத கேள்விகள் நிறைந்தது. சரியான கேள்வி கேட்பவர்களுக்கு சரியான பதில் கிடைப்பதோடு, இவ்வுலகத்தில் பலருக்கு அது உறுதுணையாக அமையும். 
ஒரு மன்னர் ஆட்சி புரிந்த நாட்டில் பல இன்னல்கள் உருவாகின. மிகுந்த கவலையுடன், நிம்மதியான உறக்கமின்றி மன உளைச்சலில் சோர்ந்தார். இன்னல்களுக்குத் தீர்வு காண்பது வரையிலும் அவற்றைச் சமாளிக்க, மனதிற்கு ஆறுதல் தரும் வார்த்தைகளைத் தேடினார். ஒன்றும் கிடைக்கவில்லை. தனது அமைச்சர்களையும், முனிவர்களையும் அழைத்தார். அவர்களிடம் "மனிதன் பிரச்னைகளிலும், சிக்கல்களிலும் சிக்கிக் கொள்ளும் போது அவனுக்கு உதவக்கூடிய மந்திர வார்த்தைகள் எவை?' என்று கேள்வி எழுப்பினார். 
அக்கேள்விக்கு விடை தேடினார்கள். நிறைய சிந்தித்தார்கள். வாழ்வில் நன்மையோ, தீமையோ எது ஏற்படினும், மனிதனைச் சமநிலைப்படுத்தும் வார்த்தைகளோடு வந்தார்கள். அவற்றில் ஒன்று: " இதுவும் கடந்து செல்லும்' என்ற வார்த்தைகள். மன்னர் மகிழ்ந்தார். அந்த மந்திர வார்த்தைகளைத் தனது மோதிரத்தில் பதித்துக் கொண்டார். பிரச்னைகளிலும் மகிழ்வானார். துள்ளி குதிக்க வேண்டிய காலம் வந்தபோதும் அமைதியாய், ஆணவமின்றி மகிழ்ந்தார். அவரது சரியான கேள்வி, இன்று பலரது வாழ்வில் தேடலுக்கு அருமருந்து.
கேள்வி கேட்பது ஒரு மனிதனின் அடிப்படைத் திறமை. அத்திறமை எதனையும் சாதிக்கும் ஆற்றல் கொண்டது. உலகின் மிகச் சிறந்த அறிஞர்களும், விஞ்ஞானிகளும் இத்திறனையே கொண்டிருந்தார்கள். என்ன? எப்படி? ஏன்? எதற்கு? யார்? எங்கே? எப்பொழுது? என்ற ஏழு கேள்விகளால் இணைக்கும்போது, பதில் வண்ணங்கள் நிறைந்த வானவில்போல் முழுமைஅடையும். 
அதில், ஏன்? என்ற கேள்வியை அவரவரிடம் கேட்டுக் கொள்ளவும்; அடுத்தவரிடமல்ல. என்ன? எப்படி? என்ற கேள்விகளை அடுத்தவரிடமும், எதற்கு? என்பதை ஆராய்ந்தும், யார்? என்பதை விசாரித்தும், எங்கே? என்பதை வரைபடத்திலும், எப்பொழுது? என்பதைக் கடிகாரம் பார்த்தும் தெரிந்து கொண்டால் எத்தகைய கேள்விக்கும் சரியான விடை கிடைக்கும்.
கேள்விகளைக் கேட்க மறுப்பவர் முட்டாள். கேள்விகளை கேட்கத் துணிபவர் மனிதன். கேள்விகளோடு வாழ்ந்துகொண்டிருப்பவர் ஞானி. 
"ஒரு பொருத்தமற்ற கேள்வியைக் கேள். நீ அதற்கான பதிலைத் தேடிச் செல்வாய். அதுதான் அறிவியலின் சாராம்சம்'என்கிறார் இங்கிலாந்து நாட்டின் அறிவியல் அறிஞர் ஜேக்கப் ப்ரெüனோஸ்கி. 
கேள்விகளுக்கான விடைகளைத் தேடுகின்ற வாழ்க்கையே ஓர் அற்புத வாழ்க்கை. அறிவியல் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் மீது விழுந்த ஆப்பிள் மீதான, அவரது கேள்வியே புவியீர்ப்பு விசைக் கோட்பாட்டை உலகுக்குப் பெற்று தந்தது. இச் சம்பவத்துக்கு முன்பு வரை உலகில் பல பேர் மீது ஆப்பிள் விழுந்துள்ளது, ஆனால் நியூட்டனின் மனதில் எழுந்த கேள்வி யாரிடமும் எழவில்லை. இக் கண்டுபிடிப்பால் உலகப் புகழ் பெற்ற நியூட்டனின் மனதில் மென்மேலும் கேள்விகள் உருவாகின. அவை நியூட்டனின் விதிகளாக உருப்பெற்றது. ஒரு 45 நிமிட வகுப்பறையில் ஆசிரியர் மட்டுமே பாடங்களை நடத்தி புரிய வைத்துக் கொண்டிருப்பதல்ல வகுப்பறை. மாணவர்கள், தாங்களாகவே கற்றுக் கொள்வதற்கான சூழலை உருவாக்குவது தான் வகுப்பறை. மாணவர்கள் கேள்வி எழுப்பாத வகுப்பறை, கல்லறையே.
கேட்கப்படாத கேள்வி என்பது திறக்கப்படாத கதவுபோல் மனதை மூடிவிடும். வாய்ப்பு கிடைக்கும்போது கேள்வி கேட்பதைவிட, கேள்விகளைக் கேட்க வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வது அறிவின் பலம். ""கேள்வி கேட்கும் சில நிமிடங்கள் மட்டுமே நீங்கள் முட்டாளாகத் தெரிவீர்கள். கேள்வி கேட்கவில்லையெனில், வாழ்நாளெல்லாம் முட்டாளாகத் தெரிவீர்கள்'' என்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். 
மனதில் வசப்படாதவை கூட சில கேள்விகளால் வலுப்பெறுகின்றன. மகாபாரதத்தில் ஒரு பேயின் கேள்விகள் (யக்ஷ்ப் ப்ரயஸனம்) என்ற பகுதி சுவையானது. அதில் உலகிலேயே அதிசயமான விஷயம் எது? என்ற கேள்விக்கு, "உலகில் தினமும் நிறையப் பேர் இறக்கின்றனர். அதனைக் கண்ட பின்னரும் மக்கள் அனைவரும் தினமும் வாழப் போகிறோம் என்ற எண்ணத்தில் செயல்படுவதுதான் அதிசயம்'' என்றார் தருமர். இத்தகைய கேள்விகள் சிந்தனைக்கு விருந்தாவதோடு வாழ்வின் அகந்தைக்கும் முடிவு கட்டுவதாக அமைகிறது.
கேள்வி கேட்பது ஒரு கலை. கேட்கப்படாத கேள்விகள் அறிவின் சுமைகள். கேட்கப்பட்ட கேள்விகள் ஆற்றலின் அழகு. எதிர்பார்த்து பெய்யாத மழை போல, பதிலை எதிர்பாராமல் எழுவது கேள்வி. சரியான கேள்விகள் கேட்கப்படவில்லையெனில் இவ்வுலகில் எவ்வித வளர்ச்சியும் சாத்தியமில்லை. கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சரியான கேள்விகள் சாகாவரம் பெறுகின்றன.
தன்னுள் கேட்கப்படுகின்ற கேள்விகள் உலகுக்கே பதிலாகிறது. கி.மு. 563- ஆம் ஆண்டு கபிலவஸ்துவின் பேரரசுவிற்கு மகனாகப் பிறந்தவர் சித்தார்த்தர். உலகம் போற்றும் துறவியாக வருவார் என்ற ஜாதகக் கணிப்பினைப் பொய்யாக்க அவரது பெற்றோர் அரண்மனை வாழ்விற்கும் கூடுதலான ஆடம்பர வாழ்வைத் தந்தனர். இளம் வயதிலேயே திருமணம் முடித்து வைத்தனர். ஒருநாள், சித்தார்த்தர் நகர்வலம் செல்ல, அங்கே ஒரு கூன்கொண்ட முதியவரையும், நோய்வாய்ப்பட்ட மனிதனையும், ஒரு பிணத்தையும் கண்டார். மனித வாழ்வில் நிறைய துன்பங்கள் ஏற்படுகின்றன. அத்துன்பங்களிலிருந்து விடுபட வழி யாது? என்ற கேள்வி அவர் மனதிற்குள் எழுந்தது. அதற்கான பதிலை அவரது அரண்மனையில் தேடினார். கிடைக்கவில்லை. அதைவிட்டு வெளியேறினார். 
பல மலைகளிலும், நதிக்கரையோரங்களிலும் வாழ்ந்த முனிவர்களைச் சந்தித்தார். அவரது கேள்விக்கான பதில் முழுவதுமாக கிடைக்கவில்லை. முடிவில் புத்த கயாவில், ஓர் அரசமரத்து நிழலில், 49 நாட்கள் தொடர் தியானத்தில் இருந்தார். அவரது கேள்விக்கு விடை கிடைத்தது. புத்தரின் ஞானோதயத்தில் உருவான போதனைகள் மனிதர்களைத் துன்பத்திலிருந்து விடுவிக்க எண்வழிகளைக் காட்டியது. நன்னம்பிக்கை, நல்லெண்ணம், நற்சொல், நற்செயல், நல்வாழ்க்கை, நன்முயற்சி, நல்சாட்சி, நல்லதியானம் என்பது புத்தரின் கேள்விக்கு தீர்வோடு மனித நல்வாழ்க்கைக்கும் தீர்வானது.
உலகிடம் கேள்வி கேட்டு 
விடை காண்பவர் விஞ்ஞானி ! 
தன்னுள்ளே கேள்வி கேட்டு 
விடை காண்பவர் ஞானி ! !
(தொடரும்)
கட்டுரையாசிரியர்:
காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com