வாங்க இங்கிலீஷ் பேசலாம் 140

புரொபஸர், கணேஷ், ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரை நாடி செல்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 140

புரொபஸர், கணேஷ், ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரை நாடி செல்கிறார்கள். மூவரும் காத்திருக்கும் அறையில் இருக்கையில் டிப்ரஷன் வியாதி, அது சம்பந்தமான சொற்கள் பற்றி உரையாடல் வளர்கிறது. அப்போது அங்கு வந்துள்ள டார்லிங் எனும் பக் நாயிடம் கணேஷ் பேச்சுக் கொடுக்கிறான். அரட்டையின் போது புரொபஸரும் டார்லிங்கும் பயன்படுத்தின melancholy எனும் சொல்லுக்கு சோகம் என்று தான் பொருளா? என கணேஷ் வினவுகிறான். 
புரொபஸர்: மெலன்கலி என்றால் அது வெறும் துக்கம், துயரம், வருத்தம் அல்ல. விசனம் எனலாம். நீண்ட ஆழமான சிந்தனையில் ஆழ்த்தும் கவலை எனலாம். ஆங்கிலத்தில் pensive sadness என்கிறார்கள். அதாவது எந்த காரணமும் இல்லாமல் துக்கிப்பது. காரணமற்ற கவலையில் ஆழ்ந்து சிந்திப்பது.
கணேஷ்: சார் பென்ஸிவ் என்றால் சிந்திப்பதா?
புரொபஸர்: இல்லை. நீண்ட நேரம் ஆழ்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருப்பது. அதாவது வழக்கத்தை மீறி ஒருவர் யாருடனும் பேசாமல் சிந்தித்துக் கொண்டு இருப்பது. Contemplative, reflective, introspective ஆகியவை இதன் இணைச்சொற்கள்.
கணேஷ்: சார்... எனது நண்பர் ஒருவரிடம் ஏதாவது குழப்பமான கேள்வி கேட்டால் யோசிச்சு சொல்றேன் என்பார். Let me reflect on it என்று அதற்கு அடுத்து சொல்வார். அதென்ன reflect on it? யோசிக்கிறதா?
புரொபஸர்: அதுக்கு ரெண்டு பொருள் இருக்குது. ஒண்ணு, ஒரு விசயம் பற்றி ஆழமாகச் சிந்திப்பது, கவனமாகப் பரிசீலிப்பது. உன் காதலி "கணேஷ், நாம break up பண்ணலாமுன்னு' சொல்றா?
கணேஷ்: ஐயோ...
புரொபஸர்: சும்மா ஒரு கற்பனை. நீ அதற்கு அதிர்ச்சி ஆகுறே. அவளுக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல. அவளைக் கோபமா திட்டினால் பிரச்னை இன்னும் மோசமாகிடும். பதில் சொல்லாம இருந்தால் நீ பிரேக் அப்பை விரும்புறதா அவள் நினைச்சுக்கலாம். சரி யோசிச்சு சொல்றேன்னு சொல்ல நினைக்கிறாய். அதற்கு இங்கிலீஷ் தான் let me reflect upon it. அதாவது, let me think over it. எளிமையா சொல்றதுன்னா, "எனக்கு கொஞ்சம் டைம் கொடு, யோசிக்கணும்'
கணேஷ்: ஓ...
புரொபஸர்: இன்னொரு பொருளும் உண்டு. ஐ.பி.எல்லில் Fair play awardன்னு ஒண்ணு உண்டு தெரியுமா?
கணேஷ்: ஆமா. ரொம்ப கண்ணியமா, கனிவா, யாரையும் பகைச்சுக்காம, திட்டாம, கத்தாம ஆடுற டீமுக்கு கொடுக்கும் விருது.
புரொபஸர்: கரெக்ட். விக்கெட் எடுத்ததும் ரொம்ப ஆக்ரோஷமா கொண்டாடாம இருக்கிறது, இதற்கு மாறாக ஒருத்தர் பண்ணினா, அது ஒட்டுமொத்த அணிக்கும் கெட்ட பேராகும். அதாவது, when one player misbehaves it reflects poorly on the whole team.
கணேஷ்: சரி, இன்னொரு டவுட்
புரொபஸர்: கேளு
கணேஷ்: மெலன்கலிக் என்பதும் டிப்ரஷனும் ஒன்றா? ரெண்டும் பைத்தியமா?
புரொபஸர்: இல்லை. மெலன்கலி என்றால் ஒருவித சிந்தனை சிடுக்கில் மாட்டிக் கொண்டு தவிப்பது.. 
கணேஷ்: எனக்கு புரியவில்லை சார்.
புரொபஸர்: ஊரில் கன்னி சோகை என்று சொல்வாங்க கேட்டிருக்கியா? 
கணேஷ்; ஆமா
புரொபஸர்: அதென்ன?
கணேஷ்: வயசுக்கு வந்தவங்க சோகையா, யாரோடும் பேசாம உட்கார்ந்திருந்தால் அப்படிச் சொல்வாங்க
புரொபஸர்: ஆமா. சரியான துணை கிடைக்காம ஏங்குறது. அந்த ஏக்கத்தை வெளிப்படுத்த தெரியாம தனக்குள் மூழ்கி உருகி மாயுறது. மருகுவது. அது melancholy. நான் உனக்கு வகுப்பில் ஷேக்ஸ்பியரோட The Twelfth Knight நாடகம் நடத்தினேனே நினைவிருக்கா?
கணேஷ்: ஆமா...
புரொபஸர்: அதில் Duke Orsino என்கிற பாத்திரம் தேவையின்றி காதல் சோகத்தில் மூழ்கி லயிப்பான். அது melancholy. அவன் ஒலிவியா எனும் பெண்ணை நேசிப்பான். அவளது அண்ணன் ரொம்ப வருடங்களுக்கு முன்பு இறந்து போயிருப்பான். அவள் அதையே நினைத்து இப்போதும் அழுது கொண்டிருப்பாள். அண்ணனை மறக்க முடியாத துயரத்தால் ஆர்சினாவை அவள் ஏற்க மாட்டாள். காதலியை எண்ணி மறுகும் ஆர்சினோவோ ஒருமுறை கூட அவளை நேரில் பார்த்திருக்க மாட்டான். ரெண்டு பேரின் துக்கமும் லாஜிக் இல்லாதது. மனதளவில் மட்டும் இருக்கும் கவலை. நடப்புலகில் மதிப்பில்லாத கவலை. ஆனால் பைத்தியம் என்றால் மீள முடியாத, clinical depression. Clinical என்றால் மருத்துவ உதவி தேவை உள்ள மனநிலைச் சிக்கல். ரெண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. அதாவது melancholic ஆக இருப்பவர்கள் எல்லாரும் மனநோயாளிகள் அல்ல
பக் நாய் டார்லிங்: புரொபஸர் நான் ஒரு சந்தேகம் கேட்கலாமா?
புரொபஸர்: கேளு...
(இனியும் பேசுவோம்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com