வாழைப்பழத் தோல்: வேலை... தொழில் வாய்ப்பு!

கடந்த 1985-இல் வெளியான "கீதாஞ்சலி' திரைப்பட நகைச்சுவை காட்சியில், சாமியாராக நடித்த கவுண்டமணியிடம் தீர்வு தேடி வரும் ஒரு விவசாயி, வாழை அதிகமாக விளைந்தும், விலை கிடைக்கவில்லை, காப்பாற்ற வேண்டும்
வாழைப்பழத் தோல்: வேலை... தொழில் வாய்ப்பு!

கடந்த 1985-இல் வெளியான "கீதாஞ்சலி' திரைப்பட நகைச்சுவை காட்சியில், சாமியாராக நடித்த கவுண்டமணியிடம் தீர்வு தேடி வரும் ஒரு விவசாயி, வாழை அதிகமாக விளைந்தும், விலை கிடைக்கவில்லை, காப்பாற்ற வேண்டும் என்பார். இதையடுத்து, வாழைப்பழத்தில் ஒரு புரட்சி ஏற்படுத்தப் போவதாகக் கூறி, கடைக்குச் செல்லும் கவுண்டமணி, வாழைப்பழம் வாங்கி, தோலைத் தின்றுவிட்டு, பழத்தை தூக்கியெறிவார். அதில்தான் சத்து அதிகமாக உள்ளது என்றும் கூறுவார்.
இதை நம்பி, மக்களும் வாழைப்பழத் தோலை வாங்கி உண்ண, அதன் விலை பன்மடங்கு உயர்ந்துவிடும். இதன் மூலம், விவசாயியும், அவர்மூலம் சாமியாரும் பயன்பெறுவதாகக் காட்சி இருக்கும். இந்த படம் கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான போது, இதுகுறித்த ஆய்வுப்பூர்வமான உண்மைகள் எதுவும் வெளியாகவில்லை. நகைச்சுவைக்காகவே அந்தக் காட்சி வைக்கப்பட்டது. ஆனால், அது நகைச்சுவையல்ல, உண்மையே என்று இன்றைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஆஸ்திரேலியா மற்றும் வியத்நாம் விஞ்ஞானிகள் இதை உறுதிசெய்துள்ளனர்.
தாவரங்களில் விதை மற்றும் சதைப்பகுதி உருவாகும் முன்பு, அதன் தோல் பகுதியே முதலில் உருவாகிறது. நுண்ணுயிர்த் தொற்றுகள் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள இயற்கையாக அமைந்த அரண் அது. அதுபோலவே, வாழைப்பழத் தோலும் விஷ எதிர்ப்பு தன்மை கொண்டதாகவும், கொடிய நுண்ணுயிரிகளால் பழத்துக்கு எந்த பாதிப்புகளும் நேராமல் காக்கக்கூடிய ஆயுதமாகவும் பயன்படுகிறது.
இதையொட்டி, தீக்காயம், ரத்தசோகை, வயிற்றுப்போக்கு, தீராத புண், எரிச்சல், நீரிழிவு, இருமல், பாம்புக்கடி போன்றவற்றுக்கு மரபுரீதியான மருந்தாக வாழைப்பழத் தோல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்த நிலையில், லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பன்னாட்டு தகவல் மற்றும் ஆய்வு நிறுவனத்தின் கீழ், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து செயல்படும் Elsevier பதிப்பு நிறுவனம், தன்னுடைய Journal of Functional Foods என்ற ஆய்வுப் புத்தகத்தில், Phenolic compounds within Banana Peel and their Potential Uses- A Review என்ற ஆய்வுக் கட்டுரையை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை அறிவியல் பள்ளியைச் சேர்ந்த விஞ்ஞானிகள், Hang 
T. Vu,  Quan V,  Vuong, வியத்நாம் தேசிய வேளாண் பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த Christopher J. Scarlett 
 ஆகியோர் வியத்நாம் அரசின் நிதி உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு, கடந்த ஜூலை 2017-ல் இந்த கட்டுரையைச் சமர்ப்பித்தனர். பரிசீலனைக்குப் பிறகு 6, நவம்பர் 2017-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரை, 22, டிசம்பர் 2017-இல் Elsevier நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
வாழைப்பழத் தோலில் இயற்கையாக உள்ள வேதிப்பொருள்கள், ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் நோய் தீர்க்கும் மருந்துகள் தயாரிக்கும் தொழில்துறையில் அதிக அளவில் பயன்படும் என்பதற்கான ஆதாரமாக இந்த ஆய்வுகள் உள்ளதாக மருத்துவத்துறை கருதுகிறது.
காரணம், பல நோய்களுக்குத் தீர்வாக இருந்துவரும் பினோலிக் கலவைகள் (Phenolic Compounds) பிற பழங்களை ஒப்பிடும்போது, வாழைப்பழத் தோலில் அதிகச் செறிவுடன் காணப்படுவதாகவும், இந்த கலவைகள் விஷ எதிர்ப்புத் தன்மை கொண்டதாகவும், நுண்ணுயிரி தொற்றுகள் தாக்காத, நோய் எதிர்ப்புப் பண்புகள் அதிகம் கொண்டவை என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த பினோலிக் கலவைகள், பொதுவாக, இருதய நோய் தடுப்பு, புற்றுநோய், நீரிழிவு, உடல்பருமனுக்கான தீர்வுகளுடன் தொடர்புடையவை. 
ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட மிகப் பழைமையான வாழைப்பழங்களில் ஒன்றான Musa paradisiaca என்ற இனத்தில், அதிக அளவிலான பினோலிக் கலவைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்திய வகைப் பழங்களான ராஜ புளூ, ரஸ்தாளி, கற்பூரவல்லி, கேரளத்தின் நேந்திரன் வகைப்பழங்களும் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன.
வாழைப்பழத் தோலில் உள்ள அதிக அளவிலான Prebiotic என்ற பொருள், நம் பெருங்குடலில் உள்ள நன்மைபயக்கும் பாக்டீரியாவை ஊட்டப்படுத்துகிறது. இந்த பாக்டீரியாக்கள், நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் கிரகிக்கத் தேவையான செரிமான நொதிகளையும், வைட்டமின்களையும் உற்பத்தி செய்யக் கூடியவை. மேலும், வாழைப்பழத் தோல் அமிலநீக்கியாகவும், தைராய்டு போன்றவற்றுக்கான தீர்வாகவும் அறியப்படுகிறது. இதில், பினோலிக் கலவைகள் அல்லாமல், 40 தனி கலவைகள் உள்ளதாகவும் தெரிய வருகிறது.
இந்த ஆய்வுக் கட்டுரையின் முக்கியத்துவம் கருதி Elsevier இணையதளத்தில் இருந்து சர்வதேச அளவில் மிக அதிகமானோர் இதைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். 
சர்வதேச அளவில் ஆண்டுதோறும் 11.5 கோடி டன் வாழை உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 23 சதவீதத்துடன் (சுமார் 3 கோடி டன்) இந்தியா முதலிடத்தில் உள்ளது. வாழைப்பழத்தின் எடையில் 3-இல் ஒருபங்கு என்ற அளவில், பயன்பாடுமிக்க சுமார் 3.8 கோடி டன் வாழைப்பழத் தோல்கள் ஆண்டுதோறும் வீணாகி வருகின்றன. இனி இந்த நிலை மாறி, இவற்றுக்கான தேவை அதிகரிக்கும் சூழல் உருவாக உள்ளது.
வாழைப்பழத் தோலில் இருந்து மருந்து உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சியில் நம் நாட்டு இளைஞர்கள் தீவிரமாக ஈடுபடுவதன் மூலம் இங்குள்ள அதிகப்படியான வளங்களை நாமே பயன்படுத்திக் கொள்வதற்கும், குறைந்த விலையில் மருந்து கிடைப்பதற்கும், வாழை விவசாயிகள் பயனடையவும் வாய்ப்பாக அமையும்.
அதோடு, வாழைப்பழத் தோலில் இருந்து வாழைத்தோல் கறி, ஸ்மூத்தி, வாழை டீ, சட்னி, ஊறுகாய், வாழைத்தோல் தூள், கேக் ஆகியவற்றைத் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வர முடியும். இதற்கான தயாரிப்பு முறைகள் தற்போது இணையத்தில் கிடைக்கின்றன. உணவு விடுதிகளில் வாழைத்தோல் உணவுப் பொருள்களை தயாரித்து பரிமாறுவதன் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும்.
நோய் குறைய, வேலைவாய்ப்பு பெருக விழிப்புணர்வுதான் இப்போதைய தேவை. 
- இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com