உயிரி தொழில்நுட்பம்: போட்டி... வெற்றி... வாய்ப்பு!

உயிரி தொழில்நுட்பம்: போட்டி... வெற்றி... வாய்ப்பு!

இந்தியா எதிர்கொண்டுள்ள சுகாதாரம், வேளாண்மை, உணவு மற்றும் ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் சவால்கள் குறித்து புதுமையான தீர்வுகளைக் காண, அதிக அளவிலான கண்டுபிடிப்பாளர்கள் முயன்று வருகின்றனர்.

இந்தியா எதிர்கொண்டுள்ள சுகாதாரம், வேளாண்மை, உணவு மற்றும் ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் சவால்கள் குறித்து புதுமையான தீர்வுகளைக் காண, அதிக அளவிலான கண்டுபிடிப்பாளர்கள் முயன்று வருகின்றனர். முதல் தலைமுறை உயிரி தொழில்முனைவோர் இதற்காகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் கண்டுபிடிப்புகள் மக்களுக்குப் பயன்பட வேண்டும். அதற்கு அவை வணிகமயமாகி சந்தையைச் சென்றடைவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இதற்காக, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பவியல் துறையின் கீழ் உள்ள உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி அமைப்பு (Bio Technology Industry Research Assistance Council-BIRAC) மற்றும் Centre for Cellular And Molecular Platforms (C-CAMP) ஆகிய இரண்டும் இணைந்து, உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி அமைப்பின் மண்டல தொழில் முனைவோர் மையத்தை (BIRAC Regional Entrepreneurship Centre - BREC) ஏற்படுத்தியுள்ளன. இது பெங்களூருவில் செயல்பட்டு வருகிறது. 
உயிரி தொழில்முனைவோரின் பணிகளுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், தொடக்கநிலை தொழில் நிறுவனங்கள் உருவாக உதவுவது, அவற்றின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்க வழிகாட்டுவது ஆகியவை இந்த அமைப்பின் நோக்கமாகும்.
இதன் ஒரு பகுதியாக 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய உயிரி தொழில்முனைவோர் போட்டியை (The National Bio-Entrepreneurship Competition-NBEC 2018) BREC அறிவித்துள்ளது. 
தேசிய அளவிலான இந்தப் போட்டியில் வாழ்க்கை அறிவியல் அல்லது உயிரி தொழில்நுட்பம் சார்ந்த புதிய மேம்பட்ட வணிக உத்திகள் வரவேற்கப்படுகின்றன. அதாவது, மருந்து கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாடு, தடுப்பூசிகள், மீளுருவாக்க மருந்துகள், நோய் கண்டறிதல், மருத்துவ உபகரணங்கள், டிஜிட்டல் ஹெல்த், சுகாதாரத்தில் தகவல் தொழில்நுட்பம், உணவு மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் அடங்கிய வேளாண் உயிரி தொழில்நுட்பம் ஆகியவை குறித்து இந்த உத்திகள் இருக்கலாம்.
இந்தப் போட்டியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர், உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள், தொடக்கநிலை தொழில் நிறுவனங்கள் (Start Ups) பங்கேற்கலாம். விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். நிறுவனத்தின் பெயரில் விண்ணப்பித்தால், அந்த நிறுவனம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டதாகவும், அதன் உரிமையாளர்களில் பெரும்பாலானோர் இந்தியர்களாகவும் இருக்க வேண்டும். வணிக உத்திகள் ஆழ்ந்த அறிவியல் அடிப்படையிலான உயிரி தொழில்நுட்பக் கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும்.
நாடு முழுவதும் இருந்து வரும் விண்ணப்பங்களை தொழில்துறை நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் குழு ஆராய்ந்து அவற்றில் சிறந்த 100 அல்லது 150 வணிக உத்திகளைத் தேர்வு செய்யும். அவ்வாறு தேர்வுபெற்ற விண்ணப்பதாரர்கள் நேரில் அழைக்கப்பட்டு நீதிபதிகள் குழு முன் அவர்களின் உத்திகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கக் கோரப்படுவர். 
இந்த செயல் விளக்க நிகழ்ச்சி நாட்டின் 4 அல்லது 5 முக்கிய நகரங்களில் நடைபெறும். இந்த செயல் விளக்கங்களில் இருந்து சிறந்த 20-40 வரையிலான ஒப்படைப்புகளை நீதிபதிகள் தேர்ந்தெடுப்பர்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பெங்களூரு C-CAMP வளாகத்தில் 2 நாள்கள் நடைபெறும் உண்டு உறைவிட தொழில்முனைவோர் வளர்ச்சி மற்றும் தீவிர வழிகாட்டுதல் அமர்வு முகாமில் பங்கேற்க வேண்டும். முகாமின் முடிவில் இதில் பங்கேற்ற தொழில்முனைவோர் அனைவரும் தங்களின் இறுதி வணிகத் திட்டம் குறித்து தலைமை நீதிபதிகள் குழு முன் செயல்விளக்கம் அளிக்க வேண்டும். இதன் அடிப்படையில் போட்டியின் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதில் வெற்றி பெறும் தொழில்முனைவோர், Start Up நிறுவனங்கள் ரூ. 1.4 கோடி முதலீட்டு வாய்ப்பைப் பெறுவர். அதோடு, ரூ. 38 லட்சம் ரொக்கப் பரிசுகளும் கிடைக்கும். மேலும், அமேசான் இணைய சேவை செயல்திட்டத்தில் ரூ. 14 லட்சம் (25 ஆயிரம் அமெரிக்க டாலர்) மதிப்பிலான Active Credits பெறுவதற்கு தகுதிபெறுவர். 
இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கியுள்ளது. வரும் 16-ம் தேதி (செப்டம்பர் 16) வரை விண்ணப்பிக்கலாம். 
டிசம்பர் 15-ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற்று, விருது பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். போட்டியின் ஒவ்வொரு நிலையிலும் தேர்வு செய்யப்படுவோரின் விவரம், அவர்கள் பதிவுசெய்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே தெரிவிக்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் விருது அறிவிக்கப்படும் வரை தங்களின் மின்னஞ்சல் தளத்தை அவ்வப்போது ஆய்வுசெய்துகொள்ள வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களை www.nationalbioentrepreneurship.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
- இரா.மகாதேவன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com