நடமாடும் இலவசப் பள்ளி!

உத்தரபிரதேச மாநிலம் லக்னெள நகரம். அதன் குடிசைப் பகுதிகளில் நிறைய புத்தகங்களுடன் ஒரு சைக்கிள் வருகிறது.
நடமாடும் இலவசப் பள்ளி!

உத்தரபிரதேச மாநிலம் லக்னெள நகரம். அதன் குடிசைப் பகுதிகளில் நிறைய புத்தகங்களுடன் ஒரு சைக்கிள் வருகிறது. சைக்கிளை ஓட்டி வந்தவர் ஓரிடத்தில் சைக்கிளை நிறுத்த குழந்தைகள் அவரைச் சூழ்ந்து கொள்கின்றனர். சிறிது நேரத்தில் அந்த இடத்தில் வகுப்பு ஆரம்பமாகிவிடுகிறது. அந்த இடத்தில் வகுப்பு முடிந்தவுடன் மீண்டும் சைக்கிள் பயணம். மீண்டும் புதிய இடத்தில் வகுப்பு. இந்த நடமாடும் பள்ளியை நடத்துபவர் ஆதித்யா குமார்.
 ஆதித்யா குமார் கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியில் பட்டம் பெற்றவர். ஆனால் அந்தப் பட்டம் பெறுவதற்கு அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்மல்ல. ஒரு கூலித் தொழிலாளியின் மகனாகப் பிறந்த ஆதித்யா குமார், சிறுவயதில் ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. மாதத்தில் 12 நாட்கள் மட்டுமே பள்ளிக்குச் செல்ல முடிந்தது. மீதி நாட்களில் கட்டடம் கட்டும் இடங்களில் கூலி வேலை. இருந்தாலும் படிப்பின் மீதான அவருடைய ஆர்வத்தையும், படிக்க முடியாத அவருடைய வறுமையையும் அறிந்த ஆசிரியர்கள் அவருக்குச் செய்த உதவிகள் அதிகம். படிக்க வைக்காத அவருடைய தந்தையிடம் கோபித்துக் கொண்டு 26 வருடங்களுக்கு முன்பு கான்பூருக்கு ஓடி வந்துவிட்டார் குமார். தற்செயலாகச் சந்தித்த ஓர் ஆசிரியர் செய்த பண உதவியின் காரணமாக அவர் கல்லூரிப் படிப்பை முடிக்க முடிந்தது.
 கிராமத்திலிருந்து வந்த அவருக்கு ஆங்கிலம் ஒரு பெரும் சவாலாகவே இருந்திருக்கிறது. கணக்கும் கூட. எனவே அவற்றில் தேர்ச்சி பெறுவதற்காக பலவிதங்களில் முயற்சி செய்து வெற்றியும் கண்டிருக்கிறார். அப்போதுதான் தோன்றியிருக்கிறது... "நம்மைப் போல எத்தனை ஏழைக் குழந்தைகள் இந்தக் குடிசைப் பகுதிகளில் ஆங்கிலமும், கணக்கும் தெரியாமல் அவதிப்படுகிறார்களோ? அவர்களுக்கு ஆங்கிலமும், கணக்கும் கற்றுக் கொடுத்தால் என்ன?' என்று.
 1995 இல் இப்படித்தான் உருவானது அவருடைய நடமாடும் பள்ளி.
 காலை 10 மணியிலிருந்து இரவு 7 மணி வரை அவருடைய நடமாடும் பள்ளி செயல்படுகிறது. 10 வயதுக்கும் குறைந்த குழந்தைகளே அவருடைய மாணவர்கள். ஒரு நாளைக்கு 50 இலிருந்து 60 கிலோ மீட்டர்கள் வரை சைக்கிளில் அவர் பயணம் செய்கிறார். இதில் முக்கியமான விஷயம், அவர் கல்விக் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.
 இவரிடம் படித்த ஒரு மாணவர், பெயர் ரிஷி செüத்ரி, தற்போது வங்கித் தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.
 "அவர் எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஒரு நாளும் தவறியதில்லை. இந்தக் காலத்தில் ஒருவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றால் அவருக்கு வேலை கிடைக்காது. என்னைப் போன்றவர்களின் கனவை நிறைவேற்ற அவர் உதவி வருகிறார்'' என்கிறார் ரிஷி செüத்ரி.
 ஒவ்வொரு மாதமும் சுமார் 2 ஆயிரம் மாணவர்களுக்கு ஆதித்யா குமார் கற்றுத் தருகிறார். கடந்த 20 ஆண்டுகளில் 2 லட்சம் மாணவர்கள் இவரால் பயனடைந்திருக்கின்றனர்.
 இதைத் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற பாடத்திட்டம் எதுவும் இவரிடம் இல்லை. ஒவ்வொரு மாணவருக்கும் எது தேவையோ அதை மட்டுமே அவருக்குச் சொல்லிக் கொடுக்கிறார். இவருடைய கல்விப் பணியைப் பாராட்டும் விதமாக லிம்கா சாதனைப் புத்தகத்தில் இவருடைய சாதனை இடம் பெற்றிருக்கிறது.
 - ந.ஜீவா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com