சுருட்டி வைக்கும் "டேப்'!

செல்போன் அறிமுகமாகியபோது சிறிய வடிவிலான போன்களுக்கே மவுசும், விலையும் அதிகமாக இருந்தது. ஆனால் ஸ்மார்ட்போன்கள் வந்தபிறகு பெரிய திரை கொண்ட போன்களுக்கு மவுசு அதிகரித்தது.
சுருட்டி வைக்கும் "டேப்'!

செல்போன் அறிமுகமாகியபோது சிறிய வடிவிலான போன்களுக்கே மவுசும், விலையும் அதிகமாக இருந்தது. ஆனால் ஸ்மார்ட்போன்கள் வந்தபிறகு பெரிய திரை கொண்ட போன்களுக்கு மவுசு அதிகரித்தது.

எனினும், செல்போன்கள் அறிமுகமாகி சுமார் 20 ஆண்டுகளாகியும், அதன் திரை சதுரமாகத் தான் உள்ளது. இதனால் பெரிய ஸ்மார்ட் போன்களை சட்டைப் பாக்கெட்டுகளில் வைத்து கொண்டு வெளியே செல்வது சிரமமாக உள்ளது. 

இந்தநிலையில்தான், கனடா நாட்டின் குயின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சுருட்டி வைக்கும் டேப்லெட்டைக் கண்டுபிடித்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளனர்.

பழங்காலத்தில் வரைபடங்கள், கடிதங்கள் ஆகியவற்றைச் சுருட்டி வைக்கும் உருளை வடிவம்போல், இந்த சுருட்டி வைக்கும் டேப்லெட் உருவாக்கப்பட்டுள்ளது. உருளையில் உள்ள தொடுதிரைக்கு இரு புறங்களிலும் மேலும், கீழும் சுழற்றும் பொத்தான் உள்ளது. இதை வைத்து நாம் எப்படி தொடுதிரையில் உள்ள விவரங்களைச் சாதாரண டேப்லேட்டில் மேலும், கீழும் விரலை வைத்து நகர்த்தி பார்ப்பதைப்போல் சுழற்றியே பார்த்து கொள்ளலாம்.

உருளை வடிவில் உள்ள  இந்த தொடுதிரையை, நீட்டமாக்கி சாதாரண டேப்லெட்டைப் போலவும் பயன்படுத்தலாம் என்பதுதான் இதன் சிறப்பம்சம். பின்னர் மீண்டும் உருளை வடிவத்தில் சுருட்டியும் வைத்துவிடலாம். 

அதுமட்டுமன்றி, சுழலும் வடிவிலேயே இதை ஸ்மார்ட்போனாகவும் பேசவும் பயன்படுத்தலாம். இதன் நடுவே உள்ள பகுதியில் உள்ள பேட்டரியும், வன்பொருளும்தான் இதை இயக்குகிறது. 7.5 அங்குலம் அளவும், "2கே' தெளிவும் இந்த சுருட்டி வைக்கும் டேப்லெட்டின் தொடுதிரையில் உள்ளது.

"இந்த சுருட்டி வைக்கும்  டேப்லெட்டை பேனா வைப்போல் சிறிதாக்கி சட்டைப் பையில் வைத்து கொள்ளும் அளவுக்கு சுருக்க வேண்டும் என்பதே எங்கள் அடுத்த குறிக்கோள்' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் உலகின் முதல் சுருட்டி வைக்கும் டேப்லெட்டைக் கண்டுபிடித்த குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் வெர்ட்டிகேல்.

சிறிய வடிவில் இருந்து பெரிய வடிவுக்கு வந்த ஸ்மார்ட்போன், வருங்காலங்களில் மீண்டும் அதன் பழைய வடிவத்துக்கே திரும்புமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com