தன்னிலை உயர்த்து!

ஒரு காட்டில் வாழ்ந்த கருவுற்ற ஒரு சிங்கம், தனது குட்டியை  ஈன்றதும், இறந்துபோனது. அவ்வழியே வந்த ஆட்டிடையன், அச்சிங்கக்குட்டியைத் தூக்கி வளர்த்தார். செம்மறியாட்டின் பாலும், பசும் புல்லும் சிங்கக்குட்டிய
தன்னிலை உயர்த்து!

ஒரு காட்டில் வாழ்ந்த கருவுற்ற ஒரு சிங்கம், தனது குட்டியை  ஈன்றதும், இறந்துபோனது. அவ்வழியே வந்த ஆட்டிடையன், அச்சிங்கக்குட்டியைத் தூக்கி வளர்த்தார். செம்மறியாட்டின் பாலும், பசும் புல்லும் சிங்கக்குட்டியின் உணவானது. ஒரு நாள், பாறையின் மீது அமர்ந்திருந்த சிங்கமொன்று, செம்மறியாட்டு மந்தையினைப் பார்த்தது. தனக்குத் தகுந்த இரையை அலசிப் பார்த்ததின் கண்களில் சிங்கக்குட்டியும் தென்பட்டது. 

சிங்கம், செம்மறியாட்டுக் கூட்டத்தினை நோக்கி துரத்தி வர, செம்மறியாடுகளோடு, சிங்கக்குட்டியும் ஓடியது. ஓடிவந்த சிங்கம், தனது இரையினை விட்டுவிட்டு அச்சிங்கக்குட்டியைப் பிடித்தது. தரதரவென இழுத்துக் கொண்டு சென்று, அருகிலிருந்த கிணற்றிற்கு கொண்டு சென்றது. சிங்கத்தைப் பார்த்து, பயந்து நடுங்கிய சிங்கக்குட்டியை கிணற்றின் நீரில், அதன் பிம்பத்தைப் பார்க்க வைத்தது. அப்பொழுதுதான் தான் ஒரு சிங்கம் என்று  அந்த சிங்கக்குட்டி உணர ஆரம்பித்தது.

""உன்னைக் கண்டால் ஓடி ஒளிய வேண்டிய செம்மறியாடுகளோடு, நீயும் செம்மறியாடாகிப் போனாயே!''  எனப் பாய்ந்து பிடித்த சிங்கம் கூற, தன்னை உணர்ந்தது சிங்கக்குட்டி. அதன் கர்ஜனையில் ஓடின செம்மறியாடுகள். இதனையே, ""இளைஞர்களே!  நீங்கள் சிங்கங்கள்! செம்மறியாடுகள் என்ற மயக்கத்தினை  உதறித் தள்ளுங்கள்'' என்றார்  சுவாமி விவேகானந்தர். 

அச்சிங்கக் குட்டியைப்போல் தன்னை யாரென அறியாமலேயே வாழ்கின்ற விலங்குகள் ஏராளமாக இருப்பது விலங்கினத்தின் அறிவீனம். ஆனால், மனிதர்களும் தன்னை அறியாமல் இவ்வுலகத்தில் வாழ்கிறார்கள் என்பதுதான் வேடிக்கையான உண்மை. மனிதனின் தேடலில் முதல் தேடல் தன்னைத் தேடுதலாகவும் மனிதனின் முதல் வெற்றி தன்னை வெற்றிகொள்வதாகவும் இருந்தால், அதுவே வாழ்வின் சிறப்பு.  

மனிதனாய்ப் பிறந்தவன் அறிய வேண்டியதில் முதன்மையானது தன்னை அறிவது என்பது சித்தர்கள் வாக்கு.  

தன்னை அறிய தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்

என்ற திருமூலரின் வரிகள், மனிதன் தன்னை அறிவது அவசியம் என்பதை விட, அத்தியாவசியம் எனத் தெளிவுபடுத்துகிறது.

தன்னை அறிவது ஒரு கலை; தன்னை அறிவதுவே ஒழுக்கம்; அதில், எதையும்  ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மலரும்.  பிறர் குறை காணாது, தன் குறையைக் காணத் துடிக்கும்.  தன்னையறிந்தவனுக்கு நம்பிக்கை பிறக்கும்; முயற்சிக்க ஆற்றல் பீறிட்டெழும்; மகிழ்வாய்ச் செயல்படத் தோன்றும்; எடுக்கும் காரியங்களிலெல்லாம் வெற்றியாகும். மொத்தத்தில் தன்னையறிவதுவே பேரறிவின் தொடக்கம்.

இராமேசுவரக் கடற்கரையில் மொத்த வானரப் படைகளும் இலங்கைக்குச் செல்வதற்கு தகுதியானவர்கள் யார்? என்ற கேள்வியோடு நின்று கொண்டிருந்தனர். என்னால் முடியாது என்று எல்லோரும் சொன்னது போலவே, அனுமனும் சொல்ல, அதனை மறுத்தவர் ஜாம்பவான். ""அனுமா... நீ  வாயு குமாரன். குழந்தையாய் இருக்கும்போதே விண்ணில் பறந்து, சூரியனைப் பழமென்று பிடித்து, உண்ண ஆசைப்பட்டவன். ஒற்றைத் தாவலில் ஓராயிரம் மைல் கடந்தவன். உனது சக்திக்கு, இலங்கை ஒன்றும் அதிக தூரமல்ல'' என்றதும், தனது திறமையை உணர்ந்தார் அனுமன். தன்னை உணர்ந்த மறுகணம், இலங்கையில் அனுமன் இருந்தார்  என்கிறது இராமாயணம். 

அத்தகைய ஜாம்பவான்களைப்போல் தங்களது குழந்தைகளின் அறிவின் திறமையை உணர்ந்தவர்கள் பெற்றோர். இவர்களுக்கு பள்ளிக் கல்வியை எளிதில் புரிந்து கொள்ளும் திறமை இல்லை என்று  அனுபவப்பட்ட ஆசிரியர்கள் அந்தக்  குழந்தைகளிடம் கடிதம் கொடுத்தனுப்பினர் . அவர்களை உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளான தாமஸ் ஆல்வா எடிசனாகவும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனாகவும் வெளிக் கொணர்ந்தவர்கள் அவர்களது பெற்றோர்.   

தன்னுடைய மற்ற பேரப்பிள்ளைகளெல்லாம் ஒரு தொழிலில் ஈடுபட்டு சம்பாதிக்கிறார்கள். ஆனால், இரவீந்திரநாத் தாகூர் மட்டும் சம்பாதிக்கின்ற தொழிலில் இல்லாமல், நிலையில்லாமல் இருக்கிறார் என வருத்தப்பட்டார் அவரது பாட்டி. தாகூர் அதற்குக் கவலை கொள்ளவில்லை. அவர், தன்னை ஒரு கவிஞன் என அறிந்ததால்தான் உலகம் போற்றும் நோபல் பரிசினை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்தார்.     தந்தை எதிர்பார்த்த மதிப்பெண்ணை விட, தன்னுள் எழுந்த கவியினை உணர்ந்ததால்தான் தமிழகம் ஒரு மகாகவி பாரதியை இவ்வுலகிற்குத் தந்தது.


எனவே, தன்னுள் மறைந்திருக்கின்ற உண்மையைக் கண்டுபிடிப்பது ஓர் உன்னதப் பணி. உயரிய பணி.  எழுச்சியும், முன்னேற்றமும் ஒவ்வொரு உயிருக்கும் பிறப்பிலே கிடைத்த உரிமை என்கிறது ரிக் வேதம். அவ்வுரிமையை சிறிய வயதிலேயே உணர்கின்றவர்கள், சான்றோர்; இளம் வயதில் உணர்ந்தால், ஞானி; முதுமையில் கற்றுக் கொண்டால், மனிதன்; உணராமலிருப்பவருக்கு  மீண்டும் பிறக்க வைத்து கற்றுக் கொடுக்கும் இவ்வுலகம். மொத்தத்தில், நம்மை யார் என்று முதலில் அடையாளம் காணும் போதுதான் வாழ்வே ஆரம்பமாகிறது.

இத்தாலிய பொருளாதார நிபுணர் வில்ப்ரெடோஃபாரேடோவின் 80/20 விதியின்படி, ஒரு மனிதனின் 20% செயல்கள் தான் அவருக்கு 80% திருப்தியைத் தரும். அதன்படி, ஒரு விளையாட்டின் 20% வீரர்கள்தான் 80%  வெற்றிக்குத் துணையாயிருப்பவர்கள் என்பதற்கு கிரிக்கெட்டில் ஓபனிங் பேட்ஸ்மேன் முதல்  கால்பந்தில் 10  ஆவது எண்கொண்ட "ஜெர்ஸி' அணியும் விளையாட்டு வீரர்கள் உதாரணம். 

அதேபோல் ஒரு மனிதனின் 80%  மகிழ்ச்சியான உழைப்பிற்கு அடிப்படை அவர்கள் செய்கின்ற 20%  செயல்பாடுகளேயாகும். யார் ஒருவர் அத்தகைய 20% செயல்பாட்டினை  தினமும் முதன்மைப்படுத்தி செய்கின்றாரோ,  அவரது வாழ்வு மகிழ்ச்சியோடும், வெற்றியோடும் அமையும். இப்பூவுலகில் வாழும் ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் அடிப்படையான ஆரோக்கியத்திற்கும், மன அமைதிக்கும் ஒரு மனிதன் ஒரு மணி நேரம் சரியாக செலவழித்தால், அம்மனிதனுக்கு வாழ்வெல்லாம் மகிழ்ச்சியேயாகும். நம் உடலையும், மனதையும் அறிந்து கொள்வதற்காக நாம் பயன்படுத்தும் நேரம், நாம்  நம்மோடு உறவாடும் நேரம். அது தான், ஒவ்வொரு நாளின் ஆதார நேரம்.

"ஒரு நாளில் ஒரு முறையாவது உங்களுடன் பேசிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் இவ்வுலகிலேயே மிகச்சிறந்த மனிதனைச் சந்திக்காமலே போய்விடுவீர்கள்'என்ற சுவாமி விவேகானந்தரின் வரிகள் ஒவ்வொரு  நாளும் மனிதன் சற்று நேரமாவது உலகத்திலிருந்து தனிமைப்பட்டு  தியானித்து, மனதைப் பண்படுத்தத்  தூண்டுகிறது. 

1953 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் நாள், உலகத்திலேயே முதன் முதலாக பனிபடர்ந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வெற்றி கண்டவர்கள் டென்சிங் நார்கேயும், எட்மன் ஹிலாரியும் ஆவர். டென்சிங் நார்கே, டார்ஜிலிங்கைச் சேர்ந்தவர். அவரிடம், ""முதன் முதலாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி அதனை வெற்றிகொண்டுவிட்டீர்கள்.  வெற்றியின் மூலம், நீங்கள் என்ன தெரிந்துகொண்டீர்கள்?'' என்று கேள்வி கேட்டனர். புன்முறுவலோடு, ""நான் சிகரத்தை வெற்றி கொள்ளவில்லை. என்னை எவ்வாறு வெற்றி கொள்வது? என்று தெரிந்துகொண்டேன்'' என்பதிலிருந்து, மலையின் உயரத்தைவிட மனதின் உயரம் பெரிதென்கிறார் டென்சிங்.  ஒருமுறை ஏறுவதே சாதனை என்று உலகம் கைதட்டி ஆரவாரித்தபோது, டென்சிங் பன்னிரண்டு முறை ஏறி சரித்திரம் படைத்தார். காரணம், டென்சிங்கிற்கு மலையேற்றம் மட்டுமல்ல, தன் மன ஏற்றமும் தெரிந்தது. டென்சிங்கின் வார்த்தையில், "உலகை ஆள்பவனுக்கு முதலில் தன்னை ஆளும் சக்தியும், உலகை அறிவதற்கு முன் தன்னை அறியும் சக்தியும் அவசியம்' என்பது மிளிர்கிறது.  அதேபோல்தான், அரண்மனை வாசம் சித்தார்த்தனை உலகை வெல்ல கற்றுக்கொடுக்க முயற்சித்தது. ஆனால், போதி மரத்து நிழல்   " உலகத்தை விட தன்னை வெல்வதே சிறந்த வெற்றி' என்று போதித்து  புத்தர் ஆக்கியது. 

குழந்தை  முதல் முயற்சியாக தன்னைச் சுற்றியுள்ளதை அறிகிறது.  பின்னர், மாணவனாக உலகத்தின் இயல்புகளையும், புதுமைகளையும் அறிகிறது. படிப்படியாக தனது திறமையை வெளிப்படுத்தி தன்னை மேலோனாக்குகிறது. வளர்ச்சியின் முதிர்வில் இவ்வுலகிற்கும், தனக்குமுள்ள உறவினை அறிகிறது.

தான் பிறந்ததன் நோக்கத்தை அறிந்தவர் உயர்ந்த நிலையை அடைவர். அவர் அகண்ட வெளியிலிருந்து பறந்து வந்தாலும், சரியான ஓடுதளத்திலே விமானத்தை இறக்குகின்ற விமானிபோல் தன்னைச் செயல்படுத்துபவர். தன்னை மையமாக வைத்து பேசப்படுகின்ற பேச்சுகள் அவர் மனதைச் சென்று தாக்காத கருப்பு பெட்டி. மொத்தத்தில் எதைச் செய்தால் எது நடக்கும் என்பதையாவது அறிபவராய் இருப்பதால் அவரது செயல்பாடு வாழ்வினில் உயரத் துடிப்பவர்களுக்கு  வழிகாட்டியாய் அமையும். 

வாழ்வை எப்படியாவது  அறிய  வேண்டும்  என ஆசைப்பட்டார் ஒருசீடன். தனது குருவிடம், ""குருவே...  வாழ்க்கையின் அர்த்தம் என்ன?'' என்று கேள்வி கேட்டான்.  பதிலாக குரு, ""அதேதான்'' என்றார். ""குருவே...  வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று கேட்டால் அதேதான்  என்று பதில் சொல்கிறீர்களே'' என்று கேட்டான். குருவும் பதிலாக, ""அதேதான்'' என்றார். சீடனுக்கு ஒன்றும் புரியவில்லை. குழம்பிப்போனான். ""சீடனே...  வாழ்வின் அர்த்தம் என்ன? என்று தெரியவேண்டுமென்றால் அதனைக் கேட்டுக்கொண்டே இரு! தொடர்ந்து கேட்டுக்கொண்டே இரு!  பதில் கிடைக்கும்; வாழ்விற்கும் விடை கிடைக்கும்'' என்றார். 

"என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ'  என்ற சிவவாக்கியாரின் ஏக்கத்திற்கேற்ப, உலகை அறிவது அறிவு!

தன்னையே அறிவது பேரறிவு!


(தொடரும்)


கட்டுரையாசிரியர்: காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com