ஆயிரம் விழிகள்...செவிகள்!

உலகில் உள்ள மக்கள்தொகையில் சுமார் 200 கோடி பேர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆயிரம் விழிகள்...செவிகள்!

உலகில் உள்ள மக்கள்தொகையில் சுமார் 200 கோடி பேர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 25 கோடி மக்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கிட்டத்தட்ட 80 சதவீத நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிடுகின்றனர். 
இந்நிலையில், நாம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களையும், அதில் நமது செயல்பாடுகளையும் நமக்கே தெரியாமல் சில நிறுவனங்கள் கண்காணித்து வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. நமது பணி வாழ்க்கையில் சமூக வலைதளப் பதிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 
பாதுகாப்பில்லாத தனிநபர் விவரங்கள்
முகநூல், சுட்டுரை முதலான பல சமூக வலைதளங்களில் நமது தனிநபர் விவரங்களைச் சேமித்து வைக்கிறோம். நமது புகைப்படங்கள் முதல் முக்கிய நிகழ்வுகள் வரை அனைத்தையும் பதிவு செய்கிறோம். இவ்விவரங்கள் சமூக வலைதளங்களின் பல்வேறு இடங்களில் தரவுகளாக சேமித்து வைக்கப்படுகின்றன. இந்த தரவுகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதள நிறுவனங்கள் தெரிவித்து வந்தாலும், அவை உண்மையில் பிறரால் எளிதாக எடுக்கப் படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. 
இவ்வாறு கைப்பற்றப்பட்ட தகவல்கள் மூலம் பெற்ற விவரங்களை பல நிறுவனங்கள் தங்கள் சுய லாபத்துக்காக பல விதங்களில் பயன்படுத்த முடியும் என்றும், சில நிறுவனங்கள் தங்களுடைய தொழில், வணிகம் ஆகியவற்றைப் பெருக்குவதற்காக தனிநபர் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது. நாம் பயன்படுத்தும் பொருள்கள், நாம் செல்லும் இடங்கள், நாம் பார்க்கும் திரைப்படங்கள், நமக்குப் பிடித்த புத்தகங்கள், வாகனங்கள், உணவு வகைகள் என எல்லாவற்றையும் பிறர் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது..
தனிநபர் விவரங்கள் கண்காணிப்பு
நாம் புதிதாக ஒரு நிறுவனத்துக்கு விண்ணப்பிக்கும்போது, அந்த நிறுவனம் நம்மை பற்றிய பின்புல தகவல்களை அறிந்து கொள்ள நினைக்கின்றன. அவற்றை அவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். புதிதாக விண்ணப்பிப்பவர்கள் மட்டுமல்லாது, நிறுவனத்தின் பணியாளர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளவும் முடியும். 
இவ்வாறு பணியாளர்களின் சமூக வலைதளப் பயன்பாடுகளை உலக அளவில் பெரும் நிறுவனங்களான Google, Yahoo நிறுவனங்கள் உள்பட பெரும்பாலான நிறுவனங்கள் கண்காணிக்கின்றன. ஆனால் இதை நேரடியாக அந்த நிறுவனங்களே செய்ய முடியாத காரணத்தால், தனிநபர் விவரங்களை கண்காணிப்பதையே சில நிறுவனங்கள் தனது வியாபாரமாக/ தொழிலாகச் செய்து வருவதாகவும், நமது அன்றாடச் செயல்பாடுகளைக் கண்காணித்து நம்மை பற்றி விவரங்களை சேகரித்து, அவ்விவரங்களை தேவைப்படும் நிறுவனங்களுக்கு விற்று விடுவதாகவும் கூறப்படுகிறது.
பணியாளர்களே... கவனம்!
சமீபத்தில் எடுத்த ஓர் ஆய்வின்படி, உலக அளவில் கிட்டத்தட்ட 77 சதவீத நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை கண்காணிக்கவும், புதிதாக பணியமர்த்தவிருக்கும் தேர்வாளர்களின் பின்புலத்தை ஆராயவும், தங்களது வியாபாரத்தைப் பெருக்கவும், தனிநபர் பின்புல விவரங்களைக் கையாள்வது தெரிய வருகிறது.
நம்மில் பலர் காலை எழுந்து பல் துலக்குவதில் இருந்து இரவு தூங்கும் வரை நமது அனைத்து செயல்பாடுகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்கிறோம். இத்தகைய பதிவுகள் நமது வேலைக்கே வேட்டு வைக்கவும் வாய்ப்புள்ளது. சமூக வலைதளங்களில் உண்மைகளை விட வதந்திகள் அதிகமாகப் பரவுகின்றன. 
இதேபோல, புதிய பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போதும், விண்ணப்பதாரர்களின் விவரங்கள், அவர்களது பின்புலம் ஆகியவற்றை அறிய அவர்களது சமூக வலைதள விவரங்களைக் கண்காணிக்கின்றன.அவர்களின் செயல்பாடுகள் நிறுவனத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்சத்திலேயே அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.
காக்க வேண்டியது... நா மட்டுமல்ல!
நாம் பாதுகாக்கப்பட வேண்டியவைஎன நினைக்கும் நம் தனிப்பட்ட தரவுகள் முதல் நாம் சமூகத்தில் பகிர நினைக்கும் பொதுவான விவரங்கள் வரை அனைத்து விவரங்களும் சமூக வலைதளங்களில் சேமித்து வைக்கப்படுகின்றன. நமது பூர்வீகம் முதல் அன்றாடச் செயல்பாடுகள் வரை இத்தரவுகள் மூலம் பிறர் தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. 
எனவே பொறுப்புடன் செயல்பட்டு, சமூக வலைதளங்களைக் கவனமாக பயன்படுத்த வேண்டும். யாகாவாராயினும் காக்க வேண்டியது நா மட்டுமல்ல. இணைய செயல்பாடுகளையும்தான்.
-க. நந்தினி ரவிச்சந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com