சுடச்சுட

  
  im1


  மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல் என பலதுறைகளிலும் பணி வாய்ப்புப் பெற அதற்காகப் படித்துப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  ஆனால் அரசியலில் பங்கேற்க தகுதி எதுவும் நமதுநாட்டில் நிர்ணயிக்கப்படவில்லை. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கி அல்லது கட்சியில் இணைந்து அரசியலில் பங்கேற்கலாம் என்ற நிலை இப்போது உள்ளது.  அப்படி அரசியலில் ஈடுபடுவோர் பலருக்கு அரசியலின் அடிப்படைகளே தெரியாமல் இருக்கிறது. அரசியலில் ஈடுபடுவதற்குரிய அடிப்படையான விஷயங்களை எல்லாம் கற்றுத் தரும்  ஒரு படிப்பு உள்ளது.

  அரசியல் குறித்த பொது தகவல்கள், நாட்டு நடப்பு, உலக நடப்பு, சட்டதிட்டங்கள், அரசியல் நுணுக்கங்கள், நடைமுறை அரசியல் போன்றவற்றை அனுபவமுறையில் கற்பித்து அவர்களை அரசியல் களத்திற்கு தயார்செய்து அனுப்பும் வகையில், "அரசியல் தலைமை மற்றும் அரசு' என்ற புதிய முதுநிலை பட்டப் படிப்பு சில தனியார் கல்வி நிறுவனங்களால் அண்மைக்காலமாக நடத்தப்பட்டு வருகிறது.

  அவ்வாறான நிறுவனங்களில் ஒன்று மகாராஷ்டிர மாநிலம், புணேவில் உள்ள MIT World Peace University. இப்பல்கலைக்கழகம் அரசியலில் திறன்மிக்க ஆளுமைகளை உருவாக்கும் பொருட்டு Master`s in Political Leadership and Government என்ற 2 ஆண்டுகள் கொண்ட முதுநிலை பட்ட வகுப்பை ரெசிடென்சியல் கோர்ஸôக நடத்துகிறது. 

  இதற்கு முன்னதாக அரசியல் அறிவியல் (Political Science) என்ற முதுநிலை பட்டக்கல்வி பெரும்பாலான பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்டாலும், அது வகுப்பறை கல்வியாகவும், அஞ்சல்வழி கல்வியாகவும் மட்டுமே இருந்து வருகிறது. ஆனால், MIT-SOG வழங்கும் முதுநிலைப் பட்டத்தில் ஓராண்டு உறைவிடக் கல்வியும், அடுத்த ஓராண்டு அரசியல் கட்சிகள், அலுவலகங்கள், அரசு அமைப்புகள் உள்ளிட்டவற்றில் செயல்முறை பயிற்சியும் உள்ளது.

  இந்த படிப்பில் சேர்ந்த ஒருவர் அரசியலில் வெற்றி பெறுவதற்கான தலைமைத்துவ திறன் மேம்பாடு, அரசியல் மற்றும் அரசு நிர்வாகத்தில் அனைத்து நுணுக்கங்களிலும் அனுபவரீதியில் பயிற்சி பெறும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, டாடா சமூக அறிவியல் நிறுவனம், மனித உரிமைகள், ஜனநாயகம், அமைதி மற்றும் சகிப்புத்தன்மைக்கான யுனெஸ்கோ இருக்கை, புணே உலக அமைதி மையம், வடக்கு கரோலினா பல்கலைக்கழகம், இந்திய மாணவர் நாடாளுமன்றம் ஆகியவற்றுடன் எம்ஐடி பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.

  இந்தப் பாடத்திட்டத்தில், தேசிய அளவிலான தலைவர்களுடன் கலந்துரையாடல், தில்லியில் தேசிய கல்விப் பயணம், தொகுதி மேலாண்மை, தேர்தல் மேலாண்மை, தேர்தல் பற்றிய அறிவியல் ஆய்வு, சர்வதேச உறவுகள் குறித்த களப்பயணம், ஊராட்சி சபை, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சட்டப்பேரவை, கூட்டுறவு அமைப்புகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு களப்பயணம், அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களில் இணைந்து அனுபவ பயிற்சி பெறுவது போன்றவை இடம்பெற்றுள்ளன. இவையல்லாமல், விருப்பத் தேர்வாக சர்வதேச கல்விப் பயணமாக ஐரோப்பாவுக்குச் செல்லும் வாய்ப்பும் உள்ளது. 

  மேலும், கல்வி வளாகத்தில் நடைபெறும் மாதிரி நாடாளுமன்றம் மூலம் உண்மையான நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. அதோடு, தில்லி கல்விப் பயணத்தின்போது, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகளை நேரில் காணவும், நாடாளுமன்ற உறுப்பினர்களோடு கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும், உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றை பார்வையிடவும் அதுகுறித்த செய்திகளை அறிந்துகொள்ளவும் வகைசெய்யப்படுகிறது.

  விருப்பத் தேர்வான ஐரோப்பா கல்விப் பயணத்தின்போது, பிரிட்டிஷ் நாடாளுமன்றம், பிரிட்டிஷ் நூலகம், பிரிட்டிஷ் வரலாற்று அருங்காட்சியகம், காமன்வெல்த் செயலகம், நேட்டோ அலுவலகம், பாரிசில் உள்ள யுனெஸ்கோ அலுவலகம், உலக வர்த்தக நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு சர்வதேச உறவுகள் கற்பிக்கப்படுகின்றன.

  2 ஆண்டுகள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள் தாங்கள் விரும்பும் பதவிகளுக்கு தேர்தலில் போட்டியிட்டு அந்த பதவியைப் பெற வாய்ப்புகள் உள்ளன. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவைத் தலைவர், முதல்வர், பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெறமுடியும். அதோடு, அரசியல் ஆய்வாளர், இணை கொள்கை ஆய்வாளர், தொகுதி மேலாளர், ஊடக ஆய்வாளர், தேர்தல் ஆய்வாளர், மக்கள் தொடர்பு அலுவலர் என பல வேலைவாய்ப்புகளை இந்தப் பயிற்சியை முடித்தவர்கள்  பெற முடியும்.

  Master`s in Political Leadership and Government படிப்பில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஓர் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வும், அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வும் நடைபெறும். கல்விக் கட்டணம் என்பது கோர்ஸ் கட்டணம், விருப்பத் தேர்வு சர்வதேச கல்விப்பயண கட்டணம் என 2 பிரிவுகளைக் கொண்டது. கோர்ஸ் கட்டணம் மொத்தம் ரூ. 2.5 லட்சம். இதில், களப் பயணம், தேசிய கல்விப் பயணம், கோர்ஸ் மெட்டீரியல் ஆகியவை அடங்கும். சர்வதேச கல்விப் பயணம் விருப்பத் தேர்வு அடிப்படையிலானது. இதில் விரும்பிப் பங்கேற்கும் மாணவர்கள் அப்போது ஆகும் செலவை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

  60 இடங்களைக் கொண்ட இந்த கோர்ஸூக்கான நுழைவுத் தேர்வு வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும், விவரங்களை www.mitsog.org என்ற இணைய முகவரியில் அறிந்துகொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai