சரியான பார்வை...  சரியான வழி... சரியான செயல்! - 42

இந்தியா முழுவதும்  JEE தேர்வை எழுதக் கூடிய  13 லட்சம் மாணவர்களில் 10 லட்சம் மாணவர்கள் இந்தப் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுகின்றனர்.
சரியான பார்வை...  சரியான வழி... சரியான செயல்! - 42

இந்தியா முழுவதும்  JEE தேர்வை எழுதக் கூடிய  13 லட்சம் மாணவர்களில் 10 லட்சம் மாணவர்கள் இந்தப் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுகின்றனர். JEE, NEET தேர்வு எழுத பயிற்சி அளிப்பதாகக் கூறி பல லட்சம் ரூபாய்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.  பள்ளிக் கட்டணம் சீரமைக்கப்பட்டாலும், சிபிஎஸ்சி, மற்றும் தமிழ்நாடு பள்ளிகளில் இதற்கான ஒருங்கிணைந்த  பயிற்சி வகுப்புகள் (INTEGRATED TRAINING CLASS) நடத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும்,  இதை மீறி இன்று பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க இந்த  ஒருங்கிணைந்த   பயிற்சி வகுப்புகளில் அவர்களைச் சேர்ப்பதை முன்நிபந்தனை ஆக்குகிறார்கள்.  இதில் பண வசதி படைத்த பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளைச் சேர்த்துவிடுகிறார்கள். பண வசதியில்லாதவர்கள்  நமது குழந்தைக்கு நல்ல கல்வி கிடைக்கவில்லையே என்ற  வருத்தத்துடனும், அச்சத்துடனும் அவர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் கட்டணமாகச் செலுத்தி தங்களுடைய பிள்ளைகளை இந்த பயிற்சி  வகுப்புகளில் சேர்க்கிறார்கள்.  

அப்படிப் பயின்ற ஏறத்தாழ 8 லட்சம் மாணவர்கள் பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்றிருந்தாலும்,  வெறும் 20 கேள்விகளுக்கு JEE மெயின்தேர்வில் பதில் எழுத முடியாத நிலையே உள்ளது. 1 லட்சத்து 7 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே 74 மதிப்பெண்களுக்கு மேலாக வாங்க முடிகிறது. இந்த பயிற்சிமையங்கள் எல்லாம் பணம் வசூலிக்கும் மையங்களாக இருப்பதையே இது காட்டுகிறது. கல்வியின் தரம், பயிற்சியின் தரம் எந்த அளவுக்குக் குறைவாகவே உள்ளது என்பதையே இது காட்டுகிறது.

நகர்ப்புறங்களில் வருமானம் அதிகம் உள்ள பெற்றோர்களால் மட்டுமே,  இந்தப் பயிற்சி மையங்களில் தங்களுடைய பிள்ளைகளைச் சேர்க்க முடிகிறது.

ஆனால் கிராமப்புறத்தில் உள்ள சில திறமையான மாணவர்கள்,  தங்களுடைய ஆசிரியர்கள் கற்பித்தாலும், கற்பிக்காவிட்டாலும், தங்களிடம் உள்ள பாடப்புத்தகங்களைத் தாங்களாகவே முழுவதும் கற்றுக் கொள்கின்றனர். JEE மெயின்தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி மையங்களில் பயின்றால் மட்டுமே முடியும் என்ற கருத்தை, அதற்காகச் செய்யப்படும் விளம்பரங்கள் அப்படிப்பட்ட  திறமையான மாணவர்களிடம்  கூட விதைத்துவிடுகின்றன.  

இதனால் கிராமப்புற மாணவர்  இந்தப் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவே  தயங்கும்நிலை உள்ளது. அப்படியே விண்ணப்பித்திருந்தாலும்,  போட்டித் தேர்வுகளை எழுதும் மையங்கள் கிராமங்களில் இல்லை.  தேர்வு எழுத நகரத்துக்கு வர வேண்டும்.  தேர்வு எழுதுவதற்கு வரும்போது தங்குவதற்கான இட வசதி இல்லை. உறவினர்கள் கிடையாது. போட்டித் தேர்வு எழுத நகரத்துக்கு வந்தால்,  இதற்கான செலவுகளைச் செய்ய கிராமப்புற மாணவர்களிடம் பணம் இருக்காது.

இப்படிப்பட்ட  சிந்தனையால் கிராமப்புற மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு  விண்ணப்பிக்கத் தயங்குகிறார்கள்.  தேர்வு எழுதுவதற்கான செலவுகளைச் சமாளிக்கும் பொருளாதார வசதி அவர்களுக்கு இல்லை. ஆகவே கிராமப் புற மாணவர்கள் நன்றாகப் படித்திருந்தாலும்,  நமது அரசியல்சாசனம் வழங்கியுள்ள  சமவாய்ப்பு என்பது  நகர்ப்புற மாணவர்களுடன் ஒப்பிடும்போது கிராமப்புற மாணவர்களுக்குக் கிடைக்காமல் போய் விடுகிறது. 

நகர்ப்புறங்களில் உள்ள படித்த  பெற்றோர்கள்,   பாடத்திட்டத்தைப் பள்ளிகள் முழுமையாக மாணவர்களுக்கு கற்பிக்கின்றனவா என்பதை   உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.   கல்வி தனியார்மயமான இன்றையச் சூழலில் பள்ளிகளில், "பெற்றோர் - ஆசிரியர் அமைப்புகள் பெயர் அளவில் மட்டுமேதான் செயல்படுகின்றன. 

"எதிரியைப் பிரித்து வெல்லுதல்'  என்ற அடிப்படையில் பள்ளி நிர்வாகங்கள் செயல்படுகின்றன.  பள்ளியில் நன்றாகச் சொல்லித் தருவதில்லை என்று பெற்றோர் யாராவது குற்றம்சாட்டினால்,  அந்தப் பள்ளியில் பயிலும் அவருடைய மகனைப் பள்ளியில் இருந்து வெளியேற்றிவிடுகிறார்கள். 

இது மற்ற பெற்றோரிடம் ஓர் அச்சத்தினை ஏற்படுத்தி விடுகிறது. தங்களுடைய பிள்ளைகளின்  எதிர்காலம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தை உருவாக்குகிறது. "அச்சம் தவிர்'  என்ற பாரதியின் வாசகம் பள்ளிகளின் சுவர்களில் பதிக்கப்பட்டிருந்தாலும்,  அச்சத்தை உருவாக்கக் கூடிய வகையிலேயே எண்ணற்ற பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 

பள்ளி மாணவர்கள் இயல்பாக வளரக் கூடிய தன்மையை நிறைய பள்ளிகள் மாற்றி அமைக்கின்றன.  உதாரணமாக மாணவர்களின் பேச்சுரிமை மறுக்கப்படுகிறது.  மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு அதற்குப் பதில் சொன்னால்தான்,  மாணவர்களின்  திறமைகள் மேன்மேலும் வளரும். மாணவர்கள் கேள்விகள் கேட்பதற்கு அனுமதிக்கப்படவில்லை  என்றால், அவர்களுடைய கேள்வி கேட்கும் திறமை   குறைந்துவிடுகிறது.

வினாக்களைக் கேட்டு அதற்கான பதில்களைப் பெற்று ஒரு பாடத்தைப் புரிந்து கொண்டால்தான், மாணவர்களின் இயல்பான திறமை வளர முடியும்.  10 - 20 கேள்விகளை ஒரு மாணவர் கேட்டு, சரியான பதில்கள் அவற்றுக்குத் தரப்படாத நிலையில் அந்த மாணவர் சோர்வடைந்து,  வினாக்கள் எழுப்புவதையை மறந்துவிடுவார். மாணவருக்கு வினாக்கள் எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டாலோ,  அவர் கேட்ட வினாக்களுக்கு உரிய பதில்கள் அளிக்கப்படவில்லை என்றாலோ,  அந்த மாணவருக்கு மட்டுமல்ல, பிற மாணவர்களுக்கும்  வினாக்களை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமற் போகிறது. 

இதனால் ஒரு பாடத்தை ஒரு மாணவர் எந்தகோணத்தில் இருந்து  பார்க்கிறார் என்பதைப் பிற மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடுகிறது. 
இதுமட்டுமல்லாது, நிறைய பள்ளிகள் பெரிய மதில்சுவர்களை எழுப்பி, பள்ளிக்குள் நடைபெறும் நிகழ்வுகளை பெற்றோர் அறியக் கூடாது என்பதற்கு தடை விதிக்கிறார்கள்.

ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் மாணவர்களை அவர்கள் பயிலும் வகுப்பறைக்கே வந்து பார்க்க முடியும். ஆனால்  இன்றோ பள்ளிக்கு வரும் பெற்றோரைச் சந்திக்க வகுப்பறையை விட்டு மாணவர்கள் வெளியே வர வேண்டியதிருக்கிறது. பள்ளிக்குள் என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்குக் கூட பெற்றோருக்குச் சுதந்திரம் அளிக்கப்படுவதில்லை. இவ்வளவுக்கும் கல்விக் கட்டணமாக பெற்றோர் நிறையச் செலுத்தினாலும், பள்ளியில் நடப்பதைத் தெரிந்து கொள்ள அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 

ஆந்திராவில் உள்ள சில இடங்களில், தமிழகத்தில் நாமக்கல் போன்ற எண்ணற்ற பகுதிகளில் இயங்கிவரும்   "கோச்சிங் பேக்டரிகள்' கல்வியின் பெயரில் மாணவர்களைச் சிறைப்படுத்துகின்றன. 

அரசியல் சாசனப்படி  தரப்பட்டிருக்கும்   கருத்தை வெளிப்படுத்தும், பேசும் உரிமையை இந்த கோச்சிங் பேக்டரிகள் பறித்துவிடுகின்றன. உதாரணமாக சில கோச்சிங் பேக்டரிகளில் பயிலும் மாணவர்களை அதிகாலை நான்கு மணிக்கு எழுப்பி  படிக்கச் சொல்கிறார்கள்.  இரவு 11 மணி வரைக்கும் அவர்களை விளையாட அனுமதிப்பதில்லை. அவர்களுக்குச் சிறிதுநேரம் கூட ஃப்ரீ டைம் தருவதில்லை. மனப்பாடம் செய்யக் கூடிய ரோபோக்களாகவே மாணவர்களை அவர்கள் உருவாக்குகிறார்கள். இதனால் அந்த குழந்தைகளின் இயல்பான திறமைகள் கண்டுபிடிக்கப்படாமல், வீணடிக்கப்படுகின்றன.

இம்மாதிரியான பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்தால் அவர்கள் நன்றாகப் படித்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வருவார்கள் என்று பெற்றோர் நம்புவதால்தான் இந்த கோச்சிங் பேக்டரிகளை நடத்த முடிகிறது.

கல்வியைத் தாண்டி குழந்தைகளின்  வளர்ச்சியை - 360 டிகிரியில் -  எல்லாக் கோணங்களிலும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. இந்த மாணவர்களுக்கு  ஒரு நாள் கூட விடுமுறை அளிப்பதில்லை.  உதாரணமாக,  குடும்ப விழாக்களுக்கோ, நல்லது கெட்டதுக்கோ இந்த மாணவர்கள் செல்ல விடுமுறை அளிப்பதில்லை. இதனால்  இந்த மாணவர்களுக்கு பள்ளியைத் தாண்டி வேறு உலகம் இருப்பது தெரிவதில்லை. வேறு பள்ளிகளில் பயிலும் பிற மாணவர்களின் பொழுபோக்குச் செயற்பாடுகள், விளையாட்டுகள்  எவை என்பதெல்லாம்  இவர்களுக்குத் தெரியாது. ஒருவேளை அவற்றை  அவர்கள் தெரிந்து கொண்டால், அதற்கெல்லாம் நமக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்று வருந்த நேரிடுகிறது.  அவர்களுடைய எல்லாத் திறன்களும் இத்தகைய பள்ளிகளில் தொலைக்கப்படுகின்றன. இது எதிர்காலத்தில் இந்த மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ளக் கூடிய  திறமையை இல்லாமற் செய்துவிடுகிறது. 

இப்பள்ளிகள் அதிகக் கல்விக்கட்டணம் வசூலிப்பதற்காக,  பள்ளியில் பயின்று நிறைய மதிப்பெண்கள் எடுத்த ஒரு சில மாணவர்களைப் பற்றி பெரிய அளவில்  விளம்பரப்படுத்துகிறார்கள். உதாரணமாக, இரண்டாயிரம் மாணவர்கள் படிக்கக் கூடிய பள்ளியில் அதிக மதிப்பெண்கள் எடுத்த வெறும் 200 மாணவர்களை முன்னிலைப்படுத்தி விளம்பரம் செய்து,  பிற மாணவர்களை ஏமாற்றக் கூடிய பள்ளிகளின் மீது ஏன் எந்த அரசாங்கமும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை?   இந்தப் பள்ளிகளால் எத்தனை மாணவர்கள்  எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதுமில்லை. இதுகுறித்து சமூகத்தில் இருக்கும் நாம் எல்லாரும் அறிந்தும் அறியாததுபோல இருக்க என்ன காரணம்? என்பன போன்ற  நிறைய கேள்விகள்  எழுகின்றன.

(தொடரும்)

கட்டுரையாசிரியர்:  சமூக கல்வி ஆர்வலர் www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com