சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 43 - தா.நெடுஞ்செழியன்

மாணவர்கள் தங்களிடம் உள்ள கற்பனைத் திறன், பேச்சாற்றல், எழுத்தாற்றல், விளையாட்டுத் திறன் போன்ற எண்ணற்ற திறன்களை அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பினை தற்போதைய கல்விமுறையால் இழந்து விடுகிறார்கள்
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 43 - தா.நெடுஞ்செழியன்

மாணவர்கள் தங்களிடம் உள்ள கற்பனைத் திறன், பேச்சாற்றல், எழுத்தாற்றல், விளையாட்டுத் திறன் போன்ற எண்ணற்ற திறன்களை அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பினை தற்போதைய கல்விமுறையால் இழந்து விடுகிறார்கள். அவற்றைப் பள்ளிப் பருவத்தில் அவர்களால் அறிய முடியவில்லை என்றால், வாழ்க்கையில் எப்போதுமே அறியக் கூடிய வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. மாணவர்களுக்கு விடுமுறை கொடுக்க வேண்டும் என்று என்னதான் விதிகள் இருந்தாலும் இந்த கோச்சிங் பேக்டரிகளில் அவை கடைப்பிடிக்கப்படுவதில்லை. இது ஒருபுறம் இளம் மாணவர்களின் உரிமைகளைப் பறிக்கின்ற செயலுமாகும். 
பெற்றோரும் தங்களுக்குத் தெரிந்த இரண்டு துறைகளை மட்டுமே - பொறியியல் மற்றும் மருத்துவம்- ஆகியவற்றையே முன்னிலைப்படுத்துகிறார்கள். அவற்றைக் கற்கும்படி மாணவர்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். மாணவர்களுக்குப் பிறதுறைகளில் திறமைகள் இருந்தாலும் அவற்றை மறுத்து - அவர்களின் இயல்பான திறமைகள் வெளிப்படக் கூடிய வாய்ப்புகளை நாம் தடை செய்தோம் என்றால் - அது மாணவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியினை தடை செய்துவிடுகிறது. 
இப்படி பெற்றோர்களின் விருப்பத்தினால் நிறைய மாணவர்களின் எதிர்காலம் வீணடிக்கப்படுகின்றது. பெற்றோர் தங்களுடைய விருப்பத்துக்காக பிள்ளைகளைப் படிக்க வைக்க செலவழித்த தொகை, அந்தத் தொகையினால் குடும்பத்துக்கு ஏற்பட்ட கடன் தொல்லைகள் எல்லாம் அந்தக் குடும்பத்தின் மன அமைதியை இழக்க வைத்துவிடுகின்றன. நமது குழந்தை நமது கனவினை நிறைவேற்றவில்லை என்ற வருத்தம் பெற்றோருக்கு ஏற்படுகிறது. தங்கள் விருப்பப்படி படிக்க பெற்றோர் தங்களை அனுமதிக்கவில்லையே என்ற எண்ணம் மாணவர்களிடம் ஏற்படுகிறது. இதனால் பெற்றோர் }குழந்தைகளின் உறவில் பாதிப்பு ஏற்படுகிறது. 
இன்றைக்கு நாம் எதிர்பார்க்காத துறைகளில் எல்லாம் மாணவர்கள் அவர்களின் தனித்திறமையினால் மிக அதிகமாக- நாம் கனவிலும் நினைத்துப் பார்த்திராத அளவு - சம்பாதிக்கிறார்கள். உதாரணமாக பெருநகரங்களில் உள்ள சிறந்த விளம்பரப் புகைப்படக் கலைஞர்கள், ஒரு போட்டோவுக்கு ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். அவர்களுக்கு உதவியாளராக இருபது பேர் இருக்கிறார்கள். இவர்கள் ஒரு நாளைக்கு பத்து போட்டோ எடுப்பார்கள்; மாதத்தில் 10 நாட்கள் மட்டுமே வேலை செய்வார்கள். மீதி இருபது நாட்கள் உலகம் முழுவதும் சுற்றி வருவார்கள். இவர்களுக்கு இருக்கக் கூடிய தனித்திறமை, புகைப்படத்துறையில் அவர்களுக்கு உள்ள ஆர்வம் - அவர்களை அந்தத்துறையில் தனித்துவம் வாய்ந்தவர்களாக ஆக்கிவிடுகிறது. அதனால் 10 நாட்கள் வேலை செய்து, 20 நாட்கள் வெளிநாடுகளில் சுற்றுலா செல்வதென்பது அவர்களுடைய வழக்கமாக உள்ளது. 
அவர் நமது பொறியாளர் போலவோ, மருத்துவர் போலவோ அவர்கள் அதிகம் உழைப்பதில்லை. ஆனால் நன்கு படித்த பொறியாளர்களை விட, மருத்துவர்களை விட இளமையிலேயே அதிகமாகச் சம்பாதிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். 
இதேபோன்று வெட்டிங் பிளானர்ஸ் (Wedding Planners) மும்பை, புணே, டெல்லி போன்ற நகரங்களில் ரூ.100 கோடிக்கு அதிகமாகச் செலவு செய்யக் கூடிய திருமணங்களை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள். அந்தத் திருமணத்துக்குரிய எல்லாப் பணிகளையும் செய்து தருகிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய கமிஷன் குறைந்தபட்சம் 10 சதவீதம் ஆகும். இது தவிர, கேட்டரிங், அலங்கரிப்பு, லாஜிஸ்டிக்ஸ் போன்ற பிற வேலைகளிலும் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் கமிஷன் கிடைக்கிறது. ஆண்டுக்கு 4 திருமணங்களை அவர்கள் நடத்திக் கொடுத்தால் போதுமானது. இவர்களும் எளிதாக ஓர் ஆண்டுக்கு ரூ. 40 -50 கோடி சம்பாதித்துவிடுகிறார்கள். இதுபோன்று தற்போது எண்ணற்ற துறைகளில் இந்தத் தலைமுறையினர் மிக அதிக அளவில் சம்பாதிக்கிறார்கள். 
ஆனால் பெற்றோர் அரசு வேலையே மிகச் சிறந்த வேலை என்று கருதி மாணவர்களை நன்கு படிக்க வைத்தாலும், உண்மையில் மாணவர்களின் வளர்ச்சியினை அவர்கள் தடுத்து வருகின்றனர். 
அப்படித் தடுக்காமல் அந்த மாணவரை உற்சாகப்படுத்தி, அவர்களுக்கு மன தைரியத்தைக் கொடுத்தால், அவர் தொலைதூரத்தில் உள்ள எந்த இடத்துக்குச் சென்றாலும், அங்கு எவ்வளவு கடுமையான போட்டிகள் இருந்தாலும், மாணவர் தனது மன உறுதியினால் அவற்றைச் சமாளித்து மேம்பட்ட நிலையை அடைவார். கல்வியின் வாயிலாக அத்தகைய சூழலை மாணவர்களுக்கு உருவாக்கிக் கொடுப்பதே பெற்றோரின் கனவாக இருக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பெற்றோர் எடுக்கும் நடவடிக்கைகள், மாணவர்கள் தங்களுடைய தன்னம்பிக்கையை இழக்கச் செய்வதாக இருக்கக் கூடாது. "தமிழகம்' என்ற கிணற்றைத் தாண்டி உலகெங்கும் உள்ள வாய்ப்புகளை நமது மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான கல்விமுறை, கல்விச் சூழல் உருவாக்கப்பட வேண்டும். 
போட்டித் தேர்வுகள் எதுவாக இருந்தாலும் - அது ஐஐடி மெயின் தேர்வாக இருந்தாலும், நீட் ஆக இருந்தாலும்- அது நமது கல்வித்தரம் எவ்வாறு உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது என்று இதற்கு முன்பு விரிவாகப் பார்த்தோம். 
தற்போது இந்தியாவில் உள்ள பள்ளிகளுக்கு முன் நிற்கிற முக்கியமான சவால்கள் என்னவென்றால் எதிர்காலத்தில் சர்வதேச சவால்களை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் தரக் கூடிய கல்வியை இன்றைய இளையதலைமுறையினருக்குக் கற்றுத் தர வேண்டும் என்பதே. ஏனெனில் உலகில் உள்ள பிற நாடுகள் எல்லாம் அவர்களுடைய மனித மூலதனத்தை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சியை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்வதற்குத் திட்டமிடுகிறார்கள். பள்ளிக்கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை அவர்களுடைய கல்வித் தரத்தை உயர்த்துகிறார்கள். உலக அளவில் அந்த நாடுகளின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. தரமான கல்வியின் அவசியத்தை அவர்கள் உணர்ந்ததால், கல்விக்காக கணிசமான அளவு செலவு செய்கிறார்கள். இந்த நாடுகள் ராணுவத்துக்கோ, மக்களுக்கு வழங்கப்படும் இலவச சலுகைகளுக்கோ முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மக்களிடம் இருந்து வசூல் செய்த வரிப்பணத்தை முறையாகத் திட்டமிட்டுச் செலவழிக்கிறார்கள். 
குறிப்பாக உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காகச் செலவழிக்கிறார்கள். பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிக்கான சூழலை ஏற்படுத்த பெருமளவில் செலவழிக்கிறார்கள். 
நமது நாட்டிலும் கல்வியின் தேவையை உணர்ந்து முன்னாள் பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு, டாக்டர் இராதாகிருஷ்ணன், காமராஜர், லால்பகதூர் சாஸ்திரி, டாக்டர் சி.சுவாமிநாதன், டாக்டர் ஏ.எல்.முதலியார், விக்ரம் சாராபாய், டாக்டர் சாகா போன்ற கல்வியில் அக்கறை கொண்ட பலர், 1960 -களில் பல கல்வி நிலையங்களைத் தொடங்கினார்கள். அதன் மூலம் இந்திய கல்வி வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்கள். 1960 -களில் தொடங்கப்பட்ட இக்கல்லூரிகளெல்லாம் மிகக் குறுகிய காலத்திலேயே உலகப் புகழ்பெற்ற கல்விநிறுவனங்களாக மாறின. இவர்கள் கல்லூரிகளைத் தொடங்கும்போது கல்விக்காக ஆக்கப்பூர்வமான முறைகளில் எவ்வாறு செலவழிக்க வேண்டும்? என்பதைத் தெரிந்து கொண்ட சிறந்த கல்வியாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக உலகத் தரம் வாய்ந்த கல்லூரிகளை உருவாக்கினார்கள். அந்தக் கல்லூரிகளில் பயின்ற நிறைய மாணவர்கள் படித்து முடித்த பிறகு, இந்தியாவின் வளர்ச்சிக்காக எண்ணற்றதுறைகளில் குறிப்பாக பாதுகாப்பு, ஏரோ ஸ்பேஸ், ஆராய்ச்சி போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றினார்கள். இது இந்தியாவை வளர்ச்சியின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கு பயன்பட்டது. இதற்கு எடுத்துக்காட்டாக அப்போது உருவாக்கிய ஐஐடி, ஐஐஎம் எல்லாம் இன்று வரை தலைசிறந்து விளங்குகின்றன. இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் எந்தவொரு அரசியல் குறுக்கீடும் இருக்கக் கூடாது என்று தெளிவாக அப்போது வரையறுத்து இருந்தனர். அதன் விளைவாக தற்போது வரை அரசியல் பிரமுகர்கள், அரசியல் பிரதிநிதிகள் ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்விநிறுவனங்களின் நிர்வாகக் குழுவில் இடம் பெற வாய்ப்பில்லை. 
அரசியல் குறுக்கீடுகள் இல்லாத காரணத்தால், இக்கல்வி நிறுவனங்கள் தன்னிச்சையாக செயல்பட்டு கல்வியில் உலகப் புகழ் பெற்று விளங்க முடிந்தது; முடிகிறது. 
இக்கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் பல்வேறு நாடுகளுடனான கூட்டமைப்புகளினால் உருவாக்கப்பட்டன. நம் நாட்டின் எல்லைக்குள் கல்வியை நிறுத்திவிடாமல், நம்நாட்டின் தேவைகளை மட்டுமல்ல, உலக அளவில் உள்ள தேவைகளை நிறைவேற்றும்விதமாக கல்வியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் கல்வியை உலகமயமாக்கும் சிந்தனை அறுபதுகளிலேயே நம்நாட்டின் தலைவர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் அப்போதே தோன்றிவிட்டது. அதன் வெளிப்பாடாகத்தான் பிறநாட்டுக் கல்வி நிறுவனங்களோடு இணைந்து ஒப்பந்தங்கள் செய்துகொண்டு நமது நாட்டில் கல்வி நிறுவனங்களை அவர்கள் தொடங்கக் காரணமாக இருந்தது. 
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர்
www.indiacollegefinder.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com