பணியிடத்தில் பணிவு...வேலைப் பாதுகாப்பு!

வேலையில்லாத் திண்டாட்டம் உலகெங்கிலும் பரந்து விரிந்துள்ளது. நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதிகம் படித்த இளைஞர்கள்கூட தங்களது கல்வித் தகுதிக்கும் திறமைக்கும்
பணியிடத்தில் பணிவு...வேலைப் பாதுகாப்பு!

வேலையில்லாத் திண்டாட்டம் உலகெங்கிலும் பரந்து விரிந்துள்ளது. நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதிகம் படித்த இளைஞர்கள்கூட தங்களது கல்வித் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்த வேலையில் சேரத் தயாராக இருக்கின்றனர். அப்படி, பல ஆண்டுகள் தேடலுக்குப் பிறகு கிடைத்த வேலையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள அவர்களுக்குத் தெரியவில்லை. பணியில் சேர்ந்த ஆறு மாதங்கள் அல்லது ஓராண்டுக்குள் வேறு வேலை தேடும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுபவர்களை தற்போது அதிகம் காணமுடிகிறது. 
இதற்குக் காரணம், பணியிடங்களில் கற்றுக் கொள்ள வேண்டிய பல விஷயங்களை அவர்கள் கற்றுக் கொள்ளாததே. 
பணி செய்யும் இடத்தில், மூத்த சக ஊழியரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் இருந்தாலும், அவர்களின் வயதையும், அவர்களது பணி அனுபவங்களையும் மதிக்காமல், அவர்களை அலட்சியம் செய்வதைப் பார்க்க முடிகிறது. இதுவே அவர்கள் பணியில் தொடர்ந்து நிலைத்திருக்க முடியாமல் போவதற்கான காரணங்களில் ஒன்றாகவும் ஆகிவிடுகிறது. 
சமீபத்தில் தெரிந்த நண்பர் ஒருவரிடம் கட்செவி அஞ்சலில், "தற்போது எங்கே பணியாற்றுகிறீர்கள்?' என்று கேட்டபோது, ""வேலை போய்விட்டது. போர் அடிக்கிறது, அதுதான் கட்செவியில் உலா வருகிறேன்'' என்றார். அவர் வேலையை இழந்ததற்கு, சீனியர்களை மதிக்காதது, அவர்கள் அறிவுரைகளை அலட்சியம் செய்தது, நேரத்திற்குப் பணிக்குச் செல்லாதது, மேலதிகாரி சொன்ன வேலையை நேரத்துக்கு முடித்துக் கொடுக்காதது காரணங்களாக இருந்திருக்கின்றன. வேலை இழப்பிற்கான இத்தகைய காரணங்களில் ஆண், பெண் வேறுபாடு எதுவுமில்லை. 
இவை அனைத்தும் ஓர் இளைஞரிடமோ, இளைஞியிடமோ இருந்தால், எப்படி அவர் தொடர்ந்து தன் பணியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்? இன்றைய இளைஞர்கள் பலரிடம் அலட்சியப் போக்கு இருக்கிறது. செய்யும் பணியை பொறுப்புணர்வுடன் செய்வதில்லை. இவையெல்லாம் பெரிய குறைகள்தாம். 
கிடைத்த வேலையைத் தக்கவைத்துக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும்; வேலை நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் பணி இழப்புக்கு இவையே காரணங்களாகி விடக்கூடும். 
இளைஞர்களே நாட்டின் முதுகெலும்பு; அவர்களின் முன்னேற்றமே நாட்டின், உலகின் முன்னேற்றம் என்றும் உறுதியாக நம்பிய சுவாமி விவேகானந்தர் இளைஞர்களின் நல்வாழ்வுக்கான பல நல் வழிகளைக் காண்பித்திருக்கிறார். குறிப்பாக, "எனது சகோதரர்களே! நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டிய நேரம் இது. உறங்குவதற்கு இது நேரமில்லை. எதிர்கால இந்தியா உங்களது உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது. எழுமின்! விழிமின்!'' என்கிறார். இவரது வீரமுழக்கத்தை செவிசாய்க்கும் இளைஞர்களுக்கு, வெற்றியின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். பிறருடைய அனுபவப் பாடம்தான் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி மரம் என்பதை இளைஞர்கள் மறந்துவிடக் கூடாது!
இளைஞர்களே! உங்களது பணியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள பணிபுரியும் இடத்தில் கீழ்க்காணும் தாரக மந்திரங்களை மட்டும் கடைப்பிடித்துப் பாருங்கள், பிறகு உங்கள் பணி நிரந்தரம்தான்! 
1. பணிபுரியும் இடத்தில் இரண்டு காதுகளையும் நன்கு திறந்து வைத்துக் கொள்ளுங்கள். வாயை மூடிக்கொள்ளப் பழகுங்கள். 
2. பணி இடத்தின் சூழ்நிலை, சக ஊழியர்களின் மனநிலைக்கேற்ப உங்களைத் தகவமைத்துக் கொள்ளப் பழகுங்கள். 
3. வயதிலும், அறிவிலும் மூத்த பணியாளரை மதித்து, அவர் அறிவுரைகளைக் கேட்டு மதித்துச் செயல்படுங்கள்.
4. மேலதிகாரி "எள்' என்றால், "எண்ணெய்யாக' மாறி உங்கள் சுறுசுறுப்பையும், உழைப்பையும், ஆர்வத்தையும் வெளிப்படுத்துங்கள்! 
5. செய்யும் வேலையை பொறுப்புணர்வுடனும், ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும் செய்யுங்கள். 
6. குறித்த நேரத்திற்கு முன்பாகவே சென்று, காலம் தவறாமையை அவசியம் கடைப்பிடியுங்கள். 
7. சக ஊழியர்களை மதித்து, பணிவுடன் நடந்தால், உங்கள் முன்னேற்றம் வெளிப்படும். பணியிடத்தில், "பணியுமாம் என்றும் பெருமை' என்கிற திருக்குறளை மட்டும் மறக்காதீர்கள். 
8. முக்கியமாக, தவறு செய்திருந்தால் அவசியம் "மன்னிப்பு' கேட்கப் பழகுங்கள். 
9. உங்களைப் பற்றி குற்றம், குறை கூறுபவர்களை விட்டு விலகாமல், அவர்களை நட்புடன் அரவணைக்கப் பழகுங்கள். காரணம், அவர்கள்தான் உங்களைச் செதுக்கும் ஒப்பற்ற உளிகள் என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள்.
-இடைமருதூர் கி.மஞ்சுளா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com