Enable Javscript for better performance
காடுகளில் 11 ஆண்டுகள்...50 ஆயிரம் புகைப்படங்கள்!- Dinamani

சுடச்சுட

  
  im5

  அரசுப் பணி என்றால் நல்ல சம்பளம், பணி நிரந்தரம், குடும்பம் வறுமையின்றி வாழலாம் என பலர் அரசுப் பணிக்குச் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், பணி ஓய்வு பெற்ற பிறகு, ஓய்வூதியம் பெற்று பேரக் குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்வதையே வாழ்க்கையாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இதற்கு மாறுபட்ட வகையில் சிந்திக்கிறார் விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கே.ஜி. மோகன்குமார்.
   மனமும் உடலும் வலிமையாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே இவரது நோக்கமாக உள்ளது. இதற்காக இவர், இயற்கை, மலை, காடுகள், பறவைகள், விலங்குகளைத் தேடி படம் எடுப்பதையே தனது லட்சியமாகக் கொண்டுள்ளார். இந்த நிலையில், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பயணம் செய்து, எடுத்த பல்வேறு அரிய புகைப்படங்களை "ஒரு சாதாரண மனிதன், புலி மனிதனாக மாறுதல்' (இர்ம்ம்ஹய் ஙஹய் ஆங்ஸ்ரீர்ம்ங்ள் பண்ஞ்ங்ழ் ஙஹய்) என்ற புத்தகத்தை புகைப்படங்களுடன் வெளியிட்டார்.
   அப்போது, அவர் தன்னுடைய தேடல் குறித்து கூறியதாவது:
   "எனது சொந்த ஊர் கேரள மாநிலம் திருவனந்தபுரம். பல ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்த பின், விருதுநகரில் மின்வாரியத்தில் இளம்மின் பொறியாளராகப் பணி புரிந்தேன். கடந்த 2008 -இல் எனது மனைவி உயிரிழந்து விட்டார். அப்போது நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். இந்த தனிமையை மறக்க வேண்டும். மனமும், உடலும் வலிமை பெற வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும் என்று தீர்மானித்தேன்.
   இந்நிலையில், குற்றாலம் அருகே கும்மாரொட்டி நீர் வீழ்ச்சியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மரத்தில் பெரிய விலங்கு இருப்பதாக அங்கிருப்போர் தெரிவித்தனர். நான் மரத்தின் மீதிருந்த பெரிய காட்டு அணிலை சாதாரண கேமராவில் படம் எடுத்தேன். இந்தப் படத்தை எனது மகளின் நண்பர் நந்தினி என்பவர் ஒரு வார இதழுக்கு அனுப்பி விட்டார். அந்த படம் தான் என்னை முதன் முதலில் வெளி உலகுக்கு எடுத்துக்காட்டியது. இதைத் தொடர்ந்து இயற்கை தொடர்பான படங்கள், பறவையினங்கள், விலங்கினங்களை தேடிச் சென்று படம் எடுக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.
   இதனால், இந்தியா முழுவதும் கிராமங்கள் வழியாக ஒரு லட்சம் கி.மீ. காரில் பயணம் செய்தேன். அப்போது, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள காடுகளில் வனத்துறை அனுமதியுடன் பயணம் செய்து புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினேன். என் பயணம் தொடங்கி மூன்று ஆண்டுகள் முடிவுற்ற போதும் என்னால் புலியைப் படம் எடுக்க முடிய வில்லை.

  மத்தியபிரதேசம், பந்தேல்கர் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு புலியை முதன் முதலாகப் படம் எடுத்தேன். அதைத் தொடர்ந்து பல்வேறு பறவை இனங்கள் மற்றும் யானை உள்ளிட்ட விலங்கினங்களைப் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மேலும், ஆப்பிரிக்காவில் புலிகள் இல்லை, சிறுத்தை மற்றும் சிங்கங்கள் உள்ளன. கடந்த 11 ஆண்டுகளில் பல்வேறு காடுகளில் பயணித்து, 50 ஆயிரம் புகைப்படங்கள் எடுத்துள்ளேன்.
   தற்போது, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள செண்பக தோப்பு உள்ளிட்ட காடுகளில் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு மற்றும் பாட்டில்களால் விலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர், பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும் அதையும் மீறி சிலர் இது போன்ற தவறுகளைச் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள காடுகளில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில், நிகழாண்டு புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, காடுகள், பறவைகள், விலங்கினங்களைப் பாதுகாக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். சாதிப்பதற்கு வயது என்பது ஒரு தடை அல்ல'' என்றார் அவர்.

  -வெ.முத்துராமன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai