சுடச்சுட

  
  chair

  கை மணிக்கட்டு சக்கர நாற்காலியைக் கண்டுபிடித்த நாக்பூர் பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் அணியின் தலைவர் மந்த்ரா தோப்ரே (அமர்ந்திருப்பவர்)

  நோயாளிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் எனப் பலருக்கும் பயன்படும் வகையில் அவர்களே வேறு யாரின் துணையில்லாமல் தங்களது கை மணிக்கட்டு அசைவாலேயே இயக்கிக் கொள்ளும் வகையில் சக்கர நாற்காலியை மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகமான என்.ஐ.டி.யில் வேளாண்மை, புதுப்பிக்கத் தக்க எரிசக்தி,நவீன வாகனங்கள் உற்பத்தி, கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றில் நிலவும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குரிய ஆராய்ச்சி தொடர்பான போட்டிகள் "ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2019' என்ற தலைப்பில் நடைபெற்றன. ஜூலை 8 -ஆம் தேதி தொடங்கிய போட்டிகள் ஜூலை 12 -ஆம் தேதி நிறைவுற்றன. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 14 அணிகள் கலந்து கொண்டு தங்களது புதிய கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்தன. இப்போட்டியில் பங்கேற்ற மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ஜி.ஹெச்.ரெய்சானி பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்த கை மணிக்கட்டு அசைவு சக்கர நாற்காலியானது சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான பரிசை வென்றது.
  முதியோர்,நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பலரும் நடக்க முடியாத நிலையில் அவர்களுக்கு இருசக்கர நாற்காலிகளின் தேவை அவசியமானதாகும். இதை தங்களது கைகளாலேயே இயக்கும் அளவுக்கு உடலில் சக்தி இல்லாத நிலையில் பிறரது உதவியால் மட்டுமே சக்கர நாற்காலிகளை இயக்க முடியும். இதற்கு முடிவு கட்டும் வகையில் இக்கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.
  நாற்காலியில் இருப்பவர் மோட்டார் பொருத்தப்பட்ட கருவியை (கண்ட்ரோலர் பாக்ஸ்) வலது கை மணிக்கட்டில் பொருத்திக் கொண்டு மணிக்கட்டை எந்தப் பக்கம் அசைக்கிறாரோ அந்தப் பக்கம் சக்கர நாற்காலி திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  ப்ளூடூத் மூலமாக இணைக்கப்பட்டால் 50 மீட்டர் தூரத்தில் இருந்தும் இச்சக்கர நாற்காலியைப் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் வசதி. 
  இந்த அரிய கண்டுபிடிப்பைச் செய்த மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் ஜி.ஹெச்.ரெய்சானி பொறியியல் கல்லூரி மாணவர்களின் அணித் தலைவரான மந்தார் தோப்ரே கூறியது:
  "மருத்துவமனையில் உள்ள இருசக்கர நாற்காலிகளை நோயாளிகள் பயன்படுத்த முடியாது. பிறரது துணையோடுதான் பயன்படுத்த முடியும். இதே நிலையில்தான் முதியோர், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் இருசக்கர நாற்காலிகளும் உள்ளன.
  இச்சக்கர நாற்காலியில் நாங்கள் கண்டுபிடித்துள்ள இரு மோட்டார்களில் ஒன்றை நாற்காலிக்கு அடியிலும், மற்றொன்றை நாற்காலியில் அமர்பவரின் வலது கை அல்லது இடது கை மணிக்கட்டில் பொருத்திக் கொள்ள வேண்டும். 
  கை மணிக்கட்டின் அசைவுகளால் வேறு யாரின் துணையில்லாமலும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பவரே இயக்க முடியும். கை மணிக்கட்டை எந்தப்பக்கம் அசைக்கிறோமோ அந்தப் பக்கம் மட்டுமே நாற்காலி நகரும்.
  இதை நாற்காலியில் இருப்பவரே கையில் வைத்துக் கொண்டும் இயக்கலாம் அல்லது குடும்பத்தில் உள்ள வேறு யாரும் அவர்களது கையில் பொருத்திக் கொண்டு ப்ளூடூத் மூலம் நாற்காலியில் இருப்பவரை 50 மீட்டர் தூரம் வரை தங்களுக்கு அருகிலும் வரவழைக்க முடியும்.
  மோட்டார் பொருத்தப்பட்ட இரு கருவிகளும் அதிக எடை இல்லாதவை. இதற்கு ஆகும் செலவு ரூ.15 ஆயிரம் மட்டுமே. தற்போதுள்ள இருசக்கர நாற்காலிகளிலும் பொருத்திக் கொள்ளலாம். எங்களது இக்கண்டுபிடிப்பு சிறந்த பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் என பலருக்கும் இக்கருவி ஒரு வரப்பிரசாதமாகும்'' என்றார் அவர். 
  - சி.வ.சு. ஜெகஜோதி
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai