Enable Javscript for better performance
சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 60 - தா.நெடுஞ்செழியன்- Dinamani

சுடச்சுட

  

  சரியான பார்வை... சரியான வழி... சரியான செயல்! 60 - தா.நெடுஞ்செழியன்  

  Published on : 20th August 2019 10:21 AM  |   அ+அ அ-   |    |  

  im1

  உலகில் எங்கு அதிகமாகக் காற்று வீசுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் நன்கு ஆராய்ந்து வருகிறார்கள். கடல் மட்டத்துக்கு மேல் 260 அடி உயரத்துக்கும் மேலே காற்று மிக அதிக வேகத்தில் வீசுகிற 8 ஆயிரம் இடங்கள் உலகில் உள்ளன என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அங்கு காற்றாலைகளை நிறுவினால் நிறைய மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். குறிப்பாக கிளாஸ் - 3 வின்ட் என்று சொல்லக் கூடிய ஒரு மணி நேரத்தில் 15.4 மைல் வேகத்தில் வீசும் காற்று அதிக மின்சாரத்தை உருவாக்குகிறது. ஏறத்தாழ இது 72 டெரா வாட்ஸ் மின்சாரத்தை அதாவது 72 லட்சம் கோடி வாட்ஸ் மின்சாரத்தை உருவாக்கும். 1.2 டிரில்லியன் 60 வாட்ஸ் மின்சார பல்புகளையோ அல்லது 48 பில்லியன் பிரெட் டோஸ்டரையோ இயக்கத் தேவையான மின்சாரத்தை இதன் மூலம் உருவாக்க முடியும். 
  பூமியில் உருவாகக் கூடிய கார்பன் டை ஆக்ஸைடு வானத்தில் உள்ள ஓசோன் லேயரைத் துளையிடுவதால், சூரிய ஒளி பூமியை அதிக அளவில் தாக்குகிறது. இதனால் பூமியின் வெப்பநிலை பன்மடங்கு உயர்ந்து பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதற்கு தீர்வு காணும்விதமாக மேலை நாடுகளில் பூமியின் மேற்பரப்பில் உருவாகக் கூடிய கார்பன் டை ஆக்ஸைடை பலநூறு கிலோ மீட்டர் பூமிக்கு அடியில் உள்ளே தள்ளுகிறார்கள். இது பாறைகளைத் தாண்டி பூமிக்குள் செல்கிறது. அவ்வாறு சென்ற கார்பன் டை ஆக்ஸைடு மீண்டும் மேல்தளத்துக்கு வருவதற்கு 10 ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிடும். அதற்குள் கார்பன் டை ஆக்ஸைடு பூமிக்குள்ளேயே தங்கிவிடும். கார்பன் டை ஆக்ஸைடால் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்கும் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் மேலை நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இம்மாதிரியான கண்டுபிடிப்புகளின் தொழில்நுட்பங்களைப் பிறநாடுகளுக்கும் அளித்து உதவுகின்றன. 
  எனர்ஜி என்விரான்மென்ட் துறையில் இது போன்ற எண்ணற்ற கண்டுபிடிப்புகள், வளர்ச்சிகள் உலகின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களின் முயற்சிகளினால் கண்டுபிடிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதன்விளைவாக, மேலைநாடுகளில் உள்ள மக்கள் மாசற்ற காற்றைச் சுவாசிக்க முடிகிறது. மாசில்லாத தண்ணீரை அருந்த முடிகிறது. நலமான வாழ்க்கையை வாழ முடிகிறது. 
  ஆனால் நம்நாட்டில் சுற்றுச்சூழல் மாசடைந்துவிட்டதால், பிறந்த குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் என எல்லாரும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். உலகிலேயே மிக அதிகமான சுற்றுச்சூழல் மாசடைந்த நகரங்கள் இந்தியாவில் உள்ளன. அந்த நகரங்களில் வாழும் மக்கள் பல நோய்களினால் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். இம்மாதிரியான சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே இத்துறை சார்ந்த பட்டப்படிப்புகள் உயர் கல்வியில் மிக அதிகமாகத் தேவைப்படுகின்றன. இத்தேவைகளை உணர்ந்து அரசாங்கம் உயர் கல்வியில் இத்தகைய பாடப்பிரிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 
  ஆனால் வேலை வாய்ப்பு என்று சொல்லி கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம் என்று பெரும்பாலான மாணவர்கள் படிக்கக் கூடிய சூழலை அரசு உருவாக்கிவிட்டது. இதனால் சுற்றுச்சூழல் சார்ந்த படிப்புகளைப் பற்றிய புரிதல் மாணவர்களுக்கு இல்லை. அப்படிப்புகளின் தேவையை மாணவர்கள் உணரவில்லை. சுற்றுச்சூழல் சார்ந்த படிப்புகளைப் படித்தால் கிடைக்கக் கூடிய வேலைவாய்ப்புகள் பற்றிய அறிதலும் மாணவர்களுக்கு இல்லை. 
  பொறியியல், மருத்துவத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போல, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதில் வளர்ந்திருக்கும் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொடுக்கும் கல்வியை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். இது காலத்தின் தேவையாகும். 
  "இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்' என்ற கல்விநிறுவனம் அகமதாபாத்தில் 1961-இல் தொடங்கப்பட்டது. 
  இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1947-ஆம் ஆண்டு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பிரதமர் ஜவகர்லால் நேருவுடன் வெகு நெருக்கமாகப் பழகிய டாக்டர் விக்ரம் சாராபாய், பிலான்தெரபிஸ்ட் புரவலர் கஸ்தூரிபாய் லால்பாய், குஜராத் முதல்அமைச்சராக இருந்த ஜீவராஜ் மேத்தா போன்ற ஒரு சிலரின் முன்முயற்சிகளினாலும், மத்திய அரசு, மாநில அரசுகளினாலும், அகமதாபாத் பகுதியில் உள்ள தொழிலதிபர்களினாலும், வெளிநாடுகளில் உள்ள ஃபோர்ட் பவுன்டேஷன் மற்றும் ஹார்வர்ட் பிஸினஸ் ஸ்கூல் ஆகியவற்றின் ஒத்துழைப்பாலும் - இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் -அகமதாபாத் என்ற மேலாண்மைக் கல்விநிறுவனம் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை உலகிலேலேய ஒரு சிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனமாக அது விளங்கி வருகிறது. இதைத் தொடங்கும்போது சொசைட்டி ஆக தொடங்கப்பட்டது. 100 ஆண்டுகளானாலும் அதன் தொடக்க காலக் கட்டமைப்பு மாறாமல் இருக்க வேண்டும் என்று அப்போது மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டது. குறிப்பாக இந்த மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் நிர்வாக அமைப்பு, அரசியல் தலையீடு இல்லாமல் இருக்கும்படி கட்டமைக்கப்பட்டது. இந்த ஒரு காரணத்தினால் மட்டுமே இன்றைக்கும் இந்த கல்விநிறுவனம் உலகில் தலைசிறந்த ஒன்றாக உள்ளது. 
  இதைப் போன்று, இந்தியாவில் உள்ள பிற ஐஐடி, ஐஐஎம் கல்விநிறுவனங்களும் உலக அளவில் சிறந்த கல்விநிறுவனங்களாக இருப்பதற்கும் இந்த அரசியல்தலையீடு இல்லாத நிர்வாக அமைப்பே காரணமாகும். 
  ஐஐஎம்ஏ என்பது இந்தியாவின் முதல் மேலாண்மைக் கல்லூரியாகும். யூரோப்பியன் குவாலிட்டி இம்ப்ரூவ்மென்ட் சிஸ்டம் (EFQM) இவர்களை அங்கீகரித்துள்ளது. இந்த கல்விநிறுவனமானது மேலாண்மைத்துறையில் உயர்ந்த ஆராய்ச்சிகளைச் செய்கிறது. மேலாண்மையை தனித்தன்மையுடன் மாணவர்களுக்கு கற்றுத் தருகிறது. பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து நாலெட்ஜ் சென்ட்ரிக் (Knowledge-Centric) என்பதை உருவாக்க மிகக் கவனத்துடன் இந்தக் கல்விநிறுவனம் இந்நாள் வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் படித்த முன்னாள் மாணவர்கள், உலகின் பலதுறைகளில் பணிபுரிகிறார்கள். முடிவெடுக்கும் பல முக்கியப் பதவிகளில் இருக்கிறார்கள். அவர்கள் தனி முத்திரையை எல்லாத்துறைகளிலும் - அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் - பதித்து வருகிறார்கள். 
  இந்த மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் பகுதி நேர முதல் டைரக்டர் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சியாளர். 1961 முதல் 1965 வரை பகுதி நேர முதல் இயக்குநராக இருந்தார். தொழிலதிபரான கஸ்தூரிபாய் லால்பாய் போர்ட் ஆஃப் கவர்னரின் சேர்மனாக இருந்தார். இதில் முழுநேர முதல் டைரக்டராக ரவி ஜெ மத்தாய் 1965- 72 வரை பணியாற்றினார்.
  அன்றையச் சூழலில் அப்போது அவசியமாக இருந்த வேளாண்மை, கல்வி, மருத்துவம், கூட்டுறவு, போக்குவரத்து, பொது மேலாண்மை, ஆற்றல், மக்கள் தொகை ஆய்வு போன்ற துறைகளை நிர்வகிக்கக் கூடிய திறமையான அதிகாரிகளை உருவாக்குவதே இக்கல்வி நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக அப்போது இருந்தது. 
  இந்த கல்விநிறுவனம் உலகிலேயே சிறந்த மேலாண்மை நிறுவனமான ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலுடன் ஐந்து ஆண்டுகள் கூட்டு சேர்ந்து செயல்பட்டது. குறிப்பாக மேலாண்மைத்துறை சார்ந்த கல்வியை மாணவர்களுக்குக் கற்பிப்பதில் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் கடைப்பிடித்த சிறந்த முறைகளை இந்த நிறுவனமும் கடைப்பிடித்தது. ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலின் கற்பிக்கும் திறனை நமது நாட்டுக்கு ஏற்ப உருவாக்கி, அதனைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்றுத் தந்தது. 
  உலகின் சிறந்த கல்வி அளிக்கும் நிறுவனங்களின் தர வரிசை பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் முதலிடத்திலும், ஆசியாவில் முதல் இடத்திலும், உலக அளவில் உள்ள பலநாடுகளில் உள்ள கல்விநிறுவனங்களின் தர வரிசையில் 20 இலிருந்து 30 இடங்கள் வரையும் இக்கல்வி நிறுவனம் உள்ளது. 
  இவர்கள் சமூக வளர்ச்சிக்காக எண்ணற்ற மையங்களை உருவாக்கியுள்ளார்கள். 
  Centre for Management in Agriculture (CMA), 
  Ravi J. Matthai Centre For Educational Innovation 
  (RJMCEI),Centre For Innovation Incubation & Entrepreneurship (CIIE), Centre For E Governance, Centre for Management of Health Services (CMHS என்று பல்வேறு மையங்களை உருவாக்கி அவற்றில் எண்ணற்ற ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறார்கள். 
  தற்போது இக்கல்விநிறுவனத்தில் கீழ்க்காணும் துறைகளில் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் குழுக்களாக ஒன்றிணைந்து பணியாற்றுகிறார்கள். மேற்குறிப்பிட்ட மையங்கள் தவிர, பிசினஸ் பாலிஸி, கம்யூனிகேஷன், எகனாமிக்ஸ், ஃபினான்ஸ் அண்ட் அக்கவுண்டிங், மனித வள மேம்பாடு, இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ், மார்க்கெட்டிங், Organizational Behaviour, Production and Quantitative Methods, Public Systems Group என்று பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
  (தொடரும்)
  கட்டுரையாசிரியர்: சமூக கல்வி ஆர்வலர் 
  www.indiacollegefinder.org

  kattana sevai