Enable Javscript for better performance
மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்!- Dinamani

சுடச்சுட

  
  KUMAR

  "உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது' என்ற பழமொழியைப் பொய்யாக்கி விவசாயத்திலும் சாதிக்கலாம்; சம்பாதிக்கலாம் என்பதை உலகிற்கு உணர்த்தி வருகிறார் விவசாயி ஒருவர். 
  உத்தரபிரதேச மாநிலம், பராபங்கி மாவட்டத்திலுள்ள தவுலத்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராம்சரண்வர்மா என்ற விவசாயிதான் அந்த சாதனைக்குச் சொந்தக்காரர். 
  ராம்சரணின் குடும்பச் சூழலால் அவரால் 10 -ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை. அவரின் தந்தைக்கு உதவுவதற்காக விவசாயத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அவர் விவசாயத்தில் நுழைந்த போது அவரது தந்தை நெல்,கோதுமை, கரும்பு, கடுகு போன்றவற்றைப் பயிரிட்டு வந்துள்ளார். இவற்றின் உற்பத்தி செலவு மட்டுமல்ல, உழைப்பும் அதிகம், ஆனால் வருமானமோ மிகக் குறைவு. 
  இதனால், விவசாயத்தில் லாபம் சம்பாதிப்பதற்கான புதிய நுட்பங்களையும், வழிமுறைகளைகளையும் தெரிந்து கொள்ள விரும்பிய ராம்சரண் வர்மா, தான் சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருந்த ஐயாயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு விவசாயத்தில் சாதித்தவர்களையும், சம்பாதித்தவர்களையும் நிபுணர்களையும் சந்திக்க 1984 -ஆம் ஆண்டு புறப்பட்டார். குஜராத், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று விவசாயிகளையும், நிபுணர்களையும் சந்தித்து நுட்பங்களைக் கற்றுக் கொண்ட அவர், இரண்டு ஆண்டுகளுக்கு பின் சொந்த ஊருக்கு திரும்பி வந்து விவசாயத்தைத் தொடங்கினார். ஒரு ஏக்கர் பரப்பில் திசு வளர்ப்பு வாழைப்பழச் சாகுபடி செய்து, மாநிலத்தின் முதல் திசு வளர்ப்பு விவசாயி என்ற பெருமையையும் பெற்றார்.
  "திசு வளர்ப்பு முறையில் கன்றுகளை உற்பத்தி செய்து, நடவு செய்கையில் குறுகிய காலத்தில் அதிக மகசூலைப் பெற முடியும் என்பதுடன், பழங்களும் எந்தவித புள்ளிகளோ, கீறல்களோ, அழுகலோ இல்லாமல், பார்ப்பதற்கு பளபளப்பாகவும் ஒரே அளவுடனும் இருக்கும். அதனால், மார்க்கெட்டிலும் திசு வாழைப் பழங்களுக்குக் கிராக்கி இருப்பதுடன், அவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் கூடுதல் லாபத்தையும் ஈட்ட முடியும். ஓர் ஏக்கர் வாழைத்தோட்டத்தில் 400 குவிண்டால் வாழைப்பழங்கள் கிடைத்தன. அதனால் தனக்கு 4 மடங்கு லாபம் கிடைத்தது'' என்கிறார். 
  திசு வளர்ப்பு முறையில் வெற்றி கண்ட அவர், அடுத்ததாக, பயிர் சுழற்சி நுட்பத்தை மேற்கொண்டார். தொடர்ச்சியான பருவங்களில் ஒரே பகுதியில் வெவ்வேறு வகையான பயிர்களை வளர்க்கும் நுட்பமே அது. வாழைத்தாரை அறுத்து விற்பனைக்குக் கொண்டு சென்ற பிறகு, உருளைக்கிழங்கையும், அதன் பின் கலப்பின தக்காளியையும், தொடர்ந்து புதினாவையும் வளர்த்துள்ளார். இந்த சுழற்சி முறை மூலம் விளைச்சல் அதிகரித்து வருமானமும் பெருகியதாகக் கூறுகிறார் ராம்சரண். 
  இந்த பயிர் சுழற்சிமுறை மூலம் ஒரு பயிருக்கு விலை கிடைக்காவிட்டால் அடுத்த பயிருக்கு கூடுதல் லாபம் கிடைத்து விடும். அதனால் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்காது என்று கூறும் அவர், விவசாயிகளுக்கு தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகளையும் அளித்து வருகிறார். 1986 -ஆம் ஆண்டில் 1 ஏக்கர் நிலத்தில் தொடங்கி இன்று பல நூறு ஏக்கரில் விவசாயம் செய்யும் அளவிற்கு உயர்ந்து விட்ட அவரைத் தேடி , வேலை வேண்டி ஏராளமான நகர மக்கள் வருகை தருகின்றனர். 
  "எங்களது பண்ணையைப் பார்வையிட பல ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்கின்றனர். எனது கிராமத்து மக்கள் வேலை தேடி நகரங்களுக்குச் செல்வது நின்று விட்டது. நகரத்திலிருந்துதான் இப்போது வேலை தேடி எங்கள் கிராமத்துக்கு வருகின்றனர்'' என பெருமிதத்துடன் சொல்லும் அவர் விவசாயிகளுக்காக http://www.vermaagri.com/ என்ற இணையதளத்தையும் உருவாக்கி பல்வேறு தகவல்களைப் பதிவிட்டு வருகிறார். அவருக்கு ஜக்ஜீவன் ராம் கிசான் புரஸ்கார், பத்ம விருதுகள் உள்ளிட்ட விருதுகள் கிடைத்துள்ளன. 
  அந்தந்தப் பகுதிகளின் கால நிலைகளைப் புரிந்து கொண்டு பயிர் சுழற்சி முறையைப் பயன்படுத்தி விவசாயம் செய்தால் விவசாயிகள் பெருமளவு லாபம் ஈட்ட முடியும் என்பதே அவரின் உறுதியான நிலைப்பாடு. 
  ராம்சரண் போல் விவசாய நுட்பங்களைப் பயன்படுத்தினால் நம்மூர் விவசாயிகளும் அறுவடை செய்யும்போது தலை குனிய வேண்டியதைத் தவிர, மற்ற எதற்காகவும் தலை குனிய வேண்டிய நிலை ஏற்படாது என்பதே உண்மை.


  வி.குமாரமுருகன் 


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai