தண்ணீரைத் தூய்மையாக்கும் கருவி!

கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா தவிர, பாலைவனம் அதிகம் உள்ள ராஜஸ்தான் என பல மாநிலங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் துன்பத்துக்குள்ளாகி இருக்கிறார்கள்
தண்ணீரைத் தூய்மையாக்கும் கருவி!

கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா தவிர, பாலைவனம் அதிகம் உள்ள ராஜஸ்தான் என பல மாநிலங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் துன்பத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். என்றாலும் இவ்வளவு தண்ணீரையும் நம்மால் பாதுகாக்க முடிவதில்லை. வெள்ளம் வடிந்த பின்பு, குடிநீருக்கே பஞ்சம் வந்துவிடுகிறது. குடிநீருக்காக மக்கள் தவியாய்த் தவிக்கும்படி ஆகிவிடுகிறது. 
பொறியியலில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர் ஒருவர் தண்ணீரை மிச்சப்படுத்தும் ஒரு கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார். அந்தக் கருவி குளிக்கும், துவைக்கும் தண்ணீரை எல்லாம் மறுசுழற்சி செய்து தூய்மையாக்கி மீண்டும் பயன்படுத்த உதவுகிறது. அந்தக் கருவி இயங்க மின்சாரம், பேட்டரி என்று எதுவும் தேவையில்லை. அதைக் கண்டுபிடித்தவர் ஜிதேந்திர சிங் செளத்ரி. 
மத்தியபிரதேசம் ரத்லம் அருகே உள்ள கிராமத்தில் பிறந்த அவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 2017-இல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றார். ஆராய்ச்சிப் படிப்பு படிக்க ஆர்வம் அதிகமாக இருந்ததால் உஜ்ஜையினில் உள்ள எம்.ஐ.டி.(Mahakal Institute of Technology)- இல் விண்ணப்பித்தார். ஆனால் ஆராய்ச்சி செய்வது பற்றி எந்த முன்யோசனையும் அவருக்கு இல்லை. 
எந்தத்துறையில் ஆராய்ச்சி செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த அவர், ஒருமுறை ராஜஸ்தானுக்குச் சென்றார். அங்கு பெண்கள் குளித்த, துவைத்த தண்ணீரை வாளிகளில் பிடித்து வைத்து மறுபடியும் பயன்படுத்துவதைப் பார்த்ததும் "பளிச்' சென்று அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. 
குளித்த, துவைத்த தண்ணீரைத் தூய்மைப்படுத்தும் கருவியை உருவாக்கினால் என்ன என்ற யோசனையே அது. அதற்குப் பிறகு நான்கரை ஆண்டுகள் கடும் உழைப்பிற்குப் பிறகு, பல மாறுதல்களுக்குப் பிறகு அவர் அந்தக் கருவியை வெளியிட்டார்.
"நான் உருவாக்கியிருக்கும் இருக்கும் இந்தக் கருவியை இயக்க மின்சாரம் தேவையில்லை. எனவே மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கே சிரமப்படும் மக்களும் இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம். இந்தக் கருவி புவி ஈர்ப்புவிசையின் அடிப்படையில் இயங்குகிறது. குளித்து, துவைத்து வெளிவரும் நீரை இந்தக் கருவிக்குள் விட வேண்டும். கருவியில் பல அடுக்குகளாக துகள்கள் நிரப்பப்பட்டுள்ளன. அவற்றின் வழியாகத் தண்ணீர் செல்லும் போது அதிலுள்ள அழுக்குகள் வடிகட்டப்படுகின்றன. வடிகட்டப்பட்டு அழுக்கில்லாமல் ஆன தண்ணீரை மேலும் தூய்மையாக்க இதற்கென தயாரிக்கப்பட்ட கார்பனின் வழியாகச் செலுத்த வேண்டும். இவ்வாறு தூய்மையாகி கருவியிலிருந்து வெளிவரும் தண்ணீரை குடிதண்ணீராகப் பயன்படுத்த முடியாது. மற்றபடி, தோட்டத்துக்குப் பாய்ச்சலாம்; குளிக்கலாம்; துவைக்கலாம்; டாய்லட்டுக்குப் பயன்படுத்தலாம். இந்தக் கருவியின் பெயர் சுத்தம் (Shuddham).
இது பல ஆய்வுக்கூடங்களில் இந்தக் கருவி சோதிக்கப்பட்டுவிட்டது. நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்தக் கருவியின் மூலம் ஒருநாளைக்கு 500 லிட்டர் தண்ணீரை தூய்மையாக்கலாம். இதன் விலை ரூ.7,400. ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது 50 ஆயிரம் லிட்டர் தண்ணீரைத் தூய்மைப்படுத்திய பிறகோ, இந்தக் கருவியில் உள்ள "தண்ணீரை வடிகட்டி தூய்மையாக்கும் துகள்'களை மாற்ற வேண்டும். மற்றபடி பெரிய செலவு எதுவுமில்லை'' என்கிறார் ஜிதேந்திர சிங் செளத்ரி. 
பெங்களூருவில் உள்ள அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய "நேஷனல் சோஷியல் எண்டர்பிரைஸ் ஐடியா சேலஞ்' போட்டியில் இவரது கருவி முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது.
- ந.ஜீவா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com