"மகிழ்ச்சி'க்காக ஒரு படிப்பு!

இன்றைய சமூகத்தில் கல்லூரிப் பருவத்தை முடித்து பணிக்குச் செல்லும் இளையோர் அனைவரும் மனஅழுத்தம் மிக்கவர்களாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
"மகிழ்ச்சி'க்காக ஒரு படிப்பு!

இன்றைய சமூகத்தில் கல்லூரிப் பருவத்தை முடித்து பணிக்குச் செல்லும் இளையோர் அனைவரும் மனஅழுத்தம் மிக்கவர்களாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகரித்து வரும் கல்வி அழுத்தம், கூடுதல் வேலை நேரம், உட்கார்ந்தே பணியாற்றும் வாழ்க்கை முறை, ஒவ்வொரு நாளும் எலி பந்தயத்தைப் போல ஓடிக்கொண்டிருப்பது போன்றவற்றால், மனச்சோர்வையும், மன அழுத்தத்தையும் ஒருங்கே கொண்டவர்களாக அவர்கள் இருப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை.
ஆனால், இந்தப் பிரச்னைக்கு தில்லி பல்கலைக்கழகம் ஒரு தீர்வைக் கண்டறிந்துள்ளது. தெற்கு தில்லியில் அமைந்துள்ள தில்லி பல்கலைக்கழகத்தின் ராமானுஜன் கல்லூரியின் ஸ்கூல் ஆஃப் ஹேப்பினெஸ் துறை, மாணவர்களிடையே ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக, இந்த ஆண்டு "மகிழ்ச்சி' (course on happiness) என்ற 6 மாத சான்றிதழ் படிப்பை முதன்முதலாகத் தொடங்கியுள்ளது. யோகா மற்றும் தியானம், சமூக சேவை, ஆளுமை மேம்பாடு, தொடர்புத் திறன், மகிழ்ச்சிக்கான வாழ்க்கைத் திறன்கள், வேதங்களின் பார்வை மற்றும் ஆன்மிகம் என 6 பகுதிகளை இந்தப் படிப்பு உள்ளடக்கியுள்ளது. 
இதுகுறித்து ராமானுஜன் கல்லூரியின் முதல்வர் எஸ்.பி. அகர்வால் கூறுகையில், "மகிழ்ச்சி தொடர்பான சவால்கள் பள்ளி மற்றும் கல்லூரி மட்டத்தில் வேறுபட்டவை. மாணவர்கள் தங்கள் அன்றாட மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் சமாளிக்க ஒரு தீர்வை வழங்குவதே மகிழ்ச்சி பாடத்திட்டத்தின் நோக்கம்'' என்றார்.
பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர் நிதி மாத்துர் கூறுகையில், " போட்டி அதிகரித்ததன் காரணமாக பெரும்பாலான மாணவர்கள் தவறான செயல்கள், கோபம் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். மன அழுத்தம் என்பது மகிழ்ச்சி பற்றாக்குறையின் முக்கிய காரணி. எதிர்கால வேலைச் சூழல்களுக்கு ஏற்ப, மாணவர்களைத் தயார்படுத்தும் அடிப்படையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது'' என்றார்.
கடந்த ஆகஸ்ட் 5 - ஆம் தேதி கல்லூரியில் நடைபெற்ற பாடத்திட்டம் குறித்த விளக்க நிகழ்ச்சியின்போது, மாணவர்களுக்கு சஹஜ் யோகா (Sahaj Yoga), மன்னிப்பு (forgiveness), இளகிய மனம்(loving heart), பாராட்டும் மனது (appreciating mind), நன்றியுணர்வு (gratitude) குறித்து கற்பிக்கப்பட்டது. புகழ்பெற்ற உளவியலாளர்களைக் கொண்ட குழு விவாதமும் நடைபெற்றது.
இந்த 6 மாத பாடத்திட்டத்தின் நிறைவாக அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், பாடத்திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 4 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆஸ்திரியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் தொழில்முனைவோர் பள்ளியான இன்ஸ்ப்ரூக் மேலாண்மை மையத்திற்கு (எம்.சி.ஐ) உயர் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள். மேலும் இருவர் கலாசார பரிமாற்ற திட்டத்தின் கீழ் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கும். பாடத்திட்டத்தில் பயிலவும், பரிமாற்றத் திட்டத்தில் பயிற்சி பெறவும் கட்டணம் இல்லை.
இந்த கோர்ஸ் தொடங்கப்பட்ட நிகழாண்டிலேயே 150 மாணவர்கள் விண்ணப்பித்தனர். நேர்காணலுக்கு வந்த மாணவர்கள் "மகிழ்ச்சி' குறித்து கூறிய கருத்துகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு, 45 மாணவர்கள் இந்த கோர்ஸுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். செவ்வாய், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் காலை 8மணி முதல் 9மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
ஒவ்வோர் ஆண்டும், ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் பள்ளியின் 400-க்கும் அதிகமான ஆசிரிய உறுப்பினர்கள், உலகம் முழுவதுமுள்ள 1,000-க்கும் மேற்பட்ட முழுநேர மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். 1913 -இல் நிறுவப்பட்ட இந்த பள்ளி, பொது சுகாதாரத்தில் அமெரிக்காவின் பழமையான தொழில்முறை பயிற்சித் திட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 
இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 2016 - இல் தொடங்கப்பட்ட "உடல்நலம் மற்றும் மகிழ்ச்சித் துறை'யின் தாக்கத்தால் இந்த கோர்ûஸத் தொடங்கியுள்ளது ராமானுஜன் கல்லூரி, இதுகுறித்த ஆராய்ச்சி மற்றும் பாடத்திட்டங்களை மேம்படுத்த அந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுகிறது.
இரா.மகாதேவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com