மனங்கொத்தி மாணவர்கள்!

அப்பாவித்தனமாக இருப்பது மனதுக்கு மட்டுமே நல்லது; மூளைக்கு அது நல்லதல்ல" - அனடோல் பிரான்ஸ்.
மனங்கொத்தி மாணவர்கள்!

அப்பாவித்தனமாக இருப்பது மனதுக்கு மட்டுமே நல்லது; மூளைக்கு அது நல்லதல்ல" - அனடோல் பிரான்ஸ்.
 தூக்கம் கலைந்து ஒவ்வொரு நாள் காலையும் படுக்கையில் இருந்து எழுவதற்கு, சமயங்களில் ஏதாவது காரணங்கள் கிடைக்கும். அன்று என்னைப் படுக்கையிலிருந்து எழச் செய்தது. மரத்தை ஒரு பெரிய சுத்தியல் கொண்டு அடிக்கின்றதை போன்ற ஒரு சத்தம். கண் விழித்து, படுக்கையின் அருகில் இருந்த சாளரம் வழியாகப் பார்த்தால், எப்பொழுதும் தென்படக்கூடிய தென்னை மரத்தில், ஜோடிகளாக மரங்கொத்திகள் இரண்டு வரிசையாக, மரத்தின் உச்சிக்கு மேலேறி நடந்து கொண்டே, அங்கங்கே நின்று மரத்தை கொத்திப் பார்த்தது; ஆய்வு செய்தது. பிறகு மீண்டும் மேலே ஏறியது. அது வழக்கமான விடியல் அல்ல.
 ஒவ்வொரு விடியலின் போதும் உயிரோடு இருக்கிறோம்; ஆரோக்கியமாகவே விழித்திருக்கிறோம் என்கிற உண்மையே, ஒவ்வொருவருக்கும் வெற்றிப்படிகளில் பயணித்து, சாதித்து வாழ்வதற்கான முதல் தகுதியும், வாய்ப்பும் ஆகும். அன்று என் விடியலைப் பிரகாசமாகத் தொடங்க உதவிய அந்த மரங்கொத்திகளின் சராசரி எடை என்ன தெரியுமா? வெறும் 20 கிராமிலிருந்து 300 கிராம் மட்டுமே. அவை, தங்களது வசிப்பிடத்தை அமைக்க, உணவைச் சேமிக்க, பெருத்த மரங்களில் கூட துளையிடத் துணிவது, அவற்றின் அந்த எடைக்குள் உள்ளடங்கிய அலகுகளை நம்பித்தான். அவற்றின் எடை பார்த்தோம்... அளவு? மிக கூடுதல் பட்சமாக 25 செ.மீட்டரிலிருந்து 30 செ.மீட்டருக்குள்ளாகவே இருக்கிறது. சமயங்களில் இரண்டு, மூன்று நிமிடங்களுக்குள் ஏறக்குறைய 2500 முறைகளுக்கும் மேல் மரத்தில் துளையிடக் கொத்துகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 12,000 தடவை மரம் கொத்தும் பணியை, அயர்ச்சியின்றி செய்கிறது, அதன் பணி முடியும்வரை.
 இந்தியக் குடிமைப் பணி (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பதவிகளை உள்ளடக்கிய) தேர்வுகளுக்கு தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டிருப்பவர்கள் அல்லது வெற்றி பெற்றவர்கள் சிலருடன் நாம் பேசினால், ஒருவர் "தினந்தோறும் பதினைந்து மணி நேரம் படிக்கவேண்டும் என்பார்; மற்றொருவர் "சராசரியாக ஐந்திலிருந்து எட்டுமணி நேரம்வரை படித்தால் போதும் என்பார். அடுத்தவரோ,""இல்லங்க... குறைஞ்சது... டெய்லி பத்து மணி நேரமாவது புத்தகத்தோடு இருக்கணும்ங்க'' என்பார். ஒரு குறிப்பிட்ட தேர்வுக்குப் படித்தவர்களின் நேரக் கணக்கில் ஏன் இந்த வேறுபாடு என்று நமக்கு ஒரு குழப்பம் ஏற்படலாம். இவர்கள் கூறும் - கூறிய நேரக்கணக்கு "சிவில் சர்வீஸ்' தேர்வுகளுக்கு மட்டுமல்ல... எந்தவொரு தேர்வுக்குமே நிலையானது, பொதுவானது என்று கூறி விட முடியாது.
 ஏனென்றால், பத்து மணி நேரம் மட்டும் அல்லது பதினைந்து மணி நேரம் படித்த எல்லோரும் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதேவேளையில், தினந்தோறும் ஐந்து மணி நேரம் மட்டும் படித்தவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சி பெறாமலும் போயிருக்கிறார்கள். இங்கு படிக்கின்ற நேர அளவை விட, படிக்கும்போது செலுத்துகின்ற கவனத்தின் அளவு பிரதானமாகிவிடுகிறது.
 "கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது' என்கிற சொலவடைக்கு ஏற்பவும், "மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது' என்கிற சொலவடைக்கு ஏற்பவும், "விடா முயற்சி.... வெற்றியைத் தரும்' என்கிற நம்பிக்கை மொழிக்கு ஏற்பவும், இங்கு நேரத்தின் அளவை விடக் கவனத்தின் அளவும், தளராத தொடர் வினையுமே தேர்ச்சிக்கான, வெற்றிக்கான முக்கிய படிகள் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.
 பாறைகளை அல்லது மலைகளை உடைப்பதற்கு, குடைவதற்கு இன்று பல்வேறு இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. வெடிகளை வெடிக்கச் செய்தும் பாறைகள் உடைக்கப்படுகின்றன. இருந்தாலும் உளி கொண்டு கல்லையும், பாறைகளையும் பிளக்கின்ற தொழிலும், தொழிலாளிகளும் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். அதில் கிடைக்கின்ற நேர்த்தி, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி செய்யப்படுபவற்றைக் காட்டிலும் அதிக அழகியலோடும், உயிர்ப்போடும் இருப்பது ஒரு காரணம்.
 வேலையோ, கடின உழைப்போ சாபமல்ல; அது மனித மாண்பை வெளிபடுத்தக் கிடைத்திருக்கின்ற ஒரு வாய்ப்பு. எப்படி, ஒரு மரங்கொத்திப் பறவை அதன் சிறிய உடல் தாங்கும் அலகால் பெரிய மரங்களில் கூட துளையிடத் துணிகிறதோ, உழைக்கின்றதோ... அப்படியேதான் ஒரு கல் உடைப்பவரும் சிறு உளி கொண்டு உழைக்கின்றார். உளி கொண்டு பாறைகளைப் பிளக்க அவர் சுத்தியலால் அடிக்கின்ற ஒவ்வோர் அடியிலும் கண்ணுக்குத் தென்படாத கீறல் பாறைக்குள் பயணிக்கிறது. உளியின் நூற்றி ஒன்றாவது அடியில் பாறை பிளக்கின்றது என்றால், அதற்கு உளியின் அந்த கடைசி அடிமட்டும் காரணம் அல்ல. அதற்கு முன்னே சென்ற அனைத்து அடிகளும் காரணம்.
 பள்ளி, கல்லூரி நாட்களில் புத்திசாலிகளாக ஜொலித்த மாணவர்கள் மட்டுமே போட்டித் தேர்வுகளில் ஜொலிக்கின்றார்கள் என்பதில்லை. ஆங்கிலவழிக் கல்வியில் படித்த மாணவர்கள் மட்டுமே தேர்ச்சியடைகிறார்கள் என்றில்லை. பணத்தோடு, உயரமான நல்ல உருவத்தோடு இருக்கும் மாணவர்கள் மட்டுமே ஜெயிக்கின்றார்கள் என்பதும் இல்லை. எப்படி "மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது' என்பதை மெய்ப்பிக்கும் விதமாக மரங்கொத்தி பறவைகளும், பாறைகளைப் பிளப்பவர்களின் கையில் இருக்கும் உளிகளும் நமக்குப் பாடங்களாக விளங்குகிறதோ அப்படிதான் போட்டித்தேர்வுக்கான மாணவர்களின் மன உறுதியும் இருக்க வேண்டும்.
 மரங்கொத்தியின் மனத்திட்பத்தைப் புரிந்து கொண்டீர்களா மாணவர்களே... என்ன, அந்தப் பறவையின் மரம் கொத்தும் சத்தம் கேட்கிறதா?
 கே.பி. மாரிக்குமார்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com