Enable Javscript for better performance
ஓட்டம்...கண்களைக் கட்டிக் கொண்டு!- Dinamani

சுடச்சுட

  

  ஓட்டம்...கண்களைக் கட்டிக் கொண்டு!

  By DIN  |   Published on : 03rd December 2019 01:13 PM  |   அ+அ அ-   |  

  im6

  சாதனைகளை நிகழ்த்துவதற்கு விடா முயற்சி, சளைக்காத மனம், ஆர்வம், தன்னம்பிக்கை ஆகியவை வேண்டும். வித்தியாசமான பல சாதனைகளைச் செய்ய பலர் முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள். இந்நிலையில் கண்களைக் கட்டிக் கொண்டு 5 கி.மீ.தூரம் ஓடி உலக சாதனை செய்துள்ளார் ஓர் இளைஞர். 
  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி எஸ்.கொடிகுளத்தைச் சேர்ந்த 26 வயதேயான இளைஞர் மணி முத்து, திண்டுக்கல் மாவட்டம் பழனி பட்டாலியனில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த நவம்பர் 17 - ஆம் தேதி கண்களைக் கட்டிக்கொண்டு , காலில் செருப்பு அணியாமல் 5 கி.மீ., தூரம் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.
  இச்சாதனை குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
  "நான் 6 வயதில் சிலம்பம் கற்கத்தொடங்கினேன். 11 ஆவது வயதில் சிலம்பத்தில் உள்ள அடிமுறைகளைக் கற்றுக்கொண்டேன். பின்னர் இந்த சிலம்பத்தில் ஏதாவது வித்தியாசமான சாதனை நிகழ்த்த வேண்டும் என எண்ணி, கண்களைக் கட்டிக்கொண்டு சிலம்பம் ஆடினேன். இதனைப் பலரும் பாராட்டினார்கள். மேலும் உலக சாதனை செய்ய வேண்டும் என கண்களைக் கட்டிக்கொண்டு சாலையில் ஓட பயிற்சி பெற்றேன். 
  கூமாபட்டி- வத்திராயிருப்பு சாலையில் எனது விடுமுறை நாள்களில் நண்பர்களின் துணையோடு பயிற்சி பெற்றேன். பயிற்சியின் போது, பல நேரங்களில் கீழே விழுந்துள்ளேன். பல சமயம் எதிரில் வரும் பைக்கின் மீது மோதி காயமடைந்தேன். எனினும் சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கீழே விழுந்து காயமடைந்தாலும், சிகிச்சை பெற்று விட்டு, மீண்டும் ஓடும் பயிற்சியில் ஈடுபட்டேன். இப்படியாக சுமார் 6 மாத காலம் பயிற்சி பெற்றேன்.
  தொடந்து மழைநீர் சேமிப்பை வலியுறுத்தியும், விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், கண்களைக் கட்டிக்கொண்டு ஓடத் தொடங்கினேன். 
  பின்னர் உலக சாதனை நிகழ்த்துவதற்கு நான் பயிற்சி பெற்ற சாலையில் ஓடுவதற்கு காவல் துறையினரிடம் அனுமதி கேட்டேன். ஆனால் காவல் துறை அந்த சாலையில் ஓடுவதற்கு என்னை அனுமதிக்கவில்லை. வத்திராயிருப்பு-அழகாபுரி சாலையில் ஓடுவதற்கு காவல் துறையினர் அனுமதியளித்தனர். 
  நான் பயிற்சி பெற்ற சாலை என்றால் எந்த இடத்தில் வாகனப் போக்குவரத்து அதிகம் இருக்கும். எந்த இடத்தில் மேடு பள்ளங்கள் இருக்கும் என எனக்குத் தெரியும். புதிய வழித்தடத்தில் ஓடுவதற்கு முதலில் சற்று தயங்கினேன். எனினும் ஓடினால் வெற்றி பெற்று எந்த சாலையாக இருந்தாலும் சாதனை படைக்கலாம் என என்னை நானே உற்சாகப்படுத்திக்கொண்டு ஓடுவதற்கு ஆயத்தமானேன்.
  இதனை உலக சாதனையாகப் பதிவு செய்வற்கு உத்தரப்பிரசேத மாநிலம் லக்னௌவிலிருந்து நோபல் வேர்ல்டு ரெக்கார்டைச் சேர்ந்த ஜெயபிரதாப் மற்றும் வினோ ஆகியோர் வந்திருந்தார்கள்.
  அச்சாலையில் 5 கி.மீ., தொலைவினை 20 நிமிடம் 12 வினாடிகளில் ஓடி சாதனை படைத்தேன். இதனை நோபல் வேர்ல்டு ரெக்கார்டாகப் பதிவு செய்து, எனக்கு அதற்கான சான்றிதழை வழங்கினார்கள். அப்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பயிற்சியின் போது ஏற்பட்ட காயங்கள் மறைந்து போயின. இதுவரை உலக அளவில் இந்தச் சாதனையை யாரும் செய்யவில்லை. இந்த சாதனைக்கு எனக்கு அடித்தளமாக இருந்தது சிலம்பம் தான். 
  நான் இப்பகுதியில் உள்ள இளஞர்கள் சிலருக்கு சிலம்பம் பயற்சி அளித்துள்ளேன். 
  இப்போது அவர்கள் எனது வழிகாட்டுதலின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இலவசமாகப் பலருக்கு சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறார்கள். நான் விடுமுறை நாள்களில் வந்து இந்த பயிற்சிகளைப் பார்வையிடுவேன்.
  மேலும் ஒரே சமயத்தில் நீச்சலடித்து, சைக்கிள் ஓட்டி, தரையில் ஓடும் விளையாட்டான "டிரையத்தலான்' (Triathlon) என்ற விளையாட்டில் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளேன்'' என்றார் மணி முத்து.
  ச. பாலசுந்தரராஜ் 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai